தொடர்கள்
அனுபவம்
ராணி ...மகாராணி-மரியா சிவானந்தம்

20220809205259237.jpeg

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் II தன் 96 ஆவது வயதில் நேற்று மறைந்தார் .

நம் ஊர் பக்கம் இத்தகைய இறப்பை, "கல்யாண சாவு" என்று கொண்டாடி தீர்ப்பார்கள். கிராமப்புறங்களில் ஆட்டம், பாட்டம், கெடாவெட்டு என்று அமர்க்களப்படும். அழுகை குறைந்த அல்லது அழுகையே இல்லாத இந்த மரணங்களில் " ஆண்டு, அன்பவித்து' போய் சேர்ந்தார்கள், கொடுத்து வச்சவங்க என்று பெரிசுகள் பேசிக் கொள்வார்கள். நிஜமாகவே எலிசபெத் மகாராணியார் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டும், சலிக்க சலிக்க அனுபவித்தும் நாம் கனவிலும் கற்பனை செய்ய முடியாத ராஜ வாழ்க்கை வாழ்ந்த பின்பே மறைந்துள்ளார். அரசியின் மேல் பேரன்பு கொண்ட இங்கிலாந்து மக்களுடன் உலகமே துயரம் கொண்டுள்ளது .

இந்திய அரசு அரசியின் மரணத்துக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் செப்டெம்பர் 11 ஆம் நாளை குறித்துள்ளது .அன்று அரசுமுறை நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "நம் நாட்டை அடிமைப்படுத்தி, கொள்ளை அடித்த ஒரு நாட்டின் அரசியின் மரணத்துக்கு நமது அரசு என் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் ? என்று ஒரு ஒரு சாரார் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். வேறு ஒரு சிலர் அவரது எதிர்மறை பக்கங்களைத் தேடி அலசி ஆராய்ந்து வருகிறார்கள் . மறைந்த ஒருவரைப் பற்றி குறைப்பட பேசுவதும் , எழுதுவதும் 'நயத்தக்க நாகரிகம் ' அல்ல. எனவே அவரது சிறப்பு இயல்புகளைப் பற்றியும் , இந்தியா மீது அவர் கொண்ட அன்பினைப் பற்றியும் 'விகடகவி ' நினைவு கூர விரும்புகிறது .

இரண்டாம் எலிசபெத் ராணியார் நீண்ட நாள் வாழ்ந்தவர் மட்டுமல்ல , நீண்ட காலம் , ஏறத்தாழ எழுபது ஆண்டு காலம் அரசுக்கட்டிலில் அமர்ந்து ஆட்சி செலுத்தியவர் . வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், 72 ஆண்டுகள் ஆட்சி செய்த 14ஆம் லூயி மன்னருக்குப் பின் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர் இவர்தான். வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி ,இந்த வாரம் பதவியேற்ற லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதமர்கள் இவரது ஆட்சிக்காலத்தில் மக்களாட்சியின் பிரதிநிதிகளானார்கள். ஆங்கில கொடி பறந்த நாடுகள் பல இவரது ஆட்சிக்காலத்தில் விடுதலை பெற்றன.

அரச வாழ்க்கையை அனுபவித்த போதும் இவர் எளிய உணவு , சீரான உடற்பயிற்சியை கடைபிடித்தவர். 101 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அவர் அன்னையை விட எலிசபெத் ராணி அதிக ஆண்டுகள் வாழ்வார் என்று மக்கள் நம்ப அவரது வாழ்க்கை முறையே காரணம்.

எந்த கடுமையான சோதனையிலும் மனம் தளராத உறுதி, எப்போதும் நிதானம் இழக்காத மனநிலை இவற்றை அவர் அணிந்த வைர நகைகளை விட அழகான ஆபரணமாக சூட்டிக் கொண்டவர் அரசி . "You can never see wrinkles in her forehead" என்று அவர் வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார் . அவர் உடுத்தும் உடைகள் அவரது தோற்றத்துக்கு பெரும் மதிப்பைத் தந்தது. She was always gorgeous and graceful.

