"இதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. எனது 10 ஆண்டு கால சர்வீஸில் இந்தியாவின் தேசியக்கொடி, கார் பந்தயங்கள் நடக்கும் மைதானத்தில், இந்த துபாய் மண்ணில் பறக்காதா என நான் ஏங்கினேன்.
அஜித்குமார் வெற்றிப்பெற்று தேசியக்கொடியை கையில் ஏந்தி ஓடிவந்த கணத்தில் நான் உண்மையில் அழுது விட்டேன். எப்பேற்பட்ட தருணம்!" என துபாய் ஆட்டோடிரோம் சர்க்யூட் தலைவராக உள்ள இந்தியரான இம்ரான், அஜித்குமார் கார் பந்தயத்தில் வெற்றிப்பெற்றவுடன் பேசினார்.
நடிகர் அஜித்குமார் துபாயில் ஜனவரி (11-12) 2025 ல் நடைபெற்ற 24H எண்டுரன்ஸ் (endurance) பந்தயத்தில் 991 பிரிவில் மூன்றாவதாக வந்து வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
Dubai24H என்று அழைக்கப்படும் பந்தயத்தில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக கார் ஓட்ட வேண்டும். அணியின் 4 வீரர்கள் தலா 6 மணி நேரம் ஓட்ட வேண்டும்.
6 மணி நேரம் தொடர்ந்து ஓட்டாமல் 2 மணி நேரம் விட்டு விட்டு கூட ஓட்டலாம். இடையில் காரை மாற்றக் கூடாது. பழுது பார்க்க, டயர் மாற்ற, பெட்ரோல் போட என அதற்கு வெறும் 55 வினாடிகள் தான் நேர அளவு.
கார் சராசரியாக 289 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். கடும் மழை அடித்தாலும் சரி, பெருங்காற்று வீசினாலும் சரி காரை நிறுத்தாமல் உட்சப்பட்ச வேகத்தில் கார்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
நினைத்துப்பாருங்கள் எவ்வளவு கடினமான போட்டி அது என்று!
24 மணி நேரத்தில் கார்கள் 2500-3500 கிலோமீட்டர்கள் கடந்திருக்கும். எந்த அணியின் கார் அதிகபட்ச தூரத்தை கடந்திருக்கிறதோ அதுவே வெற்றிப்பெற்ற அணி ஆகும். அதில் தான் 3ஆவது இடத்தை அஜித் அணி பெற்றிருக்கிறது.
அஜித்தின் அணியில் உள்ள மற்ற மூவர் மேத்யூ டெட்ரீ, ஃபேபியன் டஃபிக்ஸ், கேமர்ரோன் மெக்லியாட் இதில் பெல்ஜியத்தை சேர்ந்த ஃபேபியன் டஃபிக்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஓட்டுனர் ஆவார்.
அஜித்குமார் என்றாலே தோனி போன்று ரேஸ் பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வமும், அடிக்கடி அதில் சுற்றுப்பயணங்கள் செய்பவர் என எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அஜித் வெறும் சுற்றுப்பயணம் மட்டுமில்லாது தனது வாழ்நாள் கனவான பைக் கார் பந்தயங்களில் கலந்துக்கொள்ள, அதற்கென பயிற்சிகளையும் முயற்சிகளையும் விடாமல் தொடர்ந்து பலகாலமாகவே ஈடுப்பட்டுக்கொண்டிருந்தார். இது சாதாரண விஷயம் கிடையாது.
கோடிக்கணக்கில் செலவு பிடிக்கும் விளையாட்டு. ஒரு F1 பந்தயக்காரின் விலையே அதிகபட்சம் சுமார் 800 கோடியை தாண்டும்.
சாதாரணமானவை என்றால் சராசரியாக 100 கோடியிலிருந்து 200 கோடி வரை விலைப்பெறும். பிறகு பயிற்சிகள், போட்டிகளில் பங்கேற்பது, நடுவில் கார் பழுதானால் சக்கரங்கள் உட்பட காரின் பாகங்களுக்கு சரியான செலவு வைக்கும் விளையாட்டு இது. சராசரி மனிதனால் நினைத்துப்பார்க்க கூட முடியாது.
