தொடர்கள்
கவர் ஸ்டோரி
கார் பயணம் பாதுகாப்பானதா ?? விகடகவி சேஃப்டி செக். ! ராம்

20220809214404639.jpeg

ஒரு காருக்கு ஹெட்லைட் போல, ஹாரன் வைத்திருப்பதைப் போல சீட் பெல்ட் சும்மா அழகுக்காக வைத்திருக்கவில்லை என்பதை ஏனோ நாம் புரிந்து கொள்வதேயில்லை.

சீட் பெல்ட் குறித்த எனக்குப் பிடித்த பொட்டில் அறைவது போல ஒரு விளம்பரம் இது.

என் உற்ற நண்பன் ஒருவன் கப்பல் துறையில் பணியாற்றியவன். ஒரு விசேஷத்திற்காக நண்பர்களுடன் அலுவலக சகாக்களுடன் காரில் பயணம் சென்றவன் தப்பித்தான். அதிரிஷ்டவசமாக. காரணம் சீட் பெல்ட்.

வண்டி சாலையிலிருந்து உருண்டோடி ஏதோ ஒரு வயற்காட்டில் விழுந்திருக்கிறது. அதில் பயணம் செய்த அனைவரும் தப்பித்து விட்டனர் ஒரேயொருவர் தவிர. கொஞ்சம் பூசினாற் போல் இருக்கும் என் நண்பனின் மேனேஜர். அவர் சீட் பெல்ட் போட்டிருக்கவில்லை. மேலும் அந்த திடீர் அதிர்வையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

விகடகவியில் இது போன்ற சாலை விபத்துக்கள் பற்றி முன்னொரு முறை எழுதியிருக்கிறோம்.

அதில் முக்கியமான ஒரு விஷயமாக மோஷன் இண்டியூஸ்ட் பிளைண்ட்னெஸ் பற்றி வந்த கட்டுரை இங்கே...

விகடகவியில் விபத்து பற்றி எழுதியிருந்த கட்டுரை

சாலையில் பயணிக்கும் போது வண்டி ஓட்டுபவர்கள் ஒரே இடத்தில் பார்த்துக் கொண்டிருந்தால் முன்னே சாலையில் நிற்கும் வண்டியும் நகர்வது போலவே தெரியும் என்பது தான் இந்த MIB அதனால் நிகழ்ந்த விபத்து ஒன்றைப் பற்றிய கட்டுரை அது.

வெளிநாடுகளில் சீட் பெல்ட் என்பது கட்டாயம். முன்னே இருப்பவர்களும் சரி, பின்னே அமர்ந்திருப்பவர்களும் சரி கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.

சீட் பெல்ட் போட்டுக் கொண்டால் மட்டும் விபத்திலிருந்து உத்திரவாதமாக தப்பிக்க முடியுமா என்று கேட்டால் விதண்டாவாதம். விபத்தில் பாதிப்பு சதவிகிதத்தை அது கட்டாயம் குறைக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்லலாம்.

சென்ற வாரம் சைரஸ் மிஸ்திரியின் இறப்பு நாட்டுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த விபத்தில் அவரது மறைவைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சீட் பெல்ட் பற்றிப் பேசியிருக்கிறார்.

" நம்மூர் ஆட்களுக்கு ஒரு மன நிலை இருக்கிறது முன்னே அமர்ந்திருப்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிந்திருந்தால் போதுமானது என்று. எந்த விபத்தையும் பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை.

ஆனால் பொதுவாக அனைவரும் சீட் பெல்ட் அணிவது முக்கியமில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. அனைவரும் காரில் சீட் பெல்ட் அணிய வேண்டியது அவசியம் " என்று வலியுறுத்தியிருக்கிறார்.

கீழேயுள்ள காணொளியைப் பார்த்தால் சீட் பெல்ட் எப்படி ஒரு உயிரைக் காப்பாற்றும் என்று பார்க்கலாம்.

