(ஒரு பிரஸ் மீட் படம். கட்டுரையில் வரும் பிரஸ் மீட் அல்ல)
‘சொல்வதை விட மறைப்பது அதிகம்’ என்று அரசாங்கத்தின் இரண்டு துறைகளைப் பற்றிச் சொல்லலாம். ஒன்று அரசாங்க செய்தித்துறை மற்றது காவல்துறை. மக்களுக்கு நிருபர்கள் மூலம் செய்திகளை தரவேண்டிய அரசாங்க செய்தித்துறை, சில ஒப்பனை வேலைகளையும் செய்து வந்தது.
இதை ஒரு சம்பவம் உணர்த்தியது. அதிகாரிகள் மந்திரிகளுக்கு கட்டுப்பட்டவர்கள், மக்களுக்கு அல்ல, அதனால் அவர்கள் மந்திரிகளுக்காகவே வேலை செய்கிறார்கள். மந்திரிகள் வாய்க்கு வந்தபடி பேசினாலும், இவர்கள் அதை அலங்காரத் தணிக்கை செய்வது வழக்கம். செய்தியை கொஞ்சம் வடிகட்டி, பூசி, மெழுகித் தர வேண்டும் என்று செய்தித்துறை கட்டாயப்படுத்தும் என்பதை உணர்ந்துகொள்ள அவனுக்கு சில சம்பவங்கள் வாய்த்தன.
ஒருநாள் மாலை அவன் செய்தி சேகரிப்பதற்காக ஒரு விழாவுக்கு சென்றான். அப்போதைய மாநில செய்தித்துறை மந்திரி ஆர்.எம்.வீரப்பன் பிரதான விருந்தினர். மற்ற இருவர், சென்னை தொலைக்காட்சியின் பொறுப்பு இயக்குநராக இருந்த ஒரு தெலுங்கர். மூன்றாமவர் சத்யகலா என்ற நடிகை. இந்த நடிகை அற்புதமாக ஆங்கிலத்தில் பேசினார். தூர்தர்ஷன் டைரக்டரும் ஆங்கிலத்தில் தான் பேசினார். தமிழில் பேசியவர் செய்தித்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன். ஹிந்தி மீது பாய்ந்தார். மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை சரமாரியாகச் சாடினார். அதுவும் மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியை வைத்துக் கொண்டு, பேச்சு காரசாரமாக இருந்தது.
விழா முடிந்து அவன் சக நிருபருடன் வெளியே வரும்போது ஒரு அரை வழுக்கை தலை ஆசாமி அவனை நிறுத்தி, ‘‘எந்தப் பத்திரிகை , பெயர் என்ன?’’ என்று கேட்டார். நிருபர்களில் இவனே அவருக்கு புதியவனாகத் தெரிந்தான் போலிருக்கிறது. பதில் சொல்லிவிட்டு இவன் அலுவலகத்திற்குச் சென்றான்.
மந்திரி ஆர்.எம்.வீரப்பனின் ஆவேசமானப் பேச்சை, அவரது வார்த்தைகளிலேயே குறிப்பிட்டு, அதையடுத்து, மற்றவர்கள் பேசியதையும் செய்தியாக்கி அலுவலகத்தில் டைப் அடித்தான். அது கம்ப்யூட்டர் இல்லாத காலம். அப்போதைய வழக்கம் எந்த நிருபரும் தான் எழுதிய செய்தியை தலைமை நிருபரிடம் கொடுக்க வேண்டும். இரவு நேரத்தில் அவர் வீட்டிற்குச் சென்றுவிட்டால், தொலைபேசியில் அழைத்து செய்தியைப் படித்துக்காட்ட வேண்டும். அது செல்போன் இல்லாத காலம். தலைமை நிருபர் தலையணைக்கு அருகிலேயே பழைய குண்டு டெலிபோனை வைத்திருப்பார். ‘கணீ’ரென்ற சப்தம் அவரை எழுப்பிவிடும்.
