ஹாங்காங்கில் மகர ஜோதி !!
ஹாங்காங்கில் நடுக்காட்டில் நடு இரவில் மாட்டிக் கொண்ட கதை சில வாரங்களுக்கு முன் பகிர்ந்திருந்தேன்.
எப்படி தொலைந்து போனோம் எந்த இடத்தில் வழி மாறினோம் என்பதைப் பார்க்க மீண்டும் அதே இடத்திற்கு ஒரு முறை சென்றோம். கண்டுபிடிக்க முடியவில்லை.
அடுத்த வாரமும் அதே இடம் சென்று ஒரு வழியாக தொலைந்த வழியைக் கண்டு பிடித்து விட்டோம். திடீரென்று பேராசிரியிடம் கேட்டேன்… வரும் மகர ஜோதியன்று ஐயப்பன் படத்தை கொண்டு வந்து இந்த மலை மீது வைத்து பூஜை செய்தால் என்ன ??
ஏற்கனவே தொலைந்து போன அன்று மும்பையிலிருந்து பால்கி வீடியோ காலில் இந்த மலை பார்ப்பதற்கு காந்த மலை போலவே இருக்கு. பேசாம ஐயப்பனை அங்க கொண்டு போ என்று சொன்னது என்னைத் தூண்டியதா தெரியவில்லை.
பேராசிரியருக்கு ஒரே சந்தோஷம். கொண்டு வந்து எதாவது நைவேத்யம் பண்ணி சாமி கும்பிடுவோம் என்று சொல்லி விட்டார்.
இந்த விஷயத்தை எங்கள் குருசாமி குருநாதனிடம் சொல்லி எப்படி செய்வது என்று கேட்கலாம் என்று மலை இறங்கியதும் குறுஞ்செய்தி அனுப்பினேன். அத்துவான காட்டில் எந்த வசதியும் இல்லாத இடத்தில் அதிலும் கரடு முரடான கொஞ்சம் ஆபத்தான மலையில் பக்தர்களை ஏற்றி எல்லா பூஜை விஷயங்களையும் சுமந்து கொண்டு வந்து தேவையா என்று கேட்பார் என்று ஒரு பக்கம் நினைக்க, ஆனால் இன்னொரு பக்காம் குருசாமி என்ன சொன்னாலும் சரி நாம் இங்கு மகர ஜோதி அன்று பூஜை செய்தேஆக வேண்டும் என்று மனதில் ஒரு வைராக்கியம் இருந்தது.
ஆனால் குருசாமியிடமிருந்து பதில் வந்தது. “இந்த மலைப் பயண மகர ஜோதி பூஜையில் என்னை இணைத்துக் கொள்ளுங்கள். இந்த ஏற்பாட்டை செய்ய சுவாமி உங்களுக்கு மறைமுகமாக கட்டளையிடுகிறான் என்று நினைக்கிறேன்.”
பதில் பார்த்ததும் ஒரு பரவசம். இனம் தெரியாத குதூகலம்.
இது வரை ஹாங்காங்கில் எனக்குத் தெரிந்து கோவிலில் தான் ஐயப்பன் பூஜை நடந்துள்ளது. வெளியே இது போல மலை மேல் நடந்ததேயில்லை.
மளமளவென்று ஏற்பாடுகள் தயாரானது.
இதற்கென ஒரு வாட்சப் குழுவை உருவாக்கினோம். அதில் யார் யார் வருகிறார்கள் என்று பதிவிடலாம் என்று கேட்டோம். பத்து பேர் வந்தால் பெரிய விஷயம் என்று தான் நினைத்திருந்தோம்.
ஏனெனில் இந்த மலை ஏறுவதற்கு பயிற்சி இல்லாதவர்களுக்கு கொஞ்சம் சிரமமான விஷயம் தான். இதில் நண்பரின் மனைவி கலை அருண் கடைசி நாள் வரை, வருவதற்கு ஆசை தான் ஆனால் சிரமம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பலர் இது போல மலைப்பயணம் செய்து பூஜை செய்ய வேண்டுமா எங்களால் முடியாதே என்ன செய்வது என்று கடிந்தும் கொண்டார்கள்.