என் நண்பர்களின் கார்களில் அதிலும் புது மாடல் கார்களில் சீட் பெல்ட் போடா விட்டால் அபாய அறிவிப்பு சப்தம் வரும் என்பதால் சும்மானாச்சும் காரை ஏமாற்றுவதற்கு சீட் பெல்ட் பகுதியில் சொருகுவதற்காக சீட் பெல்டின் முனையை மட்டும் செய்து வைத்திருக்கிறார்கள்.

20220809214652904.jpg

இதற்கும் ஒரு மார்க்கெட் இருக்கிறது என்பது தான் கொடுமை. இதில் ஏமாந்து போவது யார் ?? காரா ???

நினைவிருக்கட்டும். சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர் பேக் அதாவது பலூன் போல ஊதி உப்பிக் கொண்டு நம் மண்டை உடையாமல் காப்பாற்றும் காற்றுத் தலைகாணி, வேலை செய்யுமாம். சீட் பெல்ட் போடாவிட்டால் தலைகாணி ஊதி உப்பாது. ஆக சீட் பெல்ட் இந்த ஒரு விஷயத்திற்காகவாவது போட்டே ஆக வேண்டும்.

ஒரு முறை லாஸ் ஏஞ்சலீசிலிருந்து லாஸ் வேகாஸ் வரை சுமார் 400 மைல்கள் தனியாக கார் ஓட்டிக் கொண்டு சென்றேன்.

விமானம் இரவில் இறங்கியதால் அடுத்த நாள் காலை லாஸ் வேகாசில் இருக்க வேண்டும் என்று நான்கைந்து பெரிய பெட்டிகளை வண்டியில் பின்னே அடுக்கி விட்டு புறப்பட்டேன்.

சுமார் ஐந்து மணி நேர பயணம் தான். இளையராஜா, ரஹ்மான் எல்லோரும் ரொம்ப சப்தமாகவே உடன் வர விரட்டிச் சென்றாலும் தூக்கம் வந்து விட்டது. தூக்கம் என்றால் சமாளிக்க முடியாத தூக்கம். பின் மண்டையில் பொடேர் போடேர் என்று அடிக்கும் தூக்கும். போதாக்குறைக்கு, அதிக பட்ச தூக்கத்தினால் ஹெலூசினேஷன் என்று சொல்லும் வகை. திடீரென்று நடு ரோட்டில் மரம் இருப்பது போல தோன்றுகிறது... யாரோ நடந்து வருவது போல தோன்றுகிறது....

நல்லவேளையாக மனைவியின் தொலைபேசி வந்து எதுக்கு தூங்காம போகணும் எங்கியாவது நிறுத்தி தூங்கி விட்டுப் போகலாமே என்ற அறிவுரையை கேட்டதால் தப்பிய இரவு...

நம்மூரில் பல விபத்துக்கள் இப்படி தூக்கத்தினால் ஏற்படுகிறது. விகடன் நண்பர் இயக்குனர் திருப்பதிசாமியின் விபத்து தமிழ்நாட்டில் பலருக்கு இன்னமும் நினைவிருக்கும். ஒரு சின்ன அடி கூட படாமல் ஆனால் அந்த விபத்தில் நம்மை விட்டுச் சென்றார் திருப்பதிசாமி. காரணம் அதிகாலை டிரைவரின் தூக்கம். திருப்பதியும் சீட் பெல்ட் போடவில்லை என்று அப்போது சொன்னதாக நினைவு. உறுதியாக நினைவில் இல்லை.

20220809214838802.jpg

ஆக கார் பயணத்தின் பாதுகாப்பிற்கு முதல் எதிரி தூக்கம். இரண்டாவது எதிரி என்ன தெரியுமா ??

நாம் சின்னதாக இருக்கிறது என்று நினைக்கும் சின்ன சின்ன பொருட்கள்.

