திருச்சி அருமையான ஊர் தான்.இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.
.ஆனாலும் அங்கு ஒருவர் போய் வசிப்பதற்கு, வாழ்வதற்க்கு, கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும்,... ... .என்று தான் நினைக்கிறேன்.
ஏன் என்கிறீர்களா? என் வாழ்க்கையில் அப்படிதான் நடந்தது. அதனால் தான் சொல்கிறேன்!
1974 இல் கடைசி வருஷம் நுண் கருவிப் பொறியியல் படித்த சமயம்.கிரோம்பேட்டையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் கருவியியல் கடைசி வருஷப் பரீட்சையை எல்லாம் ஒப்பேத்தி விட்டு பாஸ் பண்ணி வேலைக்காக காத்துக்கொண்டிருந்தபோது, கனரக மின் தொழிற்சாலையின் நேர்முகத் தேர்வு திருச்சியில் நடக்க,கல்லூரி வழியாக அத் தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்ட சில மாணவருள் நானும் ஒருவன்.
ஒரு பொது அறிவு டெஸ்ட் ( சைக்கோ டெஸ்ட் என்று பேர்), பின் நேர்முகத் தேர்வு எல்லாம் எளிதாக முடிந்தது.
ஆக ஒரு வழியா ஜூனியர் எக்ஸி க்யூட்டிவ் ஆகத் தேர்வாகிவிட்டேன்.
அடுத்த நாள் தான் எனக்கு கிளைமாக்ஸ்.... மெடிக்கல் டெஸ்ட்....
கோபு, தியாகராஜன், ஸ்ரீதர் சீதாராமன்... ஆகிய என் கூட செலக்ட் ஆன என் வகுப்புத் தோழர்கள் அனாயாசமாக மெடிக்கலை பாஸ் பண்ண நான் மட்டும் மாட்டிக்கொண்டேன்.
மருத்துவ அதிகாரி என்னை கூப்பிட்டுச் சொன்னார்.
" இந்தா பாரு. வெட வெட னு ஒல்லியா உயரமா இருக்கே. ஆனா வெயிட் 47 கிலோ தான். . அது கூட பரவாயில்லை. செஸ்டு மூச்சு இழுத்தா 73 செண்டிமீட்டர் தான் இருக்கு. இங்கு வேலைக்கு சேர குறைந்த பட்சம் 79செமி வேணும். உனக்கு ஒரு மாசம் தரேன். செஸ்ட 80 செண்டி மீட்டர் ஆக்கிட்டு திரும்பி வா" என்றார்.
" 79 செமி னு தானே டாக்டர் முதல்ல சொன்னீங்க. "என்று பயத்துடன் கேட்டேன்.
" இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. சரி 79 னு வெச்சுக்கோ.
ஆனா கொஞ்சம் குறஞ்சா கூட வேலை எள்ளு தான் ." என்று முறைத்தார்.
மற்றவர்கள் எல்லாம் வேலையில் சேர நான் மட்டும்..இன்று போய் நாளை வா.. ராவணன் கணக்காக வீடு திரும்பினேன்.
இது நான் எதிர்பார்த்தது தான்.
பொறியியல் முதல் வருஷத்தின் போது ராகிங் சமயத்தில் சீனியர்கள் எல்லாம் "உன் வெயிட் எவ்வளவு
அவுன்ஸ்? " என்று தான் கேட்பார்கள்.
அப்போது ஏன் கிலோவில் கேட்கவில்லை என்று முதலில் புரியவில்லை.
ஒரு அவுன்ஸ் என்பது 28.35 கிராம் தான் என்று அப்புறம் தான் கண்டுபிடித்தேன்.
பின்னர் மழை பெய்யும் போது வகுப்புதோழர்கள் என்னுடன்
" உனக்கு ஜாலி. குடை வேண்டாம்.
மழைத்துளிகள் நடுவில் நடந்து நனையாமல் சென்றுவிடுவாய் என்று பொறாமைப்படுவார்கள்.
நண்பர்களின் ஹாஸ்டல் அறைக்குள் நான் செல்லும்போது ஜன்னலை சாத்தி, காத்துல என்னைப் பறந்து விடாமல் காப்பாற்ற முனைவதாக வெறுப்பேற்றுவார்கள்.
