தொடர்கள்
தொடர்கள்
ப்ராக்டிகல் சீரீஸ்  -  12 நாட்டாம.. தீர்ப்ப மாத்திச் சொல்லு மாலா ரமேஷ்

20220419171726346.jpg

என்னப்பூ….தலைப்பைப் பாத்ததும்….யாரு நாட்டாமை…? என்ன பஞ்சாயத்து…? எங்கே நடக்குது…? என்ன தீர்ப்பு…? எதுக்கு மாத்திச் சொல்லணும்….? இப்படி ஏகப்பட்ட கேள்விகளால மண்டை காஞ்சு போகுதா….? இருங்கப்பூ…. எந்த நாட்டாமைன்னு பாக்கலாம்….

ஸ்கூல்ல சின்ன க்ளாஸ் மட்டுமில்ல…சமயத்துல எட்டாவது வரைக்குமே கூட ஒரு சில பிள்ளைகளைப் பாக்கலாம். இவங்க…நாலு பேர் தன்னை கவனிக்கணும்னே குறியா இருப்பாங்க….அதுக்காக, அப்பப்ப எந்திரிச்சு ஏதாவது சம்பந்தமே இல்லாம சந்தேகம் கேக்கறது, அப்பப்ப ரெஸ்ட் ரூம் போறேன்னு பர்மிஷன் கேக்கறது, இல்லன்னா யாரையாவது பத்தி ஏதாவது கோள் சொல்றது….அதுவும் இல்லன்னா…யாராவது தன்னை அடிச்சிட்டாங்க… தள்ளிவிட்டுட்டாங்க…நோட்டைக் காணும்…..இப்படி ஏதாவது ஒண்ணச் சொல்லி டீச்சர் மட்டுமில்லாம, மொத்த வகுப்போட கவனமும் தன்னைச் சுத்தியே இருக்கணும்னு பாப்பாங்க…இது ஒரு அட்டென்ஷன் கெயினிங் டெக்னிக்.

சின்னப் பிள்ளைங்க விஷயம் வேற. ஆனா, பல இடத்துல, இது போல பல பெரியவங்க செய்யறதோட சொம்பில்லாத நாட்டாமையாவும் மாறிடறதுதான் பெரிய பிரச்சினை. இதனால, குடும்பத்துக்குள்ள இருக்கக்கூடிய சின்ன சின்ன விரிசல்கள் பெரிசாகி…. அடுப்புல காயறதுக்காக வச்ச பாலை தவறுதலா கவனிக்காம பொங்கவிட்டதுக்காக பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ற அளவுக்கு ஏத்தி விடற கதையா ஆயிடுது….இந்த மாதிரி நாட்டாமைகள் குடும்பத்துல ஆண்களாவும் இருக்கலாம்…பெண்களாவும் இருக்கலாம்….இவங்க பாரபட்சமில்லாம…சம உரிமையோட செயல்படுவாங்க…

ஒரு மாடர்ன் நாட்டாமையா இருக்கறதுக்கு, சொம்பு தேவையில்ல……பெரிய குடை மாதிரி நிழல் தர்ர மரம் தேவையில்ல…. சுருக்கமா சொல்லணும்னா, சமையல் செய்யத் தேவையான பொருட்கள் மாதிரி….மாடர்ன் நாட்டாமையா இருக்கறதுக்குத் தேவை….நவீன தொழில்நுட்பத்த நல்லா உபயோக்கிக்கத் தெரியணும்….உதாரணமா, ஆடியோ கால், வீடியோ கால், இது மட்டுமில்லாம, இன்டெர்னெட் வழியா மீட்டிங் நடத்தறது, இல்லன்னா ஏதாவது மீட்டிங்ல கலந்துக்கறது… அந்த மீட்டிங்ஸ், கால்ஸ் எல்லாத்தையும் எத்தன ஜிபி மெமரி போனாலும் அவசியமா ரெக்கார்ட் செஞ்சு, ஒண்ணுக்கு நாலு காப்பி வச்சிக்கிறது, ஊர்வம்பை விரல்நுனில வச்சிருக்கிறது… அந்த வம்புக்கான சரியான அப்டேட் கிடைக்கலன்னா… தகுந்த ஆளுங்கள வச்சு, (இந்த மாதிரி ஆளுங்களுக்கான தகுதி என்னென்னன்றத பின்னால பாக்கலாம்) அதை சேகரிச்சு லிஸ்ட் வச்சிக்கிறது… இப்படி தன்னோட சொந்த வேலைய விட்டுட்டு…..24x7 பொதுநலச் சேவையா, இது போன்ற உதவாக்கரை வேலையச் செய்ய முழு மனசு கொண்டவங்களா இருக்கணும்… இருவத்துநாலு மணி நேரமும் பத்தலன்னு சொல்ற அளவுக்கு வெறியோட வேலை பாக்கணும்….