அன்று இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது. தலைமை நிருபர் வீட்டிற்குப் போய்விட்டார். தான் எழுதிய செய்தியை அவன் படித்துக் காண்பித்தான். ‘சரி’ என்று சொன்ன அவர், ‘டெஸ்க்கில் கொடுத்துவிடு’ என்றார். (டெஸ்க் என்பது எடிட்டிங் செய்யப்படும் அறை). செய்தியைக் கொடுத்துவிட்டு அவன் தன் இருக்கையில் அமர்ந்தான். அப்போது, அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் சொன்னார், ‘‘நீங்கள் தானே செய்தியை எழுதியது? அதை கொஞ்சம் படித்துக் காட்ட முடியுமா?’’
அவன் சட்டென்று பதில் சொன்னான், ‘‘நான் எழுதியதை நீங்கள் நாளை காலை எங்கள் நாளிதழில் படித்துக் கொள்ளலாம்’’ என்று.
‘‘நான் இன்பர்மேஷன் டைரக்டர் பேசுகிறேன். நீங்கள் செய்தியை எப்படி எழுதினீர்கள் என்று எனக்குத் தெரிய வேண்டும்.’’
‘‘அது உங்களுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நான் எழுதியதை தலைமை நிருபருக்கோ, அல்லது எடிட்டருக்கு மட்டுமே தெரிவிக்க முடியும், பிறருக்கு அல்ல’’.
இப்படி திடமாகச் சொல்லிவிட்டு, வீட்டிற்கு புறப்படத் தயாரானான். அந்த சமயத்தில் விஷயத்தைப் புரிந்து கொண்ட சக நிருபர்கள், ‘‘உடனே வீட்டிற்குப் போய்விடாதே, கொஞ்ச நேரம் இங்கேயே இரு. பேசியது, டைரக்டர் கிருஷ்ணபாரதி, அவரிடம், நீ மாட்டேன் என்று சொல்லிவிட்டாய், அவர் உடனே தலைமை நிருபருக்கு போனில் பேசுவார். தலைமை நிருபர் உன்னைக் கூப்பிடுவார், கொஞ்சம் பொறு” என்றார்கள். அப்படித்தான் நடந்தது.
அடுத்த 10வது நிமிடத்தில் தலைமை நிருபர், ‘என்ன எழுதினாய்?’ என்று கேட்டார். தான் அவரிடமே படித்துக்காட்டி ஒப்புதல் பெற்றுவிட்டதைச் சொன்னான். இருந்தாலும், தலைமை நிருபர் விட்டபாடில்லை. டெஸ்க்கில் இருந்து அந்தக் காப்பியை திரும்ப வாங்கிக் கொண்டு வரச்சொன்னார். மறுபடியும் படிக்கச் சொன்னார், அவன் படித்தான்.
அப்போது அவர் சொன்னார், ‘‘உன்னுடைய மூன்றாவது வாக்கியத்தை முதல் வாக்கியமாக மாற்று. இரண்டாவது வாக்கியத்தில் ஒரே ஒரு அட்ஜக்டிவ்வை எடுத்துவிடு, முதல் வாக்கியம் வேண்டாம். பிறகு டெஸ்க்கில் கொடு’’ என்றார். அவன் தன் எழுத்துச் சுதந்திரம் பறிபோவது போல் உணர்ந்தான். இருந்தாலும், முற்றிலுமாக செய்தியை மாற்றச் சொல்லவில்லை, வாக்கியத்தை தானே இடம் மாற்றச் சொன்னார் என்று சமாதானப்படுத்திக் கொண்டான். அப்போது ஒரு மூத்த நிருபர் சொன்னார், ‘‘நீ புதுசு, இதற்கெல்லாம் கவலைப்படுகிற அரசாங்கத்தின் செய்தித்துறை, பத்திரிகையாளர்களுக்கு ஒருவிதத்தில் தணிக்கைத் துறை. தங்கள் மந்திரிகளைக் காப்பாற்ற அதிகாரிகள், அவ்வப்போது இப்படி குறுக்கிடுவார்கள். இதனால் எல்லா சுதந்திரமும் போய்விட்டது என்று நினைத்தால் நீ எங்கும் வேலை பார்க்கமுடியாது” என்றார்.
