தொடர்கள்
கதை
மரண வாக்குமூலம் - சாய் விஜேந்திரன்

20221116225343990.jpg

இன்று என்னுடைய வாழ்க்கையின் கடைசி நாளாக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கிறேன். நான் இறப்பதற்கு முன் என்னுடைய மரண வாக்குமூலத்தை உங்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன். நான் சொல்வது வேறு யாருக்கும் கேட்காது, புரியாது. நான் ஏதோ பிதற்றுவதாக நினைத்துக்கொள்வார்கள். ஆனால் என்னுடைய கதையை படிக்கும் உங்களுக்கு என்னுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் கட்டாயமாக புரியும். இந்த கதையின் நாயகி நான் தான். நான் அங்கே இருக்கும் மாட்டுத்தொழுவதில் தான் பிறந்தேன் என்று என்னுடைய அம்மா சொல்லியிருக்கிறாள்.

என்னுடைய அம்மா என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் அப்பாவை நான் பார்த்ததில்லை. அதைப்பற்றி அம்மாவிடம் கேட்டதும் இல்லை. அந்த குறை தெரியாமல் அம்மாவும் எங்களுடைய முதலாளியும் எங்களை கண்ணின் இமைபோல பாதுகாத்தார். எனக்கு பசி எடுப்பதற்கு முன்பாக்கவே எனக்கு தேவையான உணவு என்னை தேடி வந்துவிடும். தேவைக்கு அதிகமான உணவு, உறங்க நல்ல வசதியான இடம் என்று எந்த குறையும் இல்லை. நான் என்னுடைய தம்பி மற்றும் தங்கைகள் மாட்டு தொழுவத்தின் பக்கத்திலேயே விளையாடுவோம்.

ஒரு நாள் பெரிய பாம்பு ஒன்று நாங்கள் தங்கும் இடம் தேடி வந்துவிட்டது. அம்மா பதறிப்போய் கூச்சலிட்டாள். ஏதோ சத்தம் வருகிறதே என்று தெரிந்து எங்களுடைய முதலாளி ஓடி வந்தார். பாம்பை பார்த்ததும் பெரிய குச்சியை எடுத்து ஒரே அடி. அடுத்த நொடியே அதனுடைய உயிர் பிரிந்தது. எங்கள் மேல் முதலாளிக்கு எவ்வளவு அக்கறை என்று அம்மாவிடம் சிலாகித்து பேசியிருக்கிறேன். நான் அவருடைய வீட்டிற்குள் போகாத இடமே இல்லை. அவரின் பிள்ளைகள் என்னுடன் பாசமாக இருப்பார்கள்.

சில காலம் கழித்து என்னை முதலாளி ஒரு தனி இடத்திற்கு அழைத்துச்சென்றார். "உனக்கு இப்ப ஒரு துணை தேவை. சந்தோஷமா இரு" என்று என்னிடம் சொன்னார். அது நாள் வரை சிற்றின்பம் என்றால் என்ன என்று தெரியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளர்ந்துவிட்ட எனக்கு அந்த நொடிகள் சொர்க்கமாக இருந்தது. தனியாக இருக்கும்பொழுது மனம் அதையே எண்ணி எண்ணி சந்தோசப்பட்டது.

இரண்டாவது நாளும் என்னை என்னுடைய துணையின் இடத்திற்கு அழைத்துச்சென்றார் "முருகேசா. ஜமாய்டா" என்று சொல்லி என்னுடைய சிற்றின்பத்திற்கு துணை தேடி தந்தார். அதிலிருந்து மூன்று முறை மட்டுமே முருகேசனை பார்த்திருக்கிறேன். உல்லாசத்தை அனுபவித்திருக்கிறேன். அதற்கு பிறகு அவனை நான் பார்க்கவே இல்லை. இதைப்பற்றி அம்மாவிடம் எப்படி கேட்பது என்றும் தெரியவில்லை.