உடல் எடையைக்கூட்டுவதற்கு அக்காலத்தில் நான் எவ்வகை முயற்சியும் எடுத்ததாக நினைவில்லை.எடுத்தாலும் ஒரு கிராம் கூடுமா என்று கூட எனக்கும் நம்பிக்கையில்லை. அதனால் கவலையற்று ஜாலியாக இருந்தேன்.
ஆனால் மெடிக்கலுக்கு அப்புறம் இன்று நிலைமை மாறிவிட்டது.
வீட்டுக்கு திரும்பியதும் சோகமாக திருச்சி வேலை விஷயம் சொன்னேன்.
அப்பா,அம்மா ரெண்டு பேரும்
என்னைத் தேற்றினார்கள்.
பாட்டி "பழையது சாப்பிடு.. எருமைத் தயிர் விட்டு. ஒரு மாசத்தில் பயில்வான் ஆகி விடுவாய்". என்றாள்.
தினமும் இரண்டு முட்டை பச்சை யாக உடைத்து வாயில் ஊற்றிக்கொண்டால் ஒரு மாசத்தில் கொஞ்சம் உடல் தேற வாய்ப்புண்டு
என்று அம்மா சொன்னாள்.
அந்தக்காலத்தில் டி. பி. நோயாளிகளுக்கு இப்படித்தான் உடம்பை தேற்றுவார்கள் என்று வேறு அப்பா சொன்ன போது பயமும் கோபமும் ஏற்பட்டது.
ரெண்டு நாள்... முட்டை, பழைய சோறு சாப்பிட்டு கொஞ்சம் தண்டால் பஸ்கி என்று பரீட்சார்த்தமாக எடுத்துப்பார்த்தேன்.முன்பின் அனுபவமின்மையால்
சில பக்க விளைவுகள் இதனால் ஏற்பட்டதைத் தடுக்க முடியலை.
தண்டால் எடுக்கும் போது ஊன்றிய வலக் கை வழுக்க, முகம் தரையில் இடிக்க,முன் பல்லில் ஒரு முக்கோண பாகம் உடைந்து போய் விட்டது. வழுக்கிய கை மணிக்கட்டில் சுளுக்கு மற்றும் வீக்கம்.
தவிர முட்டையும் தயிறுசாதமும் வயி ற்றில் ஒற்றுமையற்று முரண்பட ஒரே அஜீரணம்.
மூன்றாம் நாள் உடல் முன்னேற்ற
திட்டங்களை தற்காலிகமாக ஒதுக்கினேன்.
நாள் காட்டி வேறு,...கவுண்ட் டௌன் மோடில் "உனக்கு 27 நாள் தான் பாக்கி உள்ளது" என்று பயமுறுத்தியது.
என் வீடு கிரோம் பேட்டையில் என் பொறியியல் கல்லூரியிலிருந்து ஒரு கி மீ தள்ளி இருந்தது.
அன்று கல்லூரி சென்றிருந்தேன்.
படிப்பு முடிந்து ஹாஸ்டல் ரூமைக் காலி பண்ணும் பணியிலிருந்த சில வகுப்புத் தோழர்களைச் சந்திக்க முடிந்தது.
நண்பன் விஸ்வ குமாரும் இருந்தான். அவனுடன் அவன் அறைக்கு சென்றேன் .
குமார் கல்லூரியின் பளு தூக்கும்
சாம்பியன்.6 அடியில் 100 கிலோக்கு மேற்பட்ட உருவம். அவன் ரூம் மூலையில் குவிந்திருந்த பொருள்களில் ஒன்று
என் கவனத்தை ஈர்த்தது...
.. மூன்று ஸ்ப்ரிங் அமைக்கப்பட்ட புல் ஒர்க்கர் மாதிரி சதானம்.
"இழுத்து,.. விட்டு, இழுத்து...விட்டு என்று செய்தால் மார்பு விரியும். இதை வேணும்னா எடுத்துக்கோ மேன். மே ஹெல்ப் யூ."... விஸ்வ குமார்.
"உனக்கு? " என்றேன்.
"எனக்கு இதெல்லாம் டாய் மாதிரி.
நீ யூஸ் பண்ணு மேன்." என்றான்.
ஸ்ப்ரிங் சமாச்சாரத்தை விஸ்வகுமார் எடுத்து என் கையில் வைத்தான். பய பக்தியுடன் வாங்கிக்கொண்டேன்.கர்ணனிடம் கவச குண்டலம் வாங்கிய இந்திரன்
போல பீலிங் இருந்தது.