20220809204554453.jpg

வைர நகை என்ற போது கோஹினூரின் நினைவு வராமல் இல்லை . வைர நகைகள் மேல் பெருங்காதல் கொண்டவர் அரசியார். அவரது சேகரிப்பில் உலகத்தின் புகழ் பெற்ற வைரங்கள் இருந்தன. நம்நாட்டின் கோகினூர் வைரம் மகாராணியின் கிரீடத்தை அலங்கரித்திருந்தது. அந்த கிரீடம் இனி அவரது மருமகள் கமெல்லாவுக்கு இனி உரிமையாக்கப்படும் ( அவ்வ்வ்! ). எலிசபெத் மகாராணியின் திருமணத்துக்கு ஹைதரபாத் நிஜாம் வைர நெக்லெஸ் பரிசு அளித்தார் .அரசியே தேர்வு செய்த அந்த நெக்லெஸ் பிளாட்டினத்தில் செய்யப்பட்டு 300 அரிய வைரங்கள் பதிக்கப்பட்டு அக்காலத்தில் அதிகமாக பேசப்பட்டது . அப்போதே அதன் மதிப்பு 100 மில்லியன் பவுண்டுகள் (பெண்களே, பெரு மூச்செரிய வேண்டாம் ! )

அரசி இந்தியாவின் மேல் பேரன்பு கொண்டவர் . இந்தியாவுக்கு மூன்று முறை அரசு முறை பயணம் மேற்கொண்டவர் . 1961, 1983, 1997 ஆகிய வருடங்களில் இந்தியா வந்திருக்கிறார் அவர்.

20220809204145645.jpg

1961 ஆம் ஆண்டு தன் கணவர் பிலிப்புடன் இந்தியா வந்த அரசியார் குடியரசு தின அணிவகுப்பில் கலந்துக் கொண்டு , அழகிய நீண்ட சொற்பொழிவை ஆற்றினார் .இந்திய மக்கள் தந்த வரவேற்பும் அவர் தம் உபசரிப்பும் தன்னை நெகிழ வைத்ததாக குறிப்பிட்டார் . தாஜ்மகாலையும் , காந்தி சமாதியையும் நேரில் தரிசித்தார் .

20220809203940980.jpg

1983 ஆம் ஆண்டு காமன்வெல்த் நாடு தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்தார் அரசி .அப்போது கல்கத்தாவின் புனிதர் மதர் தெரேசாவுக்கு விருது வழங்கி சிறப்பித்தார் .

20220809204018825.jpg

1997 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திர பொன்விழாவைக் கொண்டாடிய போது இந்தியா வந்தார், அப்போது ஜாலியன்வாலா பாக் கொடுமைக்கு வருத்தம் தெரிவித்தார் . அப்போதுதான் கமல் சாரின் 'மருதநாயகம்' படப்பிடிப்பை அரசி துவக்கி வைத்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நினைவு கூறுகிறோம் .

20220809204052358.jpg

1969 ஆம் ஆண்டு லண்டனில் அரசி அளித்த விருந்தில் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கலந்துக் கொண்டு சிறப்பித்தார் .2009 ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கை லண்டனில் நடந்த காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் சந்தித்தார் . 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடியை அரசி தன பக்கிங்காம் அரண்மனையில் சந்தித்து இந்திய நல்லுறவை உறுதிப் படுத்தினார் .

20220809204420911.jpg

இந்திய நாட்டின் மேல் பேரன்பு கொண்டு நேசக்கரம் நீட்டியவர் எலிசபெத் மகாராணியார் . அவரது மறைவு நிச்சயமாக உலகுக்கு பெரிய இழப்பு.

உலகில் எல்லா நாடுகளும் மன்னராட்சியை மறந்து விட்ட போதும், அது வழக்கொழிந்த போதும், மன்னராட்சியின் இறுதி அடையாளர்களில் ஒருவரான அரசியாருக்கு 'விகடகவி'யின் அஞ்சலிகள் .

Long Live the Queen