தம்பி நில்லு. சின்னராசு மவன்தானே நீ, உன் அப்பனை வீட்டிற்கு வரச்சொல்லு என்று அதிகாரமான குரல் வந்த திசையைப்பார்த்த வடிவேலு, அங்கே பண்ணையார் ஏகாம்பரம் நிற்பதைக் கண்டு சரிங்க என தலையை ஆட்டிவிட்டு முனு முனுத்தபடியே வீட்டிற்குள் சென்றான்.
யப்பா, நீ இந்த தொழிலை விடுப்பா போதும், எத்தனை வருஷம்தான் நீயும் உசிரை பணயம் வச்சு மரம் ஏறுவே ? நம்ம வாழ்க்கை மட்டும் ஏற்றமில்லாமல் அப்படியே இருக்கு என அலுத்துக் கொண்டான் வடிவேலு.
நீதான் படித்து முடித்திட்டேல்லே, இனி என்ன கவலை எனக்கு என்றார்.
படித்து ? ஊரிலே மரியாதையாகவா கூப்பிடுறாங்களா என்ன ? மக்கள் அதே மாதிரிதான் இருக்காங்க,
இதெல்லாம் நினைத்து வருத்தப்படாதே, வேலைக்குப் போய் நிலமை மாறிட்டா காட்சியெல்லாம் மாறிடும் என்றார்.
அப்போ பணத்தையும், வேலையும் வைத்துதான் மருவாதி மனுசனுக்கு இல்லையா என்று கேட்டவனிடம், அப்படி இல்லைய்யா, நல்ல ஆளுங்களும் இருக்காங்க நீ இன்னும் பார்க்கலை அம்புட்டுத்தான். நீ நாளைக்கு என் கூட வியபாரத்திற்கு வா நாலு நல்லவங்களை காட்டுகிறேன் என்று கூடவே அழைத்துப்போனார் நகரத்தில் இளநீர் விற்கும் சின்னராசு.
பண்ணையார் வீட்டில் இரண்டுகுலை இளநீர் காய்களை மாலையில் இறக்கி, விடியற்காலை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மிதித்தபடியே மகேந்திரப்பள்ளியிலிருந்து சீர்காழி வந்து சேரவே மணி காலை எட்டு மணியாகியிருந்தது.
பேரூந்தில் முன்னமே வந்திறங்கிய வடிவேலு அப்பாவின் வருகைக்காக வழக்கமாக இளநீர் விற்கும் இடத்தில் காத்தியிருந்தான். சின்னையன் வந்தபிறகு பதினைந்து நிமிடம் அரிவாளைத் தீட்டிக்கொண்டியிருப்பதைப் பார்த்து தான்வாங்கி கூர் தீட்டிக் கொடுத்தான்.
சின்னராசு எப்படி இருக்கீங்க ? பாப்பாவிற்கு அம்மை போட்டிருக்கு பத்து இளநீர் காய்களை வீட்டிலே போட்டுடுங்க என ரூபாய் ஐந்நூறை நீட்டினார் நடைப்பயிற்சியிலிருந்த நீதியரசர்.
நல்ல காயாகத் தட்டி எடுத்து தலைப்பகுதியை சீவி துளையிட்டு, பப்பாளிக் காம்பினைப் போட்டு குடிப்பதற்கு அவரிடம் நீட்டினார். இவர் யாரு உங்கள் மகன் வடிவேலுவா ? என பெயர் சொல்லி நீதியரசர் கேட்டது வடிவேலுவிற்கு மகிழ்வாய் இருந்தது.
சின்னராசுண்ணே, என்ன நேத்து லீவு விட்டீங்க போல, உடம்பிற்கு ஏதும் முடியலையா என கேட்டபடி பின்னால் வந்த மருத்துவர் உடம்பையும் அப்ப அப்போ பார்த்துக்கோங்க என்றவர், இது யாரு உங்க பையன் வடிவேலுவா ? படிப்பு முடிந்ததா என அக்கறையாக விசாரித்தபடியே, பேட்மிண்டன் விளையாட எதிரே உள்ள உள்மைதானத்திற்குச் சென்றனர் இருவரும்.