அஜித்தும் சராசரி குடும்பத்திலிருந்து வந்தவரே. வெற்றிகரமான நடிகர் ஆனப்பின் தனது படத்திற்கு வாங்கும் சம்பளத்தை முழுவதுமாக தனது கனவிற்காக செலவு செய்து வருகிறார். சினிமாவில் நடித்தால் தமிழக முதல்வராகி விடலாம் என்று கனவு காண்பவர்கள் மத்தியில் அஜித்தின் கனவு வித்தியாசமானதே!
சிறந்த புகைப்பட கலைஞர், சமையல் திறமை, பைக் ரேஸ், கார் ரேஸ் வீரர் , விமானம் ஓட்டி எனபல திறமைகளை தன்னிடம் வைத்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன்"ட்ரோன்"வடிவமைப்பு மற்றும் இயக்கத்தில் உதவியுள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பதையே ஏதோ தனது பொழுதுப்போக்காக வைத்திருக்கிறாரோ?! இந்த மனிதரிடம் இளமையிலேயே கோடிக்கணக்கில் பணம் இருந்திருந்தால் சினிமாவில் சேர்ந்திராமல், தனது மற்ற திறமைகளுக்கான வழிகளில் போய் ஜெயித்திருப்பாரோ என்று எண்ண தோன்றுகிறது.
தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது போன்ற செயல்கள் அஜித்தை மற்றவர்களை விட வேறுப்படுத்தி காண்பிக்கின்றன.
பந்தயத்தில் வெற்றியடைந்த பிறகு கொடுத்த ஒரு பேட்டியில் “விஜய் வாழ்க!அஜித் வாழ்க! ன்னு சொல்றீங்களே நீங்க எப்ப வாழப்போறீங்க? குடும்பத்தை கவனியுங்கள்“ என்று ரசிகர்களை நோக்கி சரியான கேள்வியும் அட்வைஸும் செய்கிறார் அஜித். அஜித்தை பொறுத்தவரை அன்று முதல் இன்று வரை அவர் ரசிகர்களுக்கு சொல்வது, நன்றாக உழையுங்கள், படியுங்கள், குடும்பத்தை கவனியுங்கள். இது மட்டும் தான். இது தான் ஒரு நல்ல இமேஜ் உள்ள ஆள் செய்ய வேண்டிய வேலை.
இதுவரை, பல போட்டிகளில் கலந்துக்கொண்டதன் காரணமாக பல முறை விபத்துகள், காயங்கள்அவருக்கு ஏற்பட்டிருந்தாலும் தனது கனவை கைவிடாமல் தொடர்ந்து முயற்சித்து இன்று தனது 53 வயதில் சாதனை படைத்திருக்கிறார் என்றால் அது பெருமைக்குரியது.
அஜித் இதுவரை இந்தியாவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொண்டிருக்கிறார். 2003 ல்பிஎம்டபிள்யூ ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் 4 ஆம் இடம் பிடித்தார். 2004-ல் பிரிட்டிஷ்பார்முலா 2 வகை பந்தயத்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்து பங்கேற்றார்.
2010 ல் F2 கார் பந்தயத்தில் இடம் பெற்றார். சமீபத்தில் சென்னை நகரத்தில் தமிழக அரசின் சார்பாக நடந்த சர்வதேச கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்தின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்படியே போட்டிகள் இங்கே வடிவமைக்கப்பட்டன.
நட்டநடு நகரத்தில் அண்ணாசாலையில் பந்தயக்கார்கள் சீறி பறக்க, அதை கைக்கெட்டும் தூரத்தில் வேடிக்கைப்பார்த்த தமிழக ரசிகர்களுக்கு அந்த அனுபவம் புத்தம்புதிதாக இருந்தது. இன்று துபாயில் அஜித் அணி வெற்றிப்பெற்றது அந்த போட்டிகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
துபாயில் அஜித் அணிக்கு கிடைத்த ரசிக வரவேற்பைக் கண்டு, கடந்த 20 ஆண்டுகளாக இப்படி ஒரு ரசிக கூட்டத்தை பார்த்தே இல்லையே என அசந்து போன போட்டி அமைப்பாளர்கள் வெவ்வேறு நாடுகளில் நடைப்பெற போகும் போட்டிகளில் அஜித் அணியை பங்கேற்க அழைத்தவண்ணம் இருக்கிறார்கள்.