நண்பர் சுந்தர் பதினெட்டாம் படி செய்கிறேன் என்று வேலையை துவங்கினார்.
சுதா ரவி பெண்கள் குழு அமைத்து பிரசாதம் நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் வாட்சப் குழுவில் ஐம்பது பேர் வரை இணைந்தார்கள்.
மலை ஏறுவது சிலருக்கு பிரச்சினை என்றால் அதிகாலை எழுவது பலருக்கு பிரச்சினை. மேலும் அங்கு என்ன எதிர்பார்ப்பது என்று யாருக்கும் ஒரு யோசனையே இல்லை.
ஏற்பாட்டாளர்கள் எங்களுக்கே இல்லை. என்ன செய்ய முதல் முறை.
மலையடிவாரம் நகரத்திலிருந்து மெட்ரோ வசதியில்லாத இடத்தில் இருப்பதால் கார் இருப்பவர்கள் அனைவரும் இணைந்து எல்லோரையும் கூட்டிச் செல்வது என்று அதற்கு ஒரு வாட்சப் குழு அமைத்தோம்.
பூ வாங்க, கோவிலில் இருந்து சுவாமியை வைக்க மேடை, அபிஷேக பொருட்கள் பூஜை சாமான்கள், இதர விக்கிரஹங்கள் என்று ஒரு பட்டியல் தயாரானது.
ஐயப்பன் விக்ரஹம் இந்தியாவில் இருந்த சுரேஷ் நான் கொண்டு வருகிறேன் என்று வாங்கி வந்தார். விளக்கு ஏற்றினால் அணையாமல் இருக்க ஒரு கூண்டு வேண்டும் என்றதும் அதுவும் சடுதியில் ஏற்பாடானது.
மலை ஏறுவதற்கு ஒரு வாரம் முன்பு கிரிக்கெட்டில் பிட்ச் ரிப்போர்ட் தயாரிப்பது போல குருசாமியை அழைத்துக் கொண்டு மலையேற்றி அந்த இடத்தை காட்டினோம்.
ஒரு பக்கம் அருவியும், இன்னொரு பக்கம் பொன்னம்பல மேடு போல தோன்றும் மலை முகடும், அருவியின் ரீங்கார ஓசையும் குருசாமியையும் பரவசப்படுத்தியது. ஒரு தெய்வீக சூழல் அந்த இடத்தில் இருந்ததை உணர முடிந்தது. ஹாங்காங் நண்பர்களுக்கு வாட்சப்பில் பிட்ச் ரிப்போர்ட் அனுப்பினோம்.
இறுதியாக 14ந்தேதி. மகர ஜோதியன்று ஏழு மணிக்கு மலையேற துவங்க வேண்டும் என்பது திட்டம்.
ஆனால் 13ந்தேதி வரை மழை பெய்யும் என்று யாருமே எதிர்பார்க்காத ஒரு வானிலை மாற்றம். இரவு எட்டு மணிக்கு சதீஷ் என்ற நண்பர் அழைத்தார். மழை பெய்யுது நாளைக்கு எப்படி போக முடியுமா என்றார்.
கவலையை விடுங்கள் அதெல்லாம் ஐயப்பன் கவலை அவன் பார்த்துக் கொள்வான்.நாம் போறோம் என்றேன்.
இந்த வாரம் முழுக்க வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மழை லேசாக பெய்து கொண்டே இருந்தது. மலையேறும் பாதை படு வழுக்கலாக இருக்கும் என்பதும் தெரியும்.
வேறு வழியில்லை. மகர ஜோதி பூஜை முடிவாகி விட்டது. இனி அவன் பொறுப்பு.
மகர ஜோதி தினத்தன்று இறுதி எண்ணிக்கை 36 பேர்.