பார்த்தியா வடிவேலா, இவர்கள் என் மீது எத்தனை அக்கறையாக இருக்கிறார்கள் என சின்னராசு கேட்டதும், இதிலென்னாப்பா அக்கறை முப்பது வருடமா ஒரே இடத்திலே நீ கடை போட்டிருக்கே அதனாலே இருக்கும் என்றான் வடிவேலு.
விளையாடிவிட்டு வெளியேவந்த மருத்துவர், விற்பனை முடிந்ததும் வீட்டில் தோட்ட வேலை இருக்கு அவசியம் வரும்படி கூறிவிட்டுச்சென்றார்.
ஏம்பா, இந்த தோட்ட வேலையெல்லாம் ஒத்துக்கறே ?
இளநீர் வியாபாரம் மட்டும் செய்து உன்னை இந்தளவிற்கு படிக்க வைக்க முடியுமாய்யா ? இவர்கள் வீட்டில் உள்ள அனைத்துப் பணிகளுக்கும் என்னைத்தான் கூப்பிடுவார்கள் என்னால் முடிந்ததைச் செய்வேன், என்னால் இயலாததை வேறு ஆட்களை வைத்து முடித்துக்கொடுப்பேன் என்றார்.
இளநீர்காய்களை நீதியரசர் வீட்டில் இறக்கிவிட்டு குழந்தையின் நலம் விசாரித்து கிளம்பிய சின்னராசுவிடம், பையனுக்கு வேலை வேண்டுமானல் சொல்லுங்கள் சென்னையிலே வாங்கிடுவோம் என்றார் நீதியரசர். சரிங்கய்யா, நீங்கள் இருக்கும் போது எனக்கென்ன கவலை ? என்று சொல்லிவிட்டு கிளம்பினர்.
நாம இப்போ கடை போடறமே அதற்கு காரணமே இந்த அய்யாதான், இவர் வக்கீலா இருந்தபோது ஆரம்பித்த இளநீர் கடை, பின்னே அவரோட இடத்திலேயே வைத்துக்கொள்ள அனுமதியும் தந்தார். தந்தையின் உழைப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்த வடிவேலு,
எனக்காக எத்தனை துன்பங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறாய் ? என்றதும், இதெல்லாம் ஒன்றும் இல்லை நீயும் அதை புரிந்து படித்து நல்லபடியாக முடித்தவிட்டாய், இனி என்ன கவலை, நல்ல வேலை கிடைத்ததும் வாழ்க்கை சிறப்பாயிடும் என நம்பிக்கை வார்த்தைகளை மகனுக்கு ஊட்டினார்.
மருத்துவர் வீட்டில் தோட்ட வேலைகளை முடித்துக்கொடுத்து கிளம்பும் தருவாயில் அவர்களை நிறுத்திய மருத்துவர், வடிவேலு, மேலே நீ என்ன செய்யப்போறே படிக்கப்போறீயா ? இல்லை வேலைக்குப் போகப்போறீயா என கேட்டார்.
இரண்டும் இல்லை. அப்பாவோட வியாபாரத்தையே தொடரப் போகிறேன் என்றதும் இருவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
ஏம்பா இதற்காகவா உன்னை கஷ்டப்பட்டு பொறியியல் படிக்க வைத்தார் ? என கேட்டார் மருத்துவர்.
ஏன் சார் ? டாக்டர் பையன் டாக்டராகலாம், வக்கீல் பையன் வக்கீலாகலாம், ஆடிட்டர் பையன் ஆடிட்டர் ஆகலாம். இளநீர் விற்கிறவர் ம்கன் இளநீர் விற்க முடியாதா ? என வித்தியாசமாக கேட்ட வடிவேலுவை, என்ன அய்யாவை எதிர்த்துப் பேசிகிட்டு ? என அதட்டினார் சின்னராசு.
ஆனால் மருத்துவருக்கு அவன் ஏதோ சொல்லவருவது மட்டும் நன்கு புரிந்துது. என்ன சொல்கிறாய் ?