காலம் கடந்தது நான் என்னுடைய முதல் பிள்ளையை ஈன்றேடுத்தேன். முதல் பிரசவம் என்பதால் வலியால் துடித்தேன். அம்மாவும் என்னுடைய முதலாளியும் என் பக்கத்திலேயே இருந்தார்கள். என் பிள்ளைகளை அவர் எப்பொழுதும் கையில் வைத்து கொஞ்சுவார். ஆனால் என் பிள்ளைகள் அவரை பார்த்து பயந்து ஓடும்.

ஒரு நாள் என்னுடைய அம்மாவை காணவில்லை. எப்பொழுதும் இரவு என்னுடன் தான் தூங்குவார். ஆனால் ஏனோ வரவில்லை. முதலாளியிடம் கேட்டு பார்த்தேன், கத்திப்பார்த்தேன். பிரயோஜனம் இல்லை. நான் சொல்வது அவருக்கு புரியவே இல்லை. சில நாட்கள் கடந்தது அம்மா வரவில்லை. என்னுடைய பக்கத்துக்கு அறையில் தங்குபவள் என்னிடம் இதை சொன்னாள்.

"உங்க அம்மாவை போன வாரம் நான் பார்த்தேன். நம்ம முதலாளி தான் யாரிடமோ விலை பேசி விற்றார்" என்றாள் அவள்.

"இல்லை நான் நம்ப மாட்டேன். அவர் அப்படிப்பட்டவர் இல்லை" என்றேன் நான்.

"நீ நெனைக்குற மாதிரியான ஆள் அவர் இல்லை. யாருக்கும் தெரியாமல் நான் உளவு பார்த்து சில செய்திகள் வச்சிருக்கேன். இங்கேர்த்து கூடிய சீக்கிரம் தப்பிச்சிடுவேன்" என்றாள் அவள்.

"என்ன சொல்ற? உண்மைய சொல்லு" என்றேன் நான்.

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீ மட்டும் இல்லை. என்னையும் முருகேசன் கிட்ட கூட்டிட்டு போனார் நம்ம முதலாளி. நான் கேட்ட வரைக்கும் ரொம்ப பேர் முருகேசனோட பெற சொல்லறாங்க" என்றாள் அவள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படிப்பட்ட கீழ்த்தரமானவரா இவர் என்று நினைத்தேன்.

"சரி. இப்போ அம்மாவை முருகேசன் கிட்டையா கூட்டிட்டு போயிருக்காங்க?" என்று நான் கேட்டேன்.

"இல்ல. உங்க அம்மாவை பலி குடுக்க போறதா பேசிக்கிட்டாங்க. அப்படி செஞ்சா வாங்குனவரோட குடும்பம் ஜொலிக்குமாம்" என்றாள் அவள். சிறிது இடைவெளிக்கு பிறகு தொடர்ந்தாள் "எல்லாரையும் இப்படி பலி குடுக்கறதில்லை. சில பேரு அவங்களோட அடங்காத பசிக்கும் நம்மள இறையாகிடறாங்க. நாமெல்லோரும் கூடிய சீக்கிரம் பல பேரோட பசிக்கு பலியாகப்போறோம்" என்று முடித்து தான் தாமதம். எனக்கு உடல் முழுக்க நடுக்கம் ஏற்பட்டது. சே! எப்படிப்பட்ட மனிதன் இவன். எவ்வளவு பாசம், நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் இப்படி செய்வான் என்று நினைக்கவில்லை. என்னுடைய பிள்ளைகள் எல்லோரும் சின்ன குழந்தைகள். நான் மட்டும் அவர்களை விட்டு எப்படி தப்பிப்பது என்று தோன்றியது.

அன்றிலிருந்து நான் சரியாக சாப்பிடவில்லை. என்னுடைய உடல் எடையும் குறைய ஆரம்பித்தது. இதைப்பார்த்து என்னுடைய முதலாளிக்கு கவலை வந்தது. அவர் என்னவெல்லாமோ செய்து பார்த்தார். நான் சாப்பிடவே இல்லை. பிறகு எனக்கு ஒரு ஊசி போட்டார். அதிலிருந்து காணாததை கண்டது மாதுரி சாப்பிடத்தொடங்கினேன். ஒரு வாரத்தில் என்னுடைய எடை பல மடங்காக கூடியது. கழுத்துக்கு கீழே உப்பி அசிங்கமாக உடல் தெரிந்தது. அந்த எடையை வைத்துக்கொண்டு என்னால் நகரவே முடியவில்லை. இந்த நிலையில் நான் எப்படி தப்பிப்பேன்?

