தொடர்கள்
கதை
“குருதட்சணை” - வெ.சுப்பிரமணியன்

20220419171025710.jpg

“அம்மா உயிரோட இருந்திருந்தால், என் விருப்பப்படிந்நேரம் ‘அந்த பாலுவை’ எப்படியாவது எனக்கு கட்டி வைச்சிருப்பாங்க” என்று கண்ணைக் கசக்கினாள் மாலா.

“பெரிய யூனிவர்சிட்டியிலே வேலைபார்க்கும், இந்த புரொஃபஸர் ‘சங்கரனுக்கிருக்கிற’ ஒரே செல்ல மகளுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டியது, என்னோட கடமையில்லையா? என்றார் மாலாவின் தந்தையான சங்கரன்.

“பாலு… நாளைக்கு… மைசூர்ல நடக்கவிருக்கும் ‘செமினாருக்கு’ தேவையான பிரஸன்டேஷன் மெட்டீரியல்ஸ் எல்லாவற்றையும் ரெடி பண்ணிட்டியா? நம்ம ரிஸர்ச் டீமிலிருந்து, உன்னோடு மைசூருக்கு வரப்போறது யாரு?” என்றார் புரொஃபஸர் ‘சங்கரன்’.

‘ஓரல்’ பிரஸன்டேஷனை நானும், ‘ஸ்லைடு ஷோ’ டிஸ்பிளேயை, ஆரம்பத்திலேயிருந்து இந்த ஆராய்ச்சியிலே என்னோட சேர்ந்து ஒர்க் பண்ணிட்டிருக்கிற ‘பானுவும்’ செய்யப்போகிறோம் சார்” என்றான், ‘சங்கரனின்’ மேற்பார்வையில், தன் ‘முனைவர்’ பட்டத்திற்கான ஆராய்ச்சியை முடிக்கும் நிலையிலிருக்கும் ‘பாலு’.

“உன்னையும், பானுவையும் சேர்த்து, சில கிசுகிசுக்கள் என் காதுக்கு அடிக்கடி வருது. இந்த நேரத்திலே… நீயும், அந்தப்பெண்ணும் சேர்ந்து செமினாருக்குப் போறது, அனாவசியமானது” என்றார் சங்கரன்.

“பானுவுக்குத்தான் இந்த டாப்பிக்கோட டீட்டெயில்ஸ் முழுமையாகத் தெரியும். அதுமட்டுமில்லே சார்… கூடிய விரைவிலே, எங்கள் இருவீட்டார்கள் சம்மதத்தோட நாங்க திருமணம் செஞ்சுக்கப் போறோம். அதனால… எங்களைப்பற்றிய ‘கிசிகிசுக்களெல்லாம் சுத்த வதந்தி. நீங்க நம்பவேண்டாம் சார்” என்றான் பாலு.

“இன்னும் பத்து நாளிலே உனக்கு ‘பி.ஹெச்.டி, வாய்மொழித் தேர்வு’ இருக்கு. அது முடிஞ்சபிறகு நீயும், பானுவும் எங்கே வேண்டுமானாலும் சேர்ந்து போங்க. இப்போதைக்கு… ‘பானு’, உன்னோட வர வேண்டாம்” என்று அழுத்தமாகச் சொன்னார் சங்கரன்.

“சார்… கடைசி நேரத்திலே, நான் வேற யாரை கூட கூட்டிகிட்டு போவேன். நீங்களே யாரையாவது சஜஸ்ட் பண்ணுங்க” என்றான் பாலு.

“இந்த ‘பிராஜெக்டிலே’ ‘ஜூனியரா’ ஜாயின் பண்ணியிருக்கிற ‘மாலாவை’ மைசூருக்கு கூட்டிகிட்டுப் போ. ‘மாலாவுக்கும்’ இதுமாதிரி ‘செமினார்லே’ கலந்துக்கிட்டா, ரிஸர்ச் அனுபவம் கிடைக்குமில்லையா?” என்றார் சங்கரன்.

