தொடர்கள்
கவர் ஸ்டோரி
காலியாகும் காங்கிரஸ் கூடாரம் தடுக்குமா நடைபயணம் ?? விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

20220810074935685.jpg

உதயப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனை மாநாட்டில் ராகுல் காந்தி சொன்னது தான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை. பாரதிய ஜனதாவின் நிஜ முகத்தை இந்தியா முழுவதும் வெளிப்படுத்துவோம் என்றார். அது முதல் ஒற்றுமை நடைபயணம் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள் அதை எப்படி நடத்துவது போன்ற ஆலோசனைகள் எல்லா மாநிலங்களிலும் நடந்தது. செப்டம்பர் ஏழாம் தேதி இந்திய ஒற்றுமைப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கப்படும் 150 நாள் நடைபயணம் 3500 கிலோமீட்டர் நடந்து காஷ்மீரில் பயணம் நிறைவடையும் என்று அறிவித்தது காங்கிரஸ் இந்த நடைபயணத்தை தேசியக்கொடியை வழங்கி தொடங்கி வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை தவிர எந்த கட்சிக்கும் அழைப்பில்லை. இந்த ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்தி முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும் என்பதில் ராகுல்காந்தி உறுதியாக இருந்தார்.

20220810064735765.jpg

நன்றி: தினமணி

கடந்த ஒரு ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட குழப்பம் புகைச்சல். ஜி 23 என்ற பெயரில் குலாம் நபி ஆசாத், கபில்சிபல், ஆனந்த் சர்மா போன்ற முக்கிய தலைவர்கள் சோனியா குடும்பத்திற்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்தார்கள். எவ்வளவு நாட்கள் இடைக்கால தலைவர் கட்சியை நடத்துவது பாரம்பரியமான தேசிய கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டாமா கட்சித் தலைவர் தேர்தலை நடத்துங்கள் அப்படி இல்லை என்றால் உங்களில் யாராவது ஒருவர் நிரந்தர தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார்கள், இதை முதலில் சோனியாகாந்தி அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அதிருப்தி தலைவர்கள் ஊடகங்கள் மூலம் சோனியாவை கேள்வி கேட்டார்கள். அதன் பிறகு அவர்கள் எல்லோரையும் அழைத்து பேசினார், ஆனாலும் பிரச்சனை தீரவில்லை.

20220810075008176.jpg

ராகுல் காந்தியைப் பொறுத்தவரை கடந்த வருடம் அதாவது இந்த நடை பயணத்திற்கு முன் வரை கட்சியில் அவரது பங்களிப்பு என்பது சொல்லிக்கொள்ளும்படி இல்லை கடைசியாக அவர் பாராளுமன்றத்தில் பேசியது நீங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறீர்கள், ஆனால் பாரதிய ஜனதா நீட் விலக்கு தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறது. உங்களை தமிழர்கள் எந்த சூழ்நிலையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று பிரதமரையும் குற்றம்சாட்டி பேசிவிட்டு வெளியே வந்தார். பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்கள் திடீரென்று தமிழ்நாட்டின் மீது உங்களுக்கு ஏன் அதீத அக்கறை என்று கேட்டபோது நானும் தமிழன் தானே என்று இந்தியில் பதில் சொன்னார் ராகுல் காந்தி.

ஒரு பக்கம் பாதயாத்திரை ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் போது மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ராஜ்யசபா வாய்ப்பு காங்கிரஸ் கட்சியில் பிரகாசமாக இல்லை என்று தெரிந்த உடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் ராஜ்யசபா எம்பி ஆனார்.

20220810075106732.jpg

குலாம் நபி ஆசாத் ராகுல் காந்தி ஒரு ஜோக்கர் திறமையற்றவர் காங்கிரஸ் இன்று சீரழிந்த நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்திதான் என்று பத்து பக்கத்திற்கு சோனியா காந்திக்கு கடிதம் எழுதி கட்சியை விட்டு விலகினார் குலாம் நபி ஆசாத். காஷ்மீர் முதல்வர் மத்திய அமைச்சர் என்று ஆளும் கட்சியாக காங்கிரஸில் எல்லா பதவிகளையும் அனுபவித்துவிட்டு இப்போது கட்சியே வேண்டாம் என்று விலகியிருக்கிறார் குலாம் நபி ஆசாத். காஷ்மீரில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார் குலாம்நபி ஆசாத். காஷ்மீரில் இருக்கும் 80 சதவீத காங்கிரஸ் நிர்வாகிகள் குலாம் நபி ஆசாத் ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

இப்போது சோனியா காந்தி கட்சி தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் எம்பி சசி தரூர் நான் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொல்லி வருகிறார், ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ராகுல் காந்தி தலைவர் பதவி வேண்டாம் என்று சொன்னாலும் அவர் தான் எங்கள் தலைவர் என்று சொல்லி வருகிறார். இதுதான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைமை.

