கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்த தியாகப்பிரம்மம், தியாகய்யர், தியாகராஜ சுவாமிகள் என்றெல்லாம் கொண்டாடப்படும் மகானை ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் திருவையாறுக்கு வந்திருந்து, தங்களின் இசை மகானை வருடந்தோறும் மார்கழியில் நடைபெறும் ஆராதனைப் பெருவிழாவில், ஆராதித்து, வணங்கி மகிழ்கிறார்கள்.
தியாகராஜர் ராம பக்தர் என்பதால், அவருடைய கீர்த்தனைகள் பெரும்பாலும் ராமனைப் பற்றியும் அவருடைய குண நலன்களைப் பற்றியும் விவரிப்பதாகவே அமைந்திருக்கிறது. உலகம் முழுவதும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்றாலும், தியாகராஜர் முக்தி அடைந்த திருவையாறு என்பதால், இங்கே நடைபெறும் ஆராதனை விழா மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு வந்து சங்கீதம் பாடினால் பெரிய சக்தி கிடைப்பதாகச் சங்கீத வித்துவான்கள் உணர்கிறார்கள். பிரசித்தி பெற்ற பல கலைஞர்களும் இங்கு வந்து ஆராதனை விழாவில் பாடி இருக்கிறார்கள். மற்றும் இளம் கலைஞர்களும் இங்கு வந்து பாடுகிறார்கள்''
இந்தாண்டு தியாகராஜரின் 178-வது ஆராதனை விழா ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்று வருகின்றது. இந்த ஐந்து நாட்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். நிறைவு நாளான ஜனவரி 18-ஆம் தேதி முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் பின்னணி பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் - ஒரே ராகத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள். அன்று இரவு தியாகராஜர் சிலை ஊர்வலத்துடன் விழா நிறைவடைகிறது.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையில் பாடப் படும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பின்வருமாறு: ..
ஜெகதானந்த கரகா (ராகம் - நடை) சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டது,
டுடுகு காலா (ராகம் - கௌலா) தெலுங்கு மொழியில் இயற்றப்பட்டது,
சாதிஞ்சேன் (ராகம் - அரபி) தெலுங்கு மொழியில் இயற்றப்பட்டது,
கனகன ருசிரா (ராகம் - வராளி) தெலுங்கு மொழியில் இயற்றப்பட்டது,
எண்டரோ மஹானுபாவுலு (ஸ்ரீ ராகம்) தெலுங்கு மொழியில் இயற்றப்பட்டது.
தியாகப் பிரம்மம் தியாகராஜர் அவதாரம்:
1767-ம் வருடம் ராமபிரம்மம் - சீதம்மா தம்பதிகளுக்கு மூன்றாவது புதல்வராகத் தியாகராஜர் திருவாரூரில் அவதரித்தார். இந்த ஊரில் உள்ள ஈஸ்வரனின் திருநாமத்தையே குழந்தைக்குத் தியாகராஜன் என்று பெயர் சூட்டினார்கள். இவர் பிறந்த சிறிது காலத்தில் குடும்பம் திருவையாற்றில் குடியேறியது. தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளைத் தந்தையும், பக்திப் பாடல்களைத் தாயும் இவருக்கு கற்றுக் கொடுத்தனர். எட்டு வயதுமுதலே சீதா, ராமர், லட்சுமணர், அனுமன் விக்ரகங்களுக்கு அன்றாடம் பூஜை செய்வார். அப்போது, தெலுங்கு, சமஸ்கிருதத்தில் ராமன் மீது புதிய கீர்த்தனைகளை இயற்றி, அவரே ராகமும் அமைத்துப் பாடுவார்.
சிறுவனான தியாகராஜர், ஸொண்டி வெங்கடரமணய்யாவிடம் கர்நாடக இசை பயின்றார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிகச் சிறந்த முறையில் இவர் கற்றுத் தேறினார். ஒருமுறை அந்த வித்வத் சபையில் தியாகராஜர் சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே பாடுவதற்கு நேரம் கொடுக்கப்பட்டது. அவர் பாட ஆரம்பித்தார். எல்லோரும் தம்மை மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். தியாகராஜர் காம்போஜி ராகத்தில் ஒரு கீர்த்தனம் பாடி முடித்தார். பார்த்தால் வானில் விடிவெள்ளி முளைத்திருந்தது. மக்கள் தியாகராஜரின் கான ரஸத்தில் மூழ்கியிருந்தனர். இதனை சரபோஜி மன்னரிடம் சென்ற ஸொண்டி வெங்கடரமணய்யா தெரிவித்தார். இதைக்கேட்டு வியந்த மன்னர், அவரை அழைத்துவருமாறு கேட்டுக் கொண்டார். மன்னரின் ஆட்கள் தியாகராஜரிடம் சென்று மன்னரின் ஆக்ஞையைத் தெரிவித்தனர். ஆனால் காசுக்காக அரசனைப் புகழ்ந்து பாடவேண்டி வருமோ என்று கலங்கி, ஒரு கீர்த்தனம் பாடினார். அதுதான் கல்யாணி ராகத்தில் அமைந்த நிதிசால சுகமா என்ற புகழ் பெற்ற கீர்த்தனை. தியாகராஜர் உஞ்சவிருத்தி செய்துதான் தன் குடும்பத்தாரையும் தன்னிடம் பயின்ற சீடர்களையும் அரவணைத்து, வழிநடத்தி வந்தார்.