“சார்… மாலா… உங்களோட டாட்டர்ங்கிறதாலே, அவங்களை நீங்க ரெக்கமன்ட் பண்ணறதா எல்லாரும் பேசமாட்டாங்களா? அதோட… இந்த ரிஸர்ச்சிலே, அவங்களுக்கு அனுபவம் பத்தாது” என்றான் பாலு,

“என்னுடைய இந்த ‘ரிஸர்ச் பிராஜெக்டு’ முடியும் வரை, ‘மாலாவை’ என் டாட்டராக நீ பார்க்கக்கூடாது. உன்னைப் பொறுத்தவரை ‘மாலா’ உன்னோட ஜூனியர்… அவ்வளவுதான்…” என்று சற்று கண்டிப்புடன் சொன்னார் சங்கரன்.

பாலு தன் அறையைவிட்டுப் போன பிறகு… தன் மகள் ‘மாலாவை’ வரச்சொன்னார் சங்கரன். “இங்கே பாரு மாலா… பாலுவோட மைசூருக்கு செமினார் அட்டென்ட்பண்ண பானுவுக்கு பதிலா நீ போறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். அங்கே பாலுவின் மனதில் இடம்பிடிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. இங்கே பானுவை… நான் ‘கன்வின்ஸ்’ பண்ணிக்கிறேன்” என்றார் சங்கரன்.

“என்னமோ தெரியல்லை… இந்த புரொஃபஸர் இத்தனைநாள் பேசாம இருந்துட்டு… கடைசி நேரத்திலே அவரோட பெண் ‘மாலாவை’ என்னோடு மைசூருக்கு கூட்டிகிட்டு போகச்சொல்லி கம்பெல் பண்ணறார்” என்று, பானுவிடம் புலம்பினான் பாலு.

“வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்கிறமாதிரி, எதுவும் செஞ்சுடாதீங்க. உங்களோட ‘எக்ஸாம்’ நல்லபடியா முடிஞ்சு நீங்க டிகிரி வாங்கும் வரைக்கும், ‘புரொஃபசரை’ பகைச்சுக்காதீங்க. அடுத்த மாதம் அவர் ரிட்டையர் ஆகப்போறார். நீங்க ‘டாக்டர்’ பட்டம் வாங்கிட்டீங்கனா… அவரால ஏற்படற வேக்கன்ஸியிலே, உங்களை ‘அப்பாயின்ட்’ பண்ணிடுவாங்கன்னு, எல்லாரும் பேசிக்கிறாங்க. அதனால… மொதல்ல டிகிரியை முடிக்கப் பாருங்க” என்று பானு சொல்லவும், ‘செமினாருக்கு’ கிளம்பத் தயாரானான் பாலு.

அடுத்தநாள் மாலையில், “பானு… உன்னோட ‘ரிஸர்ச் டாப்பிக்’ சம்மந்தமா… உங்கிட்டே ஒரு அரைமணிநேரம் டிஸ்கஸ் பண்ணனும், என் ரூமுக்கு வந்துட்டு பிறகு… ஹாஸ்டலுக்குப் போறியா?” என்றார் ‘சங்கரன்’.

கையில் நோட்டுடன், ‘புரொஃபஸர் சங்கரன்’ என்று நேம்போர்டு மாட்டியிருந்த, அறைக்கதவை தட்டிய ‘பானு’, ‘எஸ்… கமின்’ என்று பதில் வரவும்… ‘உள்ளே’ போனாள்.

“பாலுவோட… உன்னை மைசூருக்கு அனுப்பலேன்னு என் மேல உனக்கொண்ணும் கோபமில்லையே?” என்றார் சங்கரன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்” என்ற பானுவிடம், “நீங்களிருவரும் கல்யாணம் பண்ணிக்கப் போறதா… பாலு சொன்னானே” என்றார்.

“ஆமாம் சார்… அவருடைய முனைவர் பட்டத்தோட, ‘வாய்மொழித் தேர்வுக்காகத்தான்’ எங்க ரெண்டுபேரோட வீட்டிலேயும் வெயிட் பண்ணறாங்க. அவர் ‘நெட்-எக்ஸாம்’ ஏற்கனவே கிளியர் பண்ணிட்டதாலே… பி.ஹெச்.டி., டிகிரி வாங்கினதும் அவருக்கு வேலை கண்டிப்பா கிடைச்சுடும்னு நம்பறோம்” என்றாள் பானு.

“உனக்கு பாலுவோட ‘டாக்டர் பட்டம்’ எவ்வளவு முக்கியமோ… அதைவிடவும் எனக்கு என்னோட ‘டாட்டர் வாழ்க்கை’ முக்கியம். என் டாட்டர் மாலா… பாலுவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறா. அதனால நீ பாலுவை விட்டு விலகிடு” என்றார் சங்கரன்.

