தொடர்கள்
கதை
உறவுகள் சிறுகதையா…?-முனைவர் என்.பத்ரி

20250017190958989.jpg

அன்று காலை மணி 10 இருக்கும். சென்னை அண்ணா நகரில் இருக்கும் தன் ஒரே பையன் தினேஷ், அனுப்பியிருந்த காரில் மகனின் வீட்டைப் போய்ச் சேர்ந்தார் பொன்னுசாமி.

அன்று பிற்பகல் பொன்னுசாமி, தன் நெடுநாள் நண்பர் குமாரின் பேத்தி உமாவின் மேரேஜ் ரிசப்ஷனுக்கு போக வேண்டும். அந்த கல்யாணத்தை விட பொன்னுசாமிக்கு குமாரிடம் கொஞ்ச நேரம் பேசி பழைய நினைவுகளை அசை போட வேண்டும் என்ற ஆசை ரொம்பவே இருந்தது. இப்ப இருவருக்கும் சுமார் 70 வயசு இருக்கும்.

ஆபீஃஸ் போகத் தயாராக இருந்தான் தினேஷ். இவர் காரிலிருந்து இறங்கின உடனே, ‘அப்பா, நேரம் கிடைக்கெறப்போ ஆபீஃஸ்லேந்து ஃபோன்ல பேசறேன்”ன்னு சொல்லிட்டு அவசர,அவசரமாக புறப்பட்டு விட்டான். மருமகள் உமாவும் அடுத்த 10 நிமிஷத்துல, வந்த ஆபீஃஸ் கார்ல புறப்பட்டு போயிட்டா.

ஆனா போகும்போது, லதாகிட்ட,அதான் அவங்க வேலைக்காரியிடம்,’ஐயாவ பார்த்துக்கோ’ன்னு சொல்லிட்டு போயிட்டா.சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தார் பொன்னுசாமி.

மணி பிற்பகல் 3 இருக்கும். கொஞ்ச முன்னாடியே போனாத்தான் குமாரோட கொஞ்ச நேரம் பேசிட்டு ஊருக்கு போக முடியும் என்று எண்ணியபடி மேரேஜ் ரிசப்ஷன் ஹாலுக்கு ரொம்ப ஆசை,ஆசையா புறப்பட்டார் பொன்னுசாமி.

லதாதான் வாடகை ஆட்டோவுக்கு அரேஞ்ச் பண்ணா.’நான் லோகேஷன் போட்டுட்டேன்.கவலைப்படாம இருங்க.உங்கள கல்யாண மண்டபத்துல பொறுப்பா சேர்த்துடுவாங்க’ன்னு சொல்லி வழியனுப்பி வைத்தாள்.

ஆட்டோ புறப்பட்டது.

கல்யாண ரிசப்ஷன் ஹாலை அடைந்தார் பொன்னுசாமி. அவருக்கு தெரிந்த முகமாய் எதுவும் இல்லை. இவரை நோக்கி நல்ல உடையில் ஓர் அழகான பெண்மணிவந்தார்.

அவர் அருகில் வந்து, கையை கூப்பி வணங்கி, “வாங்க. இந்தாங்க வெல்கம் ஜூஸ்."என்றாள்.

உபசரிப்பில் மகிழ்ந்து போன பொன்னுசாமி, “குமார் எங்க இருக்காரு ?.நானும் அவரும் 30 வருஷ ஃப்ரண்ட்ஸ். செங்கல்பட்டுல நாங்க ஒரே தெரு. ஒண்ணா கோலி விளையாடினவங்க. அவங்க அப்புறம் சென்னைக்கு வந்துட்டாங்க. 30 வருஷம் ஆயிடுச்சு.’ என்று அவளிடம் பீத்திக்கொண்டார்.

“நீங்க இங்க வந்து உட்காருங்க. அவருகிட்டகிட்ட சொல்லி அனுப்புறேன்.” ன்னு சொன்னாள் அவள். நேரம் கடந்து கொண்டிருந்தது. குமார் வந்த பாடில்லை.

மெல்ல அந்தப் பெண்ணிடம், “குமாரோட மனைவி எங்க? அவங்களைப் பாத்துட்றேனே." என்றார் பொன்னுசாமி.

அவள்"அதோ அவங்க முன் வரிசையில உட்கார்ந்துட்டு இருக்காங்க. போய்ப் பாருங்க." என்று சொல்லி விட்டு போய் விட்டாள். இதில யாரு குமாரோட ஒய்ஃப்னு தெரியலையே. மனதுக்குள் இருந்த தவிப்பை அவரால் வெளிக்காட்ட முடியவில்லை.

நேரம் ஆகிக் கொண்டே இருந்துச்சு.மனைவியிடம் இரவே வந்து விடுவதாக சொன்னது நினைவுக்கு வந்தது.

வெகு நேரம் க்யூவில நின்று மணமக்களிடம் மொய்க் கவரைக் கொடுத்தார்.ஸ்டேஜ்ஜிலிருந்து இறங்கிய அவரிடம். அந்தப் பெண்மணி வந்தாள்.’சார், டைனிங் ஹாலுக்கு இப்டீ போகணும்’என்றாள்.

“ இல்லம்மா நான் புறப்பட்றேன். க்யூவில ரொம்ப நேரம் நின்னதால, கால் ரொம்ப வலிக்குது.’என்றார். ’குமார கடைசி வரைக்கும் பாக்கவே முடியலயே’ ன்னு கஷ்டம் அவருக்கு மனசுல இருந்தது.

குமாரோட பொண்ணுக்கு என்னைத் தெரியவே தெரியாதம்மா?“ என்றார் அவர்.

’பரவாயில்ல சார். அதுக்குதான் வீடியோ எடுக்குறாங்க. நீங்க கல்யாணத்துக்கு வந்ததுக்கு மிக்க நன்றி. இந்தாங்க கிஃப்ட்.’ என்றாள்.

’சரிம்மா. குமாருக்கு நீங்க என்ன வேணும்?இவ்வளவு அன்பா உபசரிச்சீங்களேன்னு கேட்கிறேன்”என்றார்பொன்னுசாமி.

’அவரோட உறவுக்காரங்க நாங்க இல்ல. நாங்க ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனிய சேந்தவங்க. இதுதான் எங்களோட வேலை.’ன்னு சொல்லி முடித்தாள் அவள்.

கிராமத்திலுருந்த வந்த பொன்னுசாமிக்கு ஒன்னும் புரியல. திரும்பி ஊருக்கு போய்க்கொண்டே மனசுக்குள்’குமார், எதுக்கு என்ன கூப்டான்? நான் எதுக்கு வந்தேன்? யாரோ முன்ன பின்ன தெரியாத இந்த பொண்ணுகிட்ட பேசிட்டு போறதுக்கா?

நள்ளிரவு கதவைத் திறந்த அவருடைய மனைவி பார்வதி கேட்டாள். இன்னிக்கு பொழுது ரொம்ப ஜாலியாப் போச்சா? ஃபிரண்டோடவும்,பையனோடுவும் ’என்றாள்.

‘எனக்கு தூக்கம் வருது’என்று சொல்லி அந்த பெரியவர் தன் துக்கத்தை தூக்கத்தில் மறைத்துக் கொண்டார்.உறவுகள் சிறுகதை ஆகி வருவதை, அவளே ஒரு நாள் புரிந்து கொள்ளட்டும்.அதுவரை அவர் அவள் நிம்மதியை அவர் கெடுக்க விரும்பவில்லை.