குமார் அனாயாசமாக ஒரு சிறு டெமோ,அதை வைத்து செய்து காண்பித்தான். நான் முயற்சித்து எனக்கு முடியல.
" வீட்டில் போய் செய்யறேன்...
தேங்க்ஸ் டா. " என்று ஸ்ப்ரிங்கும் கையையுமாக வீடு சென்றேன்.
இரண்டு நாள் கடும் முயற்சியில் ஸ்ப்ரிங் கொஞ்சம் எனக்காக மனம் இளகி ஒத்துழைத்தது..
இரண்டு பச்சை முட்டை + ஸ்ப்ரிங் என்ற என் பார்முலா உருவானது.
இப்படி ஒரு வாரம் போச்சு.
ஞாயிறு அன்று திருச்சியிலிருந்து சீதாராமன் வந்திருந்தான்.
"ஏண்டா ஒரு மாசத்துக்குள்ள ஒழுங்கா செஸ்ட சரி பண்ணிட்டு திருச்சி வந்து தொலை. நாம தங்க ரூம் எல்லாம் பாத்தாச்சு. "என்றான்.
மேலும் "திருச்சி ல எக்கச் சக்கமா தியேட்டர் இருக்கா, டெய்லி ஒரு சினிமா பாக்க முடியுது." என்று என் ஆவலை வேறு தூண்டினான்.
ஸ்ப்ரிங்கை காண்பித்து நான் பயிற்சி செய்வதைக் கூறினேன்.
சீதாராமன் சிரித்தான்.
"உனக்கு எதுக்குடா இதெல்லாம்.
நீ பல் தேக்கற பிரஷ்ஐ, பத்து தடவை தூக்கி தூக்கி கீழ வெச்சாலே போறுமே!! "
அடுத்த நாள் வெளியே போகும் போது என் வீடு தாண்டி வலப்பக்கம் திரும்பினால் இரண்டாவது வீடு எங்கள் ப்ரோபஸர் சர்மாவுடையது. ஒவ்வொரு முறை அவர் வீட்டை கடக்கும் போதும் ஒரு
வித (அவசியமில்லாத) பயம் ஏற்படும்.
அன்றும் ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற் போல் பேராசிரியர் என்னை கூப்பிட்டார்.தயக்கத்துடன்அவர் வீட்டு கேட் அருகில் நின்றேன்.
"திருச்சி தேர்வு என்ன ஆச்சு?" என்றார். விஷயத்தைச் சொன்னேன்.
இடி இடி என்று சிரித்த சர்மாக்கு இருமலே வந்து விட்டது.
"என்ன செய்யப் போறே?" என்றார்.
முட்டை + ஸ்ப்ரிங் விஷயம் கூற மறுபடி சிரித்தார்.
பின் ஐஸ் கிரீம், சீஸ், காட்பரி சாக்லேட், பாதாம் என்று ஒரு பணக்கார மெனுவைப் பரிந்துரைத்தார்.
பின் கொஞ்சம் பரிதாபமாகப் பார்த்து,
"வேறு இன்டெர்வியூ ஏதாவது வரும் போது உனக்கு சொல்கிறேன்" என்றார்.
மரியாதையுடன் தலையை ஆட்டிவிட்டு வந்தேன்.
மேலும் ஒரு வாரம் சென்றது.
நமக்கு ரொம்ப நாளா டைபாய்டு ஜுரம் இருக்கும் போது ஒரு டிகிரி ஜுரம் குறைந்தால் கூட ஒரு புளகாங்கிதம் ஏற்படுமே அப்படித் தான் ஏற்பட்டது அன்று.
மார்புக்கூட்டை டேப் வெச்சு அளந்த போது போது 75 செமி காட்டியது. அதாவது 2 செமி கூடியிருந்தது.
உற்சாகம் பெருக்கெடுக்க காலை மாலை இரண்டு வேளையும் 2 முட்டை +ஸ்ப்ரிங் பார்முலாவை அமல் படுத்த,, மார்புக்கூடு அசுர வளர்ச்சி கண்டது. ஒரு மாச கெடு முடியும் நேரம்.