இதனால் அஜித் ஐரோப்பா முழுவதும் நடைபெறும் பந்தயங்களில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதன் முதல்படியாக அஜித் அணி இத்தாலியின் முஜெல்லோ நகரில் மார்ச் 21 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் கலந்துக்கொள்கிறது. இதற்கான பயிற்சி மற்றும் தகுதிச்சுற்று ஆகியவை மார்ச் 19ஆம் தேதி தொடங்குகிறது. இது 12 மணி நேர போட்டியாக நடக்கும்.
இரண்டு ஆண்டுக்கு ஒரு திரைப்படம் என்ற முறையில்தான் நடித்து வரும் அஜித் ஒரு படத்திற்கு ரூ 100 கோடி வாங்குவதாக கூறுகிறார்கள். அவரிடம் சுமார் ரூ36 கோடி மதிப்புள்ள லாம்போர்கினி, BMW 7 series போன்ற பல கார்கள், விலை உயர்ந்த ரேஸ் பைக்குகள் மட்டுமில்லாமல் ஒரு ஜெட் விமானமும் சொந்தமாக இருக்கிறது.
செப்டம்பர் 2024 ல் போர்ஷ (Porsche ) GT3 RS ஐ ரூ3.51 கோடி குடுத்து அஜித் வாங்கினார் என்கிற செய்தி அப்போதே வைரலானது. இந்த வண்டி சராசரியாக ஒரு மணி நேரத்தில் 296 கிமீ கடக்க கூடியது. வெறும் 3 நொடிகளிலேயே 100 கிமீ வேகத்தை தொடக்கூடியது. அந்த வண்டிதான் துபாயில் அஜித்தின் பயிற்சி போட்டியின் போது விபத்தில் சிக்கிய போர்ஷ வாகனம் என்கிறார்கள்.
துபாயில் இறுதிப்போட்டி முடிந்தவுடன் வெற்றியடைந்தவர்களில் முதல், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களை விட, 3 ஆவது இடத்தை பிடித்த அஜித் மற்றும் அவரது அணியினரை சுற்றி தான் அனைத்து கேமிராக்கள் கூட்டமும், கரகோஷமும் குவிந்தது. இப்போட்டிக்கு நிதி உதவி வழங்கிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அடையாளச்சின்னத்தை தங்களது காரில் மற்றும் அணிந்திருந்த சட்டையில் பதித்து அஜித் அணி விளையாடியது குறிப்பிடத்தக்கது.
வெற்றிப்பெற்ற உடன் பேசிய அஜித் தனது மனைவி ஷாலினியை நோக்கி “ என்னை விளையாட அனுமதித்ததற்கு நன்றி ஷாலு !” என்றார்.
ஆம்.. சினிமாவில் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் கார் பந்தயங்களில் போடுவது ஒருப்புறம் இருந்தாலும், மறுப்புறம் இது ஆபத்தான போட்டிகள் ஆகும். அந்தளவு கார் பந்தயங்கள் என்றாலே “கரணம் தப்பினால் மரணம் “ என்ற வகையில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத விளையாட்டு. பயிற்சியின் போதே அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளாகி வண்டி சின்னாப்பின்னம் ஆகியது. இதையெல்லாம் பார்த்தும், மனதிடத்துடன் இதை கையாண்டு , தனது கணவரின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் அவரை ஊக்குவித்து ஆதரவு தருகிற மனைவி என்ற வகையில் உண்மையில் ஷாலினிக்கு பாராட்டுக்கள்.
அடுத்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொள்ளவிருக்கும் அஜித்குமாருக்கு இந்தியா சார்பாக வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
Leave a comment
Upload