லாஸ் வேகாஸ் போகும் வழியில் நிறுத்தி தூங்கின கதைக்கு வருவோம். அமெரிக்காவில் நெடுஞ்சாலைகள் ஐம்பது மைல்களுக்கு ஒரு இடத்தில் இது போல ரெஸ்டிங் ஏரியா என்று இருக்கிறது. அந்த தேசத்தின் நீள அகலத்திற்கு சாலைப் பயணம் செய்ய, இது மிக மிக அவசியம்.

கட்டாய ஓய்வு எடுத்துக் கொண்டு தான் தொடர்ந்து வண்டி ஓட்ட வேண்டும். அப்படி ஒரு இடத்தில் நிற்கையில் என் காரின் பின்னே இருந்த பெட்டிகளைப் பார்த்து ஒருவர் புன்னகைத்தார்.

பதிலுக்கு புன்னகைக்கையில் அருகே வந்து பேசத் துவங்கினார்.

என்ன பெட்டியெல்லாம் பலமா இருக்கு ? அமெரிக்காவில் வந்து செட்டில் ஆக வந்துட்டியா என்ன என்றார் சிரித்துக் கொண்டே. இல்லை இதெல்லாம் துணிமணிகள் தான். லாஸ் வேகாஸ் ஷோவுக்கு எடுத்துச் செல்கிறேன் என்றதும் ஆனாலும் பெட்டியை எல்லாம் கட்டாமல் லூசாக வைத்து எடுத்துச் செல்கிறாயே அதுவே மிக மிக மிக பெரும் ஆபத்து தெரியுமா என்றார் ??

அதாவது நாம் போகும் வேகத்தில் சுமார் எண்பது மைல் வேகத்தில் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் திடீரென்று பிரேக் அடித்தால் அந்த பெட்டிகள் எல்லாம் அப்படியே நிற்பதில்லை. அதுவும் எண்பது மைல் வேகத்தில் நம்மை நோக்கி வேகமாக வரும். யோசித்துப் பாருங்கள் கண்ணாடி பாட்டில்கள் அடுக்கி வைத்திருக்கிறது என்றால் அது எண்பது மைல் வேகத்தில் நம்மீது வந்து விழுந்தால் என்னாகும் ??

ஒரு முறை ரீடர்ஸ் டைஜஸ்டில் 'காருக்குள் பறக்கும் சாதனங்கள்' என்ற தலைப்பில் ஒரு அட்டைப்பட கட்டுரையே வெளியிட்டிருந்தார்கள்.

அது தான் பல விபத்துக்களில் கொல்லும் ஆயுதம். நன்றாக இறுக்கமாக கட்டப்பட்டிருக்கும் பெட்டிகளோ அல்லது பொருட்களோ தான் விபத்தின் போது நம்மை தாக்காமல் இருக்க நாம் செய்யக்கூடிய முதல் சேஃப்டி செக்.

உள்ளே காரில் பாதுகாப்பான பயணத்திற்கு முன் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் இவை.

முக்கியமாக குழந்தைப் பயணிகள் இருந்தால் குழந்தைகள் சீட் கட்டாயம் வேண்டும்.

20220809222310777.jpeg

வெளிநாடுகளில் இது கட்டாயமானது. குழந்தைகளுக்கு இப்படி பாதுகாக்கப்பட்ட சீட் இல்லையென்றால் கடும் அபராதம் உண்டு. நம்மூரில் விளையாட்டுக்கு கூட யாரும் வைத்துக் கொள்வதில்லை. சடாரென பிரேக் அடிக்கப்பட்டால் குழந்தைகள் தான் எளிதில் தூக்கி வீசப்படுவார்கள். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தை வெகு சாதாரணமாக கடந்து போகிறோம் ???

பின் வரும் பிற சேஃப்டி செக்.....

கார் டயரில் காற்று சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பழுதான டயர்கள் ஆபத்தானவை.