ஏழாம் தேதி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்கிவிட்டது முதல்வர் ஸ்டாலின் ராகுல்காந்திக்கு தேசியக்கொடி வழங்கி வாழ்த்து சொல்லி நடைபயணத்தை தொடக்கி வைத்திருக்கிறார். இது இப்போதைக்கு ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது இது காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியா என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களே அப்படியெல்லாம் பெரும் எழுச்சி என்று சொல்லமாட்டார்கள். காஷ்மீர் வரை ராகுல் காந்தி சென்று தனது நடைபயணத்தை முடிக்கட்டும் என்று தான் உஷாராக கருத்து சொல்வார்கள் கிட்டத்தட்ட அது உண்மையும் கூட

காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அதேசமயம் எதிர்க்கட்சியில் பிரதமர் வேட்பாளர்கள் கொஞ்சம் கடைசியாக அந்த கியூ வரிசையில் இணைந்திருக்கிறார் நிதிஷ் குமார். அதேசமயம் அடிக்கடி நான் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இல்லை என்று தொடர்ந்து சொல்லியபடி சில தினங்களுக்கு முன்பு மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராகுல் காந்தி ,சீதாராம் யெச்சூரி, கெஜ்ரிவால் சரத்பவார், அகிலேஷ் யாதவ் என்று எல்லோரையும் சந்தித்து விட்டு இப்போதைக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு அவசியம் யார் தலைமையில் என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்று அதேசமயம் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி ராஷ்ட்ரிய ஜனதா தள பிரதமர் வேட்பாளர் நிதீஷ் குமார் தான் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் இதையும் கவனிக்க வேண்டும்.

பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றவர் மீது பிடிவாரன்ட் இருப்பது கூட தெரியாமல் அவரை அமைச்சரவை சேர்த்துக்கொண்டார் நிதீஷ் குமார். எனக்கு அவர் மீது வழக்கு இருப்பதே தெரியாது என்று சொன்னார் நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்கள் பெரும்பாலோர் மீதுகுற்ற வழக்குகள் இருந்தும் ஆட்சி அதிகாரத்திற்காக நிதிஷ் குமார் அவர்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்தக் கட்சி தான் நிதிஷ் குமாரை எங்கள் பிரதமர் வேட்பாளர் என்கிறது.

அதேசமயம் ராகுல் காந்தியின் நடைபயணம் திடீர் சுறுசுறுப்பு பாரதிய ஜனதாவை யோசிக்க வைத்திருக்கிறது,அதனால் தான் அண்ணாமலை முதல் மத்திய அமைச்சர்கள் வரை ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதாவுக்கு என்று பெரிதாக கூட்டணி பலம் எல்லாம் இல்லை. பாரதிய ஜனதா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி சில மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்பது உண்மை.

பாரதிய ஜனதா கட்சிதான் இப்போதைக்கு பாராளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கி விட்டிருக்கிறது. பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்று ஏற்கனவே அமித்ஷா அறிவித்துவிட்டார். 144தொகுதிகளில் பாரதிய ஜனதாவின் வெற்றி கேள்விக்குறி என்று அடையாளம் காண பட்டு அந்த தொகுதிகளில் சரி செய்ய அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளை முடிக்கிவிட்டிருந்தது. பாரதிய ஜனதா சென்ற வாரம் அந்த நிர்வாகிகள் அமைச்சர்களுடன் அமித்ஷாவும் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் ஜேபி நட்டாவும் ஆலோசனை செய்தார்கள். இப்போதைக்கு தேர்தலை சந்திக்க தயார் நிலையில் இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா தான் என்பது உண்மைதான். அதேசமயம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜார்க்கண்ட் முதல்வர், ஹேமந்த் சோரன் பீகார் முதல்வர், நிதிஷ்குமார் மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி ஆகியோர் பாரதிய ஜனதாவை கடுமையாக சாடி வருகிறார்கள் அவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை சரியாக கட்டமைத்து செய்து வருகிறார்கள் என்பதும் உண்மை.

20220810075248617.jpg

2024 தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கே தெரியும். அதேசமயம் ராகுல் காந்தியின் நடைபயணம் வாக்காளர்களுக்கு எந்தவித மனமாற்றத்தை தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ராகுல் காந்தி நடைபயணம் ஆரம்பம் அபாரம் இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும். ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவருக்கு என்று மறைமுக அஜெண்டா எல்லாம் எதுவும் இல்லை அவரது ஒரே குறி மோடி தான். மோடி மீது தான் 10 வருடம் தொடர்ந்து மக்கள் ஒரு மாற்றத்தை எதிர் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் ராகுல் காந்திக்கு இருக்கிறது அது உண்மையா பொய்யா என்பதை இன்னும் 15 மாதங்களில் தெரிந்து விடும்.