இதில் முதல் ஆளாக நின்றிருந்தது முதல் நாள் இரவு வரை என்னால் வர முடியாது என்று சொன்ன நண்பர் கலை அருண். அவருக்கு என்ன தோன்றியதோ இப்படி ஒரு பூஜையை தவற விட எனக்கு மனமில்லை. என்ன ஆனாலும் ஏறுவது என்று வந்து விட்டேன் என்றார். முதல் முறையாக மலையேறுகிறார். (முதல் ஆளாக ஏறினார் என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம்)
ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் வேகத்தில் இம் துங் சாய் என்று சொல்லப்படும் அந்த நீர்வீழ்ச்சி மலையை ஏறி முடிக்கும் போது பத்து மணி ஆகியிருந்தது.
அதற்குப் பின் சுந்தர் உதவியுடன் பதினெட்டாம் படியை அமைத்து, நாராயணன் கணபதி பூஜையை துவக்க, குருசாமி குருநாதன் துணையுடன் பூஜை, நைவேத்தியம், பஜனை சரண கோஷம் என்று அந்தக் கானகம் அதிர்ந்தது.
ஷிவா, அர்ச்சனா, ஜெயஶ்ரீ, பின்சி, குருசாமி,ராம்,வெங்கி,ராஜன்,அருண் அனைவரும் பஜனையில் பாட களை கட்டியது இம் துங் சாய் மலையில்.
வேடிக்கை பார்க்க வந்த உள்ளூர் மக்கள் பூஜை நடப்பதை பார்த்ததும் மரியாதையுடன் விலகினார்கள்.
ஹாங்காங் வரலாற்றில் இது வரை இல்லாமல் முதல் முறையாக தாய் மோ ஷான் மலை மீது மகர ஜோதி பூஜை நிகழ்ந்தது.
நாங்கள் ஐயப்பன் ஆவாஹனம் செய்து பூஜித்த இடத்திலிருந்து பார்த்தால் உயரமான ஒரு நீர் வீழ்ச்சி தெரியும். எதிரே இருக்கும் மலை அப்படியே பொன்னம்பல மேடு போலவே தோற்றம் அளிக்கும்.
மகர ஜோதி அன்று அந்த வாரம் முழுவதும் மூடியிருந்த மேகம் சுத்தமாக விலகி விட்டிருந்தது.
சரியாக பூஜை செய்யும் நேரத்தில் சூரியனின் கதிர்கள் ஐயனின் மீது விழ பக்தர்கள் மிகுந்த பரவசமானார்கள்.
மகர ஜோதி நாள் அன்று முழுவதும் ஹாங்காங்கில் வானிலை இயல்பு நிலைக்கு மாறி மீண்டும் அடுத்த நாளிலிருந்து குளிரத் துவங்கியது தற்செயல் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு சின்ன சங்கடம் கூட யாருக்கும் நேரமால் அந்த வழுக்கலான மலைப் பாதையில் அத்தனை பேரையும் ஏற்றி விட்டு மீண்டும் அழைத்து வந்தது யாருடைய தனிப்பட்ட முயற்சி மட்டும் இல்லை.
வந்திருந்தவர்களின் மனப்பூர்வமான பக்தியும், ஐயப்பனின் கருணையும் தான்.
ஐயப்பன் பூஜைகளில் எப்போதுமே அன்ன தானம் தீர்ந்து விடுவதில்லை. அன்றும் அப்படித்தான். அனைவருக்கும் அன்னதானம் குறைவின்றி நடந்தேறியது.
இதே மலையில் எங்களை வழிமாறி நடக்க வைத்தது யார் ?? மீண்டும் தொலைந்த வழியைக் காட்டியது யார் ?? ஐயப்பனை இங்கு கொண்டு வர வேண்டும் என்று யோசிக்க வைத்தது எது ??? ஹாங்காங்கிலேயே இது வரை இல்லாது முதல் முறையாக இப்படி ஜோதியன்று மலையேறி பூஜை பஜனைகள் செய்து மகர ஜோதியை கொண்டாட வைத்தது ஏன் ??
எத்தனையோ கேள்விகள் ! பதில் தெரியாத வரை ஏகாந்தம் தான். வருடந்தோறும் மகர ஜோதி வைபவம் நடக்க இறைவன் அருள் புரியட்டும்.
சற்றே நீளமான வீடியோ இங்கே... விலாவாரியாக மலையேறி தரிசனம் முடியும் வரை.....
Leave a comment
Upload