ஹாங்காங்கில் ஒரு பார்க்கில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த வயதான மனிதர் ஒருவர் டிரக்கிலிருந்து கழண்டு உருண்டோடிய டயர் மேம்பாலத்தில் இருந்து விழுந்து அந்த இடத்திலேயே இறந்து போனார். ஒரு வேளை டயரை ஒழுங்காக சரி பார்த்து வைத்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கக் கூடும்.

வைப்பர் மற்றும் முன்பக்க கண்ணாடி படு சுத்தமாகவும் சரியாகவும் இருக்க வேண்டும்.

அதிலும் பகலில் பசுமாடு தெரியாமல் கொஞ்சம் சாளேஸ்வரம் வந்தவர்களுக்கு ஒரு வேளை நன்றாக மழை பெய்யும் நேரத்தில் வைப்பர் வேலை செய்யாமல் போனால் என்னாகும். ரோடில் பள்ளத்தாக்குகள் தமிழகத்தில் (வெள்ளத்தாக்குகள் என்று நண்பர் ஒருவர் அழகான வார்த்தை சொன்னார்) அதிகம். இரவு நேரங்களில் கண்ணாடி துல்லியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நீண்ட பயணத்திற்கு முன் காரின் ஹெட்லைட் செக் செய்து கொள்ளவும்.

நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில், ஒரு முறை மதுரையிலிருந்து நாகர்கோவில் வரை எங்கள் காரில் ஹெட்லைட் வேலை செய்யாமல் ஒரு லாரியின் பின்னே கெஞ்சிக் கேட்டு வந்த ஞாபகம் இருக்கிறது. இப்போதெல்லாம் யாரேனும் உதவுவார்களா சந்தேகம் தான்.

ஏசி யையும் ஒரு முறை செக் செய்து கொள்ளவும்.

ஏனெனில் மழை பெய்யும் போது இரவில் வண்டி ஓட்டினால் நிச்சயம் ஏசி போடாமல் ஓட்ட முடியாது.

பிரேக் ஆயில்.

இதற்கு விளக்கமே வேண்டாம். பிரேக் தான் முக்கியம். ஆனால் இப்போதெல்லாம் டிஸ்க் பிரேக் வருவதால் மொத்தத்தில் பிரேக் சிஸ்டம் நன்றாக இருக்கிறதா என்று செக் செய்து கொண்டு புறப்படுவது நல்லது.

இது போக என்ஜின் ஆயில், பெட்ரோல் அல்லது டீசல் அல்லது எலக்ட்ரிக் அளவு சரியாக இருக்கிறதா என்று திட்டமிட்டு புறப்படுங்கள்.

வழியில் கார் மக்கர் செய்து நிற்பது போல ஒரு அசெளகர்யம் உலகத்தில் எதுவுமில்லை.

அந்த அனுபவமும் ஏராளம் இருக்கிறது. ஒரு நாள் நடு இரவில் ஏதோ ஒரு கிராமத்தில் வண்டி நின்று தொலைக்க, இரவு முழுவதும் இயற்கை உபாதைகளுக்கு கூட எங்கே நிற்கிறோம் என்று தெரியாமல் எல்லாரும் அங்கங்க போங்கப்பா என்ற குரல்.

விடிந்ததும் பார்த்தால் வரிசையாக வீடுகள் இருந்தது அந்த இடத்தில்.

உப கதை ஒன்று.....

அது போலவே நடு இரவில் காரை நிறுத்தி இயற்கை அழைப்புக்கு செல்பவர்கள் வண்டி புறப்பட்டதும் எல்லோரும் இருக்கிறார்களா என்று ஒரு விசை பார்த்து விடுங்கள்.

மிக சமீபத்தில் நியூ யார்க்கிலிருந்து திருப்பூர் சென்ற என் அலுவலக நண்பர் இப்படித்தான் ஏதோ ஒரு நெடுஞ்சாலை இரவில் அவசரமாக இறங்க அந்த வண்டியில் இருந்ததே மொத்தம் மூன்று பேர் தான்.

