தொடர்கள்
கவிதை
காதல் பொது மறை... - 10 - காவிரி மைந்தன்

20201013131122708.jpg

காவிரி மைந்தன்

அவ்வளவுதான்!

அன்பிற்கினியவளே..

எண்ணம் இனிப்பதெல்லாம் உன்னை நினைப்பதாலா? எனக்காகப் பூத்திருக்கும் தாமரையோ உன் நெஞ்சம்? எழுதிவைக்கும்போது இன்பத்திற்கு என்றுமில்லை பஞ்சம்! அன்பில் பால்வார்க்கும் எந்தன் இன்னொரு அன்னையும் நீ! ஆசைத்தேன் ஊட்டும் எந்தன் காதலியும் நீ! கவிதைத் தேன்சிந்தும் கவிதாயினியும் நீ! கள்ளப் பார்வையிலே எனை மயக்குபவள் நீ! கலகலவெனச் சிரிக்கும்போது எனை வெல்பவள் நீ! கனிந்துருகிப் பேசும்போது இன்பஸ்வரம் எல்லாம் நீ! இறைவன் எனக்காக அனுப்பி வைத்த இன்பப் புதையலும் நீ! மாற்று இல்லாத உறவாய் நீ மலர்ந்திருப்பதால் நேற்று வரை நான் சுமந்த சோகங்கள் நெஞ்சைவிட்டுப் போயின! ஆற்றுப்படுத்தும் உன் அரவணைப்பிற்காகவே.. இங்கே தோற்றுப்போவதுகூட சுகம் என்று நான் எழுதிவைக்கிறேன்!

வேற்றுமொழியேதும் நீ கூற வேண்டாம்.. காதல் மொழியே நமக்குக் காலமெல்லாம் போதும்! இதயத்தில் நீ வார்க்கும் தேன்தான் எனக்கு இன்பத்தின் எல்லைகளைக் காட்டுகிறது! இடையிடையே வருகின்ற சிறுபிரிவும் சுடர் ஒளியை இழப்பதுபோல் படுகிறது! மறுபடியும் வந்து நீ எனை ஆளும்போது புது உயிரும் என்னில் சேர்கிறது!

கள்ளமில்லா உள்ளத்திற்கு பரிசு தர எண்ணினால் வருவது கவிதைதானே! என்னை நேசிக்கும் நெஞ்சத்திடம் எனக்கேதும் பெரிதாக ஆசையில்லை! இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் கேட்கின்ற ஓசையிலும் உன்னுடன் நான் என்னுடன் நீ! அவ்வளவுதான்! லப் டப் என்று துடிக்கும் இதயத்தை இனி லவ் லவ் என்றே துடிக்கச் சொல்லியிருக்கிறேன்!