இசை வாழ்வில் இவர் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து இராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் மகான் வந்து ‘ராம’ நாம மந்திரத்தை 96 கோடி முறை ஜெபிக்குமாறு கூற, அவர் கிட்டத்தட்ட 21 வருடங்கள் விடாமல் ராமநாம என்று சொல்லி ஜபத்திலேயே இருந்தார். அப்படித் தொடர்ந்து, ராமநாமத்தையே உச்சரித்ததினால் அவருக்கு ராமபிரானின் பரிபூரண அருள் கிடைத்தது. அதனால்தான் இசையில் மிகப்பெரிய மகான் எனக் கூறுகின்றனர். மேலும் புதுப்புது சங்கதிகளை தியாகப்பிரம்மம் இசையில் உருவாக்கினார். இதைப்போன்று இசையையும் தாளத்தையும் ராகத்தையும் மாற்றி, புதிய புதிய உத்திகளில் அவர் மடை திறந்த வெள்ளமெனப் பாடிப் பிரவாகிப்பதை அந்த ராமபிரானே வந்து கேட்டுச் செல்வார்.
பல புண்ணியத் தலங்களுக்கும் யாத்திரை சென்று, ஆங்காங்கே அவர் கீர்த்தனைகளை இயற்றி நன்றாகப் பாடுவதோடு வீணையும் நன்கு வாசிப்பார். கின்னரீ என்ற தந்தி வாத்தியம் வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார். மேலும் ஜோதிடம், கணிதத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
இந்திய இசை வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு ஏராளமான சீடர்கள் இவரிடம் சேர்ந்தனர். தஞ்சாவூர் ராமராவ், வீணை குப்பய்யர், உமையாள் புரம் கிருஷ்ண பாகவதர் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். சீடர்களுக்குக் கர்நாடக இசையுடன் கணிதம், ஜோதிட சாஸ்திரமும் கற்றுக்கொடுத்தார். நாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து ஸ்வரார்ணம் என்ற சங்கீதக் கிரந்தத்தைக் கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார்.
பஞ்சரத்ன கீர்த்தனை:
இவர் இயற்றியுள்ள கீர்த்தனங்கள் சுமார் 2400ஐத் தாண்டும். கீர்த்தனங்கள் தவிர இவர் பிரஹலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் போன்ற இசை நாடகங்களையும் இயற்றியிருக்கிறார். இவர் பாடல்களில் மிகச் சிறந்த பாடல்களை பஞ்சரத்னம் என்ற பெயரோடு சில இடங்களில் பாடினார். அவை திருவொற்றியூர் பஞ்சரத்னம், கோவூர் பஞ்சரத்னம், ஸ்ரீரங்க பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம் ஆகியவை. இவருடைய கீர்த்தனைகளைப் பாடுகின்றபோதே அந்தப் பாடல்களின் உட்கருத்தின் ரஸம் வெளிப்படும் வகையில் பாடக் கூடியவர். நவரஸங்களில் ஸ்ருங்கார ரஸம் தவிர இதர ரஸங்களில் எல்லாம் இவர் பாடியிருப்பது குறிப்பிடத் தக்கது. இவர் இயற்றிய இசை நாடகங்களில் ஸ்ருங்கார ரஸத்தைக் கொணர்ந்திருக்கலாம் என்றாலும் அவர் அதைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தியாகப் பிரம்மம் என்றால் பஞ்சரத்ன கீர்த்தனை பிரசித்தம். அதாவது ஐந்து ராகங்களில் ஐந்து கீர்த்தனைகள். தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடினால், குரலின் ஸ்வரம், சாகித்தியம் வளம்பெறும் என்பது ஐதீகம். உலகம் முழுக்க நடைபெறும் ஆராதனை விழாவில். தியாகராஜர் பாடியதை அப்படியே ஸ்ருதி மாறாமல் பாடினால்தான் அவர்கள் வித்துவான்களாகவும், கலைஞர்களாகவும் போற்றப்படுகிறார்கள்.
பஞ்சரத்தின கீர்த்தனைகள் கேட்பவர்கள் இசை மழையில் நனைவார்கள். இறைவன் இதனைக் கேட்டு திருவையாறுக்கு வந்துவிடுவார்.
‘தியாகப் பிரம்மம்’ என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் தனது 80-வது வயதில் (1847) புஷ்ய பகுள பஞ்சமி நன்னாளில் சித்தியடைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், திருவையாற்றில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சமாதியில் இன்றும் கர்நாடக இசை வல்லுநர்கள், இசைப்பிரியர்கள் திருவையாற்றில் இருக்கும் அவருடைய அதிஷ்டானம் முன் பஞ்சரத்ன கீர்த்தனங்களைச் சேர்ந்து பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..
எந்தரோ மஹானுபாவ்லு அந்தரிகி வந்தனமு..!’ -
இசைப் பிரம்மம் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு நமஸ்காரங்கள்!!
Leave a comment
Upload