பாதி தூரம் போனதும் முன்னால் அமர்ந்திருந்த நண்பர் திரும்பி ஏதோ சொல்ல யத்தனிக்க பார்த்தால் பின்னால் இருந்த ஆளைக் காணோம். சுமார் 60 கி.மீ தூரத்திற்கு வந்த பின் தான் பார்த்திருக்கிறார்கள். மீண்டும் திருப்பிக் கொண்டு போய் அழைத்து வருவதற்குள் யோசித்துப் பாருங்கள் அந்த கும்மிருட்டில் வெட்ட வெளிப் பிரதேசத்தில் அருகே யாரும் இல்லாமல் கையில் பணமும் போனும் எதுவும் இல்லாமல் வெலவெலத்துப் போயிருக்கும்.

காரணம் பாதுகாப்பு சரிபார்ப்பு, அதாவது சேஃப்டி செக் இல்லாதது தான்.

காருக்குள் அமர்ந்ததும், பயணிக்கும் போதும் செய்ய வேண்டிய பாக்கி விஷயங்கள் இங்கே...

நம் காருக்கும் முன்னர் செல்லும் காருக்கும் தகுந்த இடைவெளி இருப்பது மிக அவசியம்.

கதவுகளை லாக் செய்து விட்டு அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது மிக அவசியம். குறைந்த பட்சம் நீண்ட தூர நெடுஞ்சாலைகளிலாவது இதை கடைபிடிப்பது அவசியம்.

அக்கம் பக்கம் பார்த்து சூதானமாக வண்டியை ஓட்டவும்.

யாராவது துரத்திக் கொண்டு வந்தாலோ அல்லது நம்மை ஓரங்கட்ட முயற்சித்தாலோ கோபப்படாதீர்கள். சாலையில் ஏற்படும் கோபம் நமக்கு காலணாவுக்கு பிரயோஜனம் இல்லை. நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வதைத் தவிர எதுவும் நடக்காது. வழி விட்டு போங்கள் அல்லது மொத்தமாக நிறுத்தி விட்டு கொஞ்ச நேரம் கழித்து செல்லவும்.

அடுத்த வண்டி ஓட்டும் ஆளை நம்பாதீர்கள்.

நமது எண்ணமும் அவரது எண்ணமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர் நமக்கு வழி கொடுப்பார் என்றோ அல்லது கொடுக்க மாட்டார் என்றோ யூகிக்க வேண்டாம். அதற்கு ஏறுக்குமாறாக நடக்கலாம்.

வேகம்.

வேகம் என்ன எழுதியிருக்கிறதோ அதிலிருந்து ஒரு எட்டு சதவிகிதம் கூடுதலாக இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் ஆபத்து தான். ஒரு குறிப்பிட்ட பகுதியில் வேகத்தின் அளவை விபத்தை கருத்தில் கொண்டே வைத்திருப்பார்கள்.

ஒரு விபத்து நேரப் போவது தெரிந்து விட்டால் அதை குறைந்த அளவு சேதத்துடன் தப்பிக்கும் யோசனையை உடனடியாக செய்ய வேண்டும். அதற்கு முக்கியமான விஷயம் உங்கள் கவனத்தை திசை திருப்பும் எதையும் வண்டி ஓட்டும் போது செய்யாதீர்கள். குறிப்பாக வண்டி ஓட்டும் போது மொபைல் போனை தொடுவதை தயவு செய்து தவிர்க்கவும். (இது எனக்கு நானே எழுதிக் கொள்ளும் அறிவுரையாகவும் தோன்றுகிறது). பலருக்கும் தோன்றும்.

கடைசியாக, ஒரு அவசரம் ஏற்பட்டால் மற்றவர்கள் அழைப்பதற்கு தொலைபேசி எண்களை ஒரு அட்டையில் எழுதி காரில் வைத்திருப்பது உத்தமம்.

மற்றபடி மேலும் சில விஷயங்கள் ஒவ்வொரு ஊரையும் பொறுத்தது.