“நான் பாலுவை வேண்டாம்னாலும், அவர் உங்க பெண்ணை கட்டிப்பார்னு எப்படி நினைக்கிறீங்க?” என்றாள் பானு.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… உன்னால பாலுவை விட்டு விலக முடியாதுன்னா… சொல்லு. அவனோட ‘ஃபியூச்சர்’ என் கையிலேதானிருக்கு” என மிரட்டும் தோரணையில் பேசினார் சங்கரன்.

சில வினாடிகள் மௌனத்திற்குப் பிறகு, “ஓ.கே சார்… பாலுவிற்கு டிகிரி அவார்டான பிறகுதான்… நான் அவரை வெறுக்கிற மாதிரி நடந்துக்க முடியும். ஆனால்… நான் ஒதுங்கிய பிறகு… உங்க பெண்ணோட ஆசையை பூர்த்தி பண்ணிக்க வேண்டியது, உங்களோட சாமர்த்தியம்” என்றாள் பானு.

“நான் நினைத்ததை விடவும் நீ புத்திசாலியாத்தான் இருக்கே! ஆனால்… என்னை முட்டாளாக்க ‘பிளான்’ பண்ணறதைத்தான் என்னால ஏற்றுக்கொள்ள முடியல்லை” என்று சொல்லிவிட்டு, பானுவைப் பார்த்து ஏளனமாய் சிரித்தார் சங்கரன்.

“நீங்க சொல்லறது எனக்கு புரியல்லே” என்ற பானுவை பார்த்து, “பாலுவோட வாய்மொழித்தேர்வு எந்த தடங்கலும் இல்லாம முடிஞ்ச பிறகு… நீ பேச்சு மாறினால்…?” என்று கேட்ட சங்கரன், “நமக்குள்ளே ஒரு ஒப்பந்தம் பண்ணிக்கலாமே” என்றார்.

“என்ன… எதாவது பத்திரத்திலே எழுதி, சாட்சிகளோட கையெழுத்துப் போட்டுத்தரணுமா?” எனக்கேட்டாள் பானு.

“நோ…நோ… நீ என்னோட ‘அரவணைப்பிலே’ விருப்பத்துடன் இருக்கிற மாதிரி, சிரிச்ச முகத்தோட, பத்து ‘போஸ் மட்டும்’ குடுத்தாப் போதும். அதை இந்த ரூமிலே… இப்பவே செல்ஃபியா எடுத்துக்கலாம். அந்த ‘தழுவலை’ என்னோட ‘மொபைலில்’ வீடியோவா ரெக்கார்டு பண்ணிக்கிறேன்” என்றதும்… ஆடிப்போனாள் பானு.

“என்னோட ‘அப்பா’ வயசிலே இருக்கிற ‘உனக்கு ஏண்டா’ இப்படி ‘வக்கிரமா’ நினைக்கத் தோணுது. சீ… உன்னையெல்லாம் ‘டீச்சர்ங்கிற’ உயர்ந்த இடத்திலே வைச்சுப் பார்த்ததை ‘நினைத்தாலே’ அருவருப்பா இருக்குடா” என்று கொதித்துப் போனாள் பானு.

“உன்னை மாதிரி ஒரு ‘சின்னப்’ பெண்ணோட, ‘அந்த’ மாதிரி உறவு வைச்சுக்க, என் வயதும், மனதும் ஒத்துக்காதுன்னு எனக்கும் தெரியும். இதை ஒரு ‘அக்கடமிக் பிளாக்மெயிலாக்கூட’ நினைச்சுக்கோ. பாலு ‘முனைவர்’ ஆனதும், நீ என்னை முட்டாளாக்கிடக் கூடாதுங்கிற, ‘ஸேஃப்டிக்காகத்தான்’ இந்த வீடியோ” என்று லாஜிக் பேசினார் சங்கரன்.

உடலெங்கும் கூனிக்குறுக, உள்ளத்தில் ‘பாலுவை’ நினத்தபடியே, போலியான புன்னகையை முகத்தில் தேக்கியபடி, ‘புரொஃபஸர் சங்கரனின்’ அணைப்பில் கிடந்தாள் பானு. அந்த மூன்று நிமிட வீடியோவை சங்கரனின் திறன்பேசி தன்னுள் ‘ஸ்டோர்’ செய்துகொண்டது.