தெரிந்த தொழில். மக்களுக்கு பயனளிக்கும் சத்தான பானம், அதற்கான எதிர்காலத் தேவையும் நிறைய இருக்கு, நல்ல வருமானமும் இருக்கு. மேலும் சமூகச்சிந்தனையாக நெகிழியை தவிர்த்துப் பருக பப்பாளியின் காம்பை பயன்படுத்தவும், மாசற்ற எரிபொருளாக தேங்காய் ஓடுகளும் பயன்படுகிறது. இப்படி நமக்கும், சமூகத்திற்கும் பயன்படும்படியான தொழில்செய்யும் வாய்ப்பு அமைந்துவிடால் அதைவிட மனத்திற்கு சந்தோஷமான விஷயம் ஏதும் இருக்குங்களா ஐயா ?
தந்தையின் சிரமத்தைப்பார்த்த பின்புதான் என் நாலாவது வருட இளங்கலை பொறியியல் படிப்பில் செயல்திட்டமாக தேங்காயை அரிவாள் கொண்டு வெட்டாமல் இளநீரை வெளியே எடுக்கும் மோட்டாருடன் கூடிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளேன். விற்பவர்களுக்கு பாதுகாப்பாகவும், நேர சேமிப்பும் அதன் மூலமாக நிறைய விற்பனையையும் பெருக்க முடியும் என ஆர்வமாக சொல்லிக்கொண்டே போனான் வடிவேலு.
அருமை, அந்த இயந்திரம் தயாரிப்பதற்கான செலவு எவ்வளவு என கேட்டார் மருத்துவர்
ஒரு இயந்திரம் தயாரிக்க சுமார் முப்பதாயிரம் வரை ஆகும் என்றான். உள்ளே சென்று திரும்பிய மருத்துவர் ஒரு லட்ச ரூபாயை சின்னராசுவிடம் கொடுத்தார். வாங்காமல் தயங்கி நின்ற சின்னராசுவிடம், வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு உரியதுதான் என்ற மருத்துவர்,
முப்பது வருடத்திற்கு முன் ஒரு நாள்.. பத்துரூபாய் கட்டாக ரூபாய் ஆயிரம் கொடுத்து என்னை வங்கிக்கு அனுப்பினார் என் தந்தை. டிவிஎஸ் வண்டியின் முன் பகுதியில் வைத்து, வண்டியை ஓட்டும் ஆர்வத்துடன் வேகமாக சென்றேன், வங்கி சென்றுப்பார்த்த போது பணம் இல்லை அப்போது அது பெரியத் தொகை
பதட்டமடைந்த நான், செய்வதறியாமல் திகைத்துவழியெங்கும் சென்று தேடியும் கிடைக்காமல்போக தந்தைக்குப்பயந்து வீட்டிற்கும் செல்லமுடியாமல் வெகு நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பினேன். வீட்டு வாசலில் உன் அப்பா நின்றுக் கொண்டிருந்தார், காணமல் போன அந்த பணத்தை என்னிடம் கொடுப்பதற்காகவே காத்தியிருந்ததாகச் சொல்லி கொடுத்துவிட்டுப்போனார்.
இப்பொழுது கடை போட்டுள்ள அதே இடத்தில்தான் அந்த பணம் வண்டியிலிருந்து விழுந்ததாகவும், என் தந்தையை நன்கு அறிந்தவர் என்றாலும், அவரிடம் பணத்தை கொடுக்காமல் எனக்காக காத்தியிருந்து கொடுத்த செயல் எனக்கு இவரை மிகவும் பிடித்துப் போனது. அன்று முதல் இவரை என் நண்பனாகவே பார்க்கின்றேன் என்று கண் கலங்கினார் மருத்துவர். அப்போதே முடிவு செய்திருந்தேன் என் முதல் சம்பளம் வந்ததும் இந்த தொகையை இவருக்காக நாம் சேமித்து தரவேண்டும் என நினைத்திருந்தேன் அதுதான் இந்த தொகை. என் நண்பனின், உன் அப்பாவின் நேர்மைக்கான வெகுமதி என நினைத்து வாங்கிக்கொள் என்று வடிவேலுவிடம் கொடுத்தார்.
இது நல்லவர்களின் பணம், நல்ல உணர்வுகளை கொண்டுள்ள பணம் என்பதால் இதையே முதலீடாக வைத்து என் சுயத்தொழிலை ஆரம்பிக்கிறேன் என்றான் வடிவேலு உறுதியாக.
Leave a comment
Upload