யாரு யாரப் பத்தி என்ன சொன்னாங்க…? அப்படி சொன்னபோது யாரு இருந்தாங்க…? அதுக்கான சாட்சிகள்….ஒரு வேளை சாட்சிகள் பத்தலன்னா… அதை எப்படி பலப்படுத்தறது….? ஒரு சின்னக்கோடை எப்படி ரோடா மாத்தறது….அதுக்கான சென்டிமென்ட் காரணங்கள், வரலாற்றுக் காரணங்கள், ஏற்கனவே இது போன்ற தீர்ப்புகளோட ரெஃபரன்ஸ், ஒரு வேளை, ஒரு நாட்டாமையா, தான் சொல்றத யாராவது குடும்பத்துல எதிர்த்தா, எந்த அஸ்திரத்தை அவங்க மேல பிரயோக்கிச்சு தான் சொல்ற தீர்ப்பை அமல் படுத்தறதுன்னு அத்தனையும் தெரிஞ்சிகிட்டு தீயா வேலை செய்யறவங்க மட்டும்தான் நாட்டாமையா இருக்கமுடியும்.

சரி, நாட்டாமைக்குப் பக்க பலமா, தகுதியான ஆளுங்க கூட இருக்கணும் இல்லையா…? அப்பத்தானே ஊர்வம்பு அப்டேட் சேகரிச்சுக் குடுக்கிறது…நாட்டாமையோட கண்ணசைவைப் புரிஞ்சிகிட்டு வேலை பாக்கறதுன்னு விஸ்வாசத்தோட இருக்கமுடியும்…. அதுக்கான தகுதிகள் என்னன்னா….நாட்டாமை லேசாகத் தும்மினாலும்….அதை கன்டினியூ செஞ்சு தொடர் தும்மல் அலையை உருவாக்ககூடியவர்களாகவும்..…ரொம்ப லேசாத் தட்டினாக்கூட நல்ல பெரிசா சத்தம் வரக்கூடிய ஜால்ராக்களாகவும் இருப்பதுதான் கூட இருப்பவர்களுக்கான தகுதி. அதுலயும், முக்கியமா சுயபுத்தின்றது சுத்தமா இருக்கவே கூடாது.

வெள்ளைக்காக்கா பறக்குதுன்னு நாட்டாமை சொன்னா…”ஆமா, அது உஜாலா வெண்மை” ன்னு சொல்லணும். இதான் முக்கியத் தகுதி. சரி, இப்ப நாட்டமையோட ஜோனுக்கு போகலாம்.

என்னப்பூ….? கண்ணு காதெல்லாம் மூடிக்கிட்டு பின்னங்கால் பிடறில அடிக்க ஓடறீங்க…? அட, தில்லு இருந்தா நில்லுங்கப்பூ…நாட்டாமைய கண்ணால பாருங்க…..முடில இல்ல…? உங்களால முடில இல்ல….? அதான்… அதான் நாட்டாமையோட திறமை….

