தொடர்கள்
கவிதை
இருபத்தொன்றை வரவேற்போம்..!! - பாலா

20210001154114464.png

அன்று...

இருபது இருபதென்று
வந்தது புதியவருடமொன்று...!
கனவின் விளிம்பினிலே
மனதில் சுகம் கண்டோம்...!

வந்ததை விதியென்பதா..?
இறைவன் சதியென்பதா..?
விடியும் நாளொன்றும்
விபரீதம் வந்ததுவே...!

முகம் காட்ட முடியாமல்
முகம் மூடி அடைபட்டோம்...!
நிலைவாசல் தாண்டாது
சிறைவாசம் கண்டுவிட்டோம்..!

காற்றின் சுவாசத்தை
சுவைத்திட மறந்தோம்...!
மேகசாற்றின் தூரலில்
நடப்பதை இழந்தோம்...!

நீண்டோடும் சாலைகளில்
மீண்டுடோடுமா பேருந்துகள்..?
நிலையத்தின் நிழலுமே
களையிழந்து போனதுவோ...!

தவமிருந்தன தண்டவாளங்கள்
வருமோ இரயில்களென...?
காத்திருந்தன தடயங்கள்
பெறுவோமா உயிரோட்டமென..!

இறைவன் வழிபாட்டில்
வரையரை மாறுமோ...?
திரை விலகி தரிசனம்
விரைவில் நேர் வருமோ..!

இல்லத்தின் வைபவங்கள்
உள்ளத்தில் சுகம் தருமோ...?
உறவுகள் கலந்திருக்கும்
தருணங்கள் கிட்டிடுமோ...?

தொக்கி நிற்கின்றதோ
இத்தனை கேள்விகள்...!
விடைதேடிப் போவோமா
அத்தனைக்கும் வழிகாண...!

இன்று...

விடை கொடுப்போம் இருபதற்கு
விடியட்டும் நற்பொழுதொன்று...
வேண்டாத இவையெலாம்
முடியட்டும் இவ்வாண்டோடு...!

இருபதிலிருந்து இருபத்தொன்று
மாறுவதில் மகிழ்வு கொண்டு..
மாறிடும் வாழ்வின் நிலையென்று
வரவேற்போம் மனஉறுதி பூண்டு..!!