க்ரோம் பேட்டை முருகன், மயிலை கபாலி, & கற்பகாம்பிக்கை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வரச் சொன்னாள் அம்மா. லஸ் ஆஞ்சனேயருக்கு வடைமாலை வேறு.
எல்லாம் செய்தேன்.
திருச்சிக்கு ராக்போர்ட் இல் 2 டைர் ஏ சி டிக்கெட் வாங்கினார் அப்பா... (வாழ்க்கையில் முதல் தடவை! )
ரயில் பயணத்தின் போது டயர்ட் ஆகி ஒண்ணு ரெண்டு செ மி குறைந்து விடக்கூடாதே என்ற கவலையில்.
கிளம்பும் அன்று சரியாக 79 செமி வந்துவிட்டது.
கனரக மின் தொழிற்சாலையில் என் அக்காவின் ஆருயிர்த் தோழி மற்றும் தோழி கணவர் இருவரும் டாக்டர்களாக இருந்தனர்.
டாக்டர் கணவரிடம் எஸ் டி டி போனில் பேசின போது,
"திருச்சி வந்ததும் நேர எங்க குவாட்டர்ஸ் வந்து விடு. நானே செஸ்டை அளந்து பார்க்கிறேன். அரை செமி வரை குறையலாம், பரவாயில்லை . சி எம் ஒ( chief medical officer )கிட்ட சொல்லிப் பார்க்கலாம்." என்றார்.
" மேலும் குறைஞ்சா"....என்று சந்தேகத்துடன் கேட்டேன்.
"பேசாம வேற வேலை பாத்துக்கோ."
என்று போனை வைத்துவிட்டார்.
ஆடாமல் அலுங்காமல் ரயிலில் ஏறினேன். ( சௌகரியமா கீழ் பர்த் வேற! ).
ஸ்ப்ரிங் ஐ மறக்காமல் எடுத்துக்கொண்டேன்.
திருச்சி வந்து தில்லை நகரில் சீதாராமன் பார்த்திருக்கும் ரூம் சென்று குளித்து, ரெண்டு முட்டை வாங்கி சாப்பிட்டு, ஸ்ப்ரிங் இழுத்து விட்டு டேப்பால் அளந்தால் சரியா
79 செமி இருந்தது.
டாக்டர் (தோழி கணவர் ) வீட்டில்
அவர் டேப்பால் அளந்தப்போது,
" இன்னும் மூச்சை இழு..இழு ..."என்று சொல்லி,
" எழுவத்தெட்டரை தான் இருக்கு. பரவாயில்லை. ஆனா இப்போ சி எம் ஒ கிட்ட மூச்சிழுத்து ஒரே தம்ல காட்டிடு. மொத
இம்ப்பிரஷன் ரொம்ப முக்கியம். " என்றார்.
என் வாழ்நாளின் அதி முக்கியமான அந்த மூச்சை சி எம் ஒ முன்னால முதல் முறையிலே நான் இழுத்து தம் பிடிக்க, சி எம் ஒ டேப்பால் அளந்தப்படியே என்னைப்பார்த்து புன்னகைத்தார். "ஒகே. "
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து
ஜெயித்த மாதிரி இருந்தது.
அடுத்த நாள் வேலையில் சேர்ந்து விட்டேன். மூட்டை + ஸ்ப்ரிங் ஐ எல்லாம் அன்றே சுத்தமாக மறக்க,
முடிச்சு இளகின பலூன் போல மார்பு சுருங்க ஆரமிக்க,அடுத்த வாரமே என் பழைய ஆரோக்கிய மார்பு நிலையை(73செ மி ) மகிழ்ச்சியுடன் அடைந்தேன்!!
கனரக மின் தொழிற் சாலையின்
79 செமி செஸ்ட் இலக்கையும், நான் ஆசைப்பட்ட 50 கிலோ( ஐஸ்வர்யா ராய் இல்லை!) உடல் எடையயும் ஒன்று சேர,நான் முழுமையாக அடைய அடுத்த ஏழு வருஷங்கள் தேவைப்பட்டன.
ஆனால் இந்த அசுர சாதனையை நான் செய்த போது,இதன் கிரியா ஊக்கியாக, காரண கர்த்தாவாக இருந்த அந்த திருச்சி கனரக மின் ஆலையை விட்டுப் பிரிந்து விட்டிருந்தேன் என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்!
Leave a comment
Upload