ஒரு நாள் எங்களை வாங்குவதற்கு ஒருவன் வந்தான். அவன் கண்ணில் நான் தான் முதலில் தென்பட்டேன். என்னை அப்படியே கையில் எடுத்து எடை பார்த்து சந்தோஷப்பட்டான். என்னை இங்கேயே வெட்டிவிடுவதாக சொன்னான். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது என்னை வெட்டிவிடலாம் என்கிற சூழலில் தான் என்னுடைய கதையை உங்களிடம் மரண வாக்குமூலமாக சொல்கிறேன். முதலாளி வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்தார்.

"நான் கால் ரெண்டையும் பிடிச்சிக்கறேன். நீங்க தலையை கெட்டியா புடிச்சி கழுத்துல ஒரு கீறல் போடுங்க. ரத்தமெல்லாம் உடனடியா வெளிய வந்துடும்" என்றார் முதலாளி. அட கிராதகா. என்னை ஒரே வெட்டில் வெட்டியிருக்கலாமே! அதை விட்டுவிட்டு கழுத்தில் மட்டும் ஒரு வெட்டு வெட்டி நான் துடிக்க துடிக்க செத்துப்போவதை நீ பார்க்கவேண்டுமா? என்று தோன்றுகிறது. வந்தவன் என்னுடைய தலையை பிடித்து கழுத்தில் வெட்ட வந்தான் ஆனால் நான் தலையை திரும்பிவிட்டேன். அந்த கூரான கத்தி அவனுடைய கையை ஒரு பதம் பார்த்துவிட்டது.

"என்ன தம்பி புடிக்கிறீங்க. இப்படி வந்து கால புடிங்க. நான் வெட்டுறேன் பாருங்க" என்று சொல்லி என் காலை வந்தவனும், என்னுடைய தலையை என் முதலாளியும் கெட்டியாக பிடித்துக்கொண்டனர். கடைசியாக அவரை ஒரு முறை நான் பார்க்கிறேன். இப்பொழுதாவது உங்களின் நெஞ்சில் கொஞ்சமாவது இரக்கம் இருக்கிறதா? இந்த காசிற்காகவும், உங்கள் பசிக்காகவும் தான் என்னை வளர்த்தீர்களா? இன்னும் என்னைப்போன்றவர்கள் எவ்வளவு பேர் உங்களின் நாக்கு ருசிக்காக கதறி கதறி பலியாகப்போகிறார்கள் என்று தெரியவில்லையே? நீங்கள் வாழும் உலகத்தில் நாங்கள் உங்களுக்கு அடிமையாகவே இருந்து செத்துவிடவேண்டியதுதானா? என்று தோன்றுகிறது.

எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் என்னுடைய கழுத்தில் கூரான கத்தியை வைத்து கிழித்தார் முதலாளி. கத்தவே முடியவில்லை. ரத்தம் பீறிட்டு அவருடைய முகத்தில் அடித்தது. நீங்கள் கொடுத்த தீனியெல்லாம் உங்கள் மேல் ரத்தமாக திரும்ப கொடுத்துவிட்டேன். என்னுடைய கண்கள் இருளுகிறது. என்னுடைய உயிர் என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரிவது தெரிகிறது. முதலாளியின் சிரிப்பை மங்கலாக பார்க்கமுடிகிறது. இதோ என்னுடைய கடைசி வினாடி. உங்களுக்காகவே பிறந்தேன், உங்களுக்காகவே மடிகிறேன். என்னை கொன்ற பாவம் உங்களுக்கு வராது. ஏனென்றால் நான் உங்களை மன்னித்துவிட்டேன்.

இப்படிக்கு உங்கள் பண்ணையின் அன்புள்ள கோழிகளில் ஒருத்தி.