மூத்த நிருபர் அவன் மனநிலையைக் கண்டு சொன்னார், ‘‘இது உன் செய்தியை தடுக்கும் முயற்சி அல்ல, சூட்டை தணிக்கும் முயற்சி அவ்வளவுதான். எழுதுவது உன் கடமை என்பது போல், தங்கள் அரசியல் எஜமானர்களைக் காப்பாற்றுவது அதிகாரிகளின் கடமை”. அனுபவம் பேசியது. அவனும் அப்போதைக்கு அதை கேட்டுக் கொண்டான்.
அதுமட்டுமல்ல காவல்துறையிலும் ஏறத்தாழ இதே நிலைமைதான். அப்போது, வெள்ளிக்கிழமைதோறும், போலீஸ் கமிஷனர் தன் அலுவலகத்தில் நிருபர்களை சந்திப்பார். அவராக சில விஷயங்களைச் சொல்வார். நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வார். அப்போதைய கமிஷனர் பொன்.பரமகுரு பெரும்பாலும் ஒளிவு மறைவில்லாமல் பேசியவர்.
ஒருமுறை ஒரு நிருபர் ஏதோ கேள்வி கேட்டதற்கு, ‘‘அடுத்த வாரம் பதில் சொல்கிறேன். விசாரணையில் இருக்கும் பிரச்சனையைக் கிளப்பாதீர்கள்” என்றார். யாரும் அன்றையதினம் அது பற்றி எழுதவில்லை. அதில் ஓரளவுக்கு நியாயம் இருந்தது. முன்னதாகவே தரப்படும் செய்தி, காவல்துறையின் விசாரணையை பாதிக்கக்கூடும் என்பது நிருபர்களுக்கு தெரிந்திருந்ததனால் சமூகப் பொறுப்புணர்வுடன் அந்தச் செய்தியை எழுதவில்லை.
சில சமயம், உதவி கமிஷனர் வால்டர் தேவாரத்தைச் சந்தித்தபோது, ‘‘இதை எழுதாதீர்கள், ஆஃப் த ரெக்கார்ட்’’ என்று சில தகவல்களைச் சொல்வார். சத்தியத்திற்கு கட்டுப்பட்டு நிருபர்கள் யாரும் அந்த ‘சென்சிடிவ்’ தகவல்களை வெளியிட்டது இல்லை. புலனாய்வு பத்திரிகை என்பது வெளிவந்திராத காலம் அது. “கிசு கிசு’’ என்ற பகுதியும் கிடையாது.
எதையாவது எழுதி சமூக நிலவரங்களை மோசமாக்கிவிட கூடாது என்ற பொறுப்புணர்வு, நிருபர்களுக்கு இருந்த காலம் அது. எனினும் காவல் துறையுடன் பழகியபோது பிற்காலத்தில் அவன் தெரிந்து கொண்டது, எங்காவது எதாவது நடந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு ஒரு நிருபர் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டால், அவர் ‘ஒன்றுமில்லை’ என்பார். ஒன்றுமில்லை என்பதை ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து எழுத வேண்டியது நிருபரின் ஆர்வத்தைப் பொறுத்தது.
மறைக்கப்படும் உண்மைகளை தோண்டித் துருவி கண்டுபிடித்து எழுத வேண்டும். அதிலும் ஒரு பொறுப்புணர்வு தேவை. அந்த பத்திரிகை அறத்தை நிருபர்கள் எப்போதும் காக்க வேண்டும்.
Leave a comment
Upload