உதாரணத்திற்கு அமெரிக்காவில் பனிக் காலத்தில் வெள்ளை பனிக்கட்டிகள் ஆபத்தில்லாதவை. ஆனால் சாலையில் கறுப்பு ஐஸ் இருக்கும். அது ரோட்டோடு ரோடாக இருப்பது தெரியாது. அது மிக மிக ஆபத்தானது. பிரேக் அடித்தால் சர்ர்ர்ரென பக்கவாட்டில் இடதோ வலதோ நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இழுத்து விடும். ஆக கடும் குளிர் பனிக்காலத்தில் வண்டி ஓட்டுவதற்கு கொஞ்சம் அனுபவம் தேவை. அனுபவம் இல்லையென்றால் கார் ஓட்டாதீர்கள். எனக்கு லாங் பீச் என்ற இடத்தில் ஒரு டாக்சி டிரைவர் பனிக்காலத்தில் எப்படி பிரேக் போட்டு வண்டியை நிறுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். (இன்னமும் பிரயோகிக்கவில்லை)

தமிழ்நாட்டிற்குள் என்றால் வெள்ளத் தாக்குகள் அதிகம். தண்ணீர் இருக்கும் இடமெல்லாம் பள்ளம் இருக்கும் இடமாக இருக்கக் கூடும் என்று அறிக. அதிக அளவு கவனம் தேவை.

பெரிய சாக்கடை ஓட்டையெல்லாம் வண்டியில் இருப்பவர்களுக்கு தெரியாது. அதிலும் இருசக்கர வாகனமென்றால் தொலைந்தது.

முக்கியமாக வண்டியை ரிவர்ஸ் எடுக்க கற்றுக் கொள்ளுங்கள். இதில் தான் ஏராள குட்டி குட்டி விபத்துக்கள் நடை பெறுகிறது. உதாரணத்திற்கு ஒரு காரில் பார்க் செய்து நீண்ட நேரம் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது வண்டியை எடுக்கும் நேரம் வந்து விட்டது அதிலும் ரிவர்ஸ் எடுக்க வேண்டும் என்றால் ஒரு முறை இறங்கி பார்த்து விட்டு பின்னர் எடுக்கவும். ஒரு தெருநாயோ அல்லது ஆட்டுக்குட்டியோ படுத்திருக்க கூடும்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு முறை மந்தைவெளி ஸ்கூல் வியூ ரோட்டில் எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு வெள்ளை அம்பாசிடர் ரிவர்ஸ் எடுக்க பின்னே இஸ்திரி போடுபவரி குழந்தை அமர்ந்திருந்தது. குழந்தை இருக்கு குழந்தை இருக்கே என்று நான் கத்திக் கொண்டே ஓட, ரோட்டில் மூன்று திசைகளிலிலுமிருந்து ஆட்கள் ஓடி வர அந்த டிரைவர் என்னவோ ஏதோவென்று பயந்து போய் வண்டியை நிறுத்த நல்ல வேளையாக குழந்தை காருக்குள் சென்றாலும் சின்ன அடி கூட படமால் தப்பித்தது இன்றும் நினைவில் உறைந்திருக்கிறது.

மொத்தத்தில், பஸ்ஸில் சென்றால், இரயிலில் சென்றால் நம் கவனம் என்பது அத்தனை முக்கியமான விஷயமல்ல.

ஏதேனும் நிகழ்ந்தால் அது விதி. நம் கை மீறிய செயல்.

ஆனால் காரில் பயணப்படும் போது அதிலும் குறிப்பாக நாமே ஓட்டும் போது, நெடுந்தொலைவு செல்லும் போது இத்தனை சேஃப்டி செக் விஷயங்களையும் செய்து விட்டு, உங்கள் இஷ்ட தெய்வத்தை நன்றாக ஒரு முறை கும்பிட்டு விட்டு கிளம்புங்கள்.

பயணங்கள் அலாதியானது.

அதை அஜாக்கிரதையால் அலங்கோலப்படுத்தி விடாதீர்கள்.