நாட்டுல எவ்ளோ பிரச்சினைகள் இருக்கும்போது, எவ்வளவோ தேவைகள் இருக்கும்போது, தன்னோட அறிவையும், நேரத்தையும், பயனுள்ள தொடர்புகளையும் உபயோகிச்சு, யாராவது நாலு பேருக்கு நல்லது செஞ்சாலும் புண்ணியமாப் போகும்… ஆனா, நம்ம நாட்டு ஆமை, “யூ னோ…. இன் நைன்டீன் ஹண்ட்ரெட்” னு ஆரம்பிச்சு, குடும்பத்தோட அந்தப் பரம்பரைல பல காலம் பின்னோக்கிப் போய், அடக்கம் செஞ்ச ஒரு பிரச்சினைய எடுத்து, தூசு தட்டி, அதை அலசி ஆராஞ்சு, “குற்றம்….நடந்தது என்ன” ன்னு பரபரப்பை உண்டாக்கி, ரணகளமா குடும்பத்தைக் கிழிச்சுப் போஸ்ட்மார்ட்டம் செஞ்சு…..தன்னோட எல்லையில்லாத சக்திய நிரூபிக்கிறதா நினச்சுட்டு, ….”பாம்பு தீண்டியே தீரும்….ஸ்…னே….க் பாபு…..” ந்னு சொல்லி நாக்க வெளியே நீட்டி பயமுறுத்துவாங்க…..

பாவம் ….நீங்க இந்த உண்மையெல்லாம் தெரியாம அந்த ஜோனுக்குள்ள காலை வச்சதால, நிக்கமுடியாம ஓடிட்டீங்கப்பூ.....போகட்டும்….இந்த மாதிரி…குடும்ப நாட்டாமைகள் பல நேரங்கள்ள எந்தப் பிரச்சினையா இருந்தாலும், அங்கே சம்மன் இல்லாம ஆஜராகி, கொழப்பி, குடும்பத்தை சுக்குநூறாக்கிடுவாங்க…..இதுக்கெல்லாம் ரொம்ப யோசிக்காம, அடுத்து என்ன செய்யணும்னு மட்டும் யோசிச்சா ஆக்கபூர்வமா செயல்படலாம்….பல நேரத்துல வீட்டுல இருக்கிற அப்பாவிங்க மனசு நொந்துதான் போகும்…அதெல்லாம், “ஆல் இன் த கேம்” அப்டீன்னு சொல்லித் தள்ளிட்டு, முன்னேறற வழியப் பாக்கறதுதான் புத்திசாலித்தனம்.

நம்மோட நேரமும், அறிவும் விலைமதிப்பில்லாதது….ஒவ்வொரு நாளும், முடிஞ்சவரைக்கு யாருக்காவது நல்லது செய்யணும்… இல்லையா….யாரையும் எந்த வகையிலும் வருத்தப்படவைக்கக்கூடாது…. இதெல்லாம் நடைமுறைல நாட்டாமைகளுக்குப் புரியுமா…? வாய்ப்பே இல்லை….ஏன்னா…அதுக்கெல்லாம் சில அடிப்படைப் புரிதல் வேணும்….

வாழ்க்கைய சிக்கலாக்கிக்க வேண்டாம்னா… “நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு” ன்னு கேக்காம….இந்த மாதிரி வெட்டி நாட்டாமைங்க அந்தப் பக்கம் வந்தா இந்தப் பக்கம் எஸ்கேப் ஆகி ஓடிடணும்….இல்லைன்னா… எனர்ஜிதான் வேஸ்ட்….மனச ஃப்ரெஷா வச்சிக்கணும்…ஆக்கப்பூர்வமா சிந்திக்கணும்.. பயனுள்ள வகைல செயல்படணும்….அதான் நல்லது…சரிதானேப்பூ….

அடுத்த வாரம் பாக்கலாம்….