செமினார் முடிந்து வந்த கையோடு, தன் ‘முனைவர்’ பட்டத்துக்கான வாய்மொழித்தேர்வை, வெற்றிகரமாக முடித்தான் பாலு.

ஒரு மாதத்திற்கு பிறகு, பல்கலைக் கழகத்திலிருந்து பாலுவுக்கு முறைப்படி ‘டாக்டர் பட்டம் வழங்கி’ கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்தை வாங்கிக்கொள்ள, மற்ற பேராசியர்களும் கூடியிருந்த, ‘புரொஃபஸர் சங்கரனின்’ அறைக்கு போனான் ‘பாலு’. கூடவே ‘பானுவும்’ போயிருந்தாள்.

“பாலு… இப்படி ஒரு கஷ்டமான பாடப்பிரிவில் ஆராய்ச்சி செய்து, ‘டாக்டர்’ பட்டம் வாங்கின உனக்கு டீச்சிங் போஸ்ட் தரவிருப்பதாக, யூனிவர்சிட்டியோட ‘சின்டிகேட்’ மீட்டிங்கிலே, ஒருமனதாக முடிவு பண்ணிட்டாங்களாம். அடுத்தவாரம்… என்னுடைய ரிட்டையர்மென்ட்டும், உன்னுடைய அப்பாயின்ட்மென்ட்டும், ஒரே நாளில் நடக்கப் போகுது” என்று சொல்லிச் சிரித்தார் சங்கரன்.

“என்னுடைய இந்த வெற்றிக்கு… முழுத்துணையாக இருந்த ‘புரொஃபஸர் சங்கரன் சாருக்கு’ என் ஆயுள் முழுவதும், நான் கடமை பட்டிருக்கேன்” என்று சொன்ன பாலு, “அடுத்தமாதம் எனக்கும் ‘பானுவுக்கும்’ நடக்கவிருக்கும், திருமணத்தையும்… ‘சங்கரன்’ சார்தான் தலைமைதாங்கி, நடத்திவைக்க வேண்டும்” என்றான்.

அனைவரும் பாலுவை பாராட்டிவிட்டு வெளியேறினார்கள். சங்கரன் மட்டும் ‘கோபத்தில் முகம் சிவந்து… தன் திறன்பேசியை கையிலெடுத்தார்’.

“என்ன பானு… நீ பாலுவிடம் அந்த ‘வீடியோவைப்’ பற்றி பேசவில்லையா?” என்று மறைமுகமாக பானுவை மிரட்டினார் சங்கரன்.

“சார்… நீங்க பானுவை ‘வீடியோ’ எடுத்த அன்னிக்கு ராத்திரியே… அவ என்னிடம் பேசிட்டா. ஜஸ்டு... இப்போதான், உங்களுக்கு ஒரு வீடியோவை ஃபார்வேர்டு பண்ணியிருக்கேன். பிளீஸ்… அந்த வீடியோவான்னு பாருங்க சார்” என்றான் பாலு.

அவசர அவசரமாக, ‘வாட்ஸாப்பில்’ பாலு அனுப்பியிருந்த ‘அந்த’ வீடியோவை, தன் மொபைலில் டவுன்லோட் பண்ணினார் சங்கரன்.

அந்த வீடியோவில்… மைசூர் கான்ஃபிரன்ஸுக்கு போயிருந்த தன் மகள் ‘மாலா’ அறைகுறையான உடையில், காமத்துடன், ‘பாலுவின்’ பிடியில் தவழ்ந்து கொண்டிருந்தாள்.

“எங்களோட கல்யாணம் முடிஞ்சதும்… இந்த ‘வீடியோவை’ என்னோட ஃபோனிலிருந்து அழிச்சிடறேன். ஜஸ்டு… எங்களோட ஸேஃப்டிக்காகத்தான்… இந்த வீடியோவை எடுத்தேன்” என்றான் பாலு.

அதிர்ச்சியில் சிலையாய் நின்ற சங்கரனிடம்… “இது உங்களுக்கு நாங்கள் தரும் ‘குருதட்சணை’ என்று சொல்லிவிட்டு, பானுவின் கையை இறுகப் பற்றிக்கொண்டு, அந்த அறையிலிருந்து வெளியேறினான் ‘முனைவர் பாலு’.