உறவுகள் சேர்ந்து சந்தோஷமாய் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி.... இங்கேயும் சில உறவுகளை வெடிகளின் மூலம் விவரித்திருக்கிறேன், உங்கள் “நெருங்கிய” சொந்தம் யாரவது நினைவுக்கு வந்தால், கம்பெனி பொறுப்பாகாது.!!
லட்சுமி வெடி...
இதன் நடமாட்டம் சமையலறை மற்றும் ஹால், கிட்டத்தட்ட வீடெங்கும் முக்கியமாக வாசல் புறமும் பக்கத்து வீடும். கொளுத்திய உடன் வெடிக்காது... மூடு வர வேண்டும், எதிரில் நின்று துதி பாட வேண்டும். மனசு இருந்தால் வெடிக்கும், உங்கள் முகத்தில். பக்கத்து வீட்டை விட உங்கள் வீட்டில் நிறைய குப்பை இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். அதேநேரம் உங்கள் அம்மா கொளுத்தினால் உடனே வெடிக்கும்.
ஆட்டம் பாம்...
இது பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்கள் மட்டுமே வெடிக்கும் வெடி. நீங்கள் லீவு கேட்டால் வெடிக்கும், போனஸ் கேட்டால் வெடிக்கும்... ஓவர் டைம் கேட்டால் வெடிக்கும். உங்களைத் தவிர யார் கொளுத்துனாலும் வெடிக்கும். இதை மேனேஜர் என்றும் சொல்வார்கள்.
குருவி வெடி...
இது எப்போதும் குதித்துக் கொண்டே இருக்கும், ஒரு இடத்தில் நிற்காது. மொபைலில் கேம் விளையாடிய நேரம் போக மற்ற நேரமெல்லாம் வெடிக்கும், இதற்கு ஜோடிகளும் உண்டு. இப்போதெல்லாம் எல்லாரையும் கலாய்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது. ஆன்லைன் படிப்பு தந்த தைரியம், படிக்காமல் பாஸாகி விட்ட மமதை.
புஸ்வானம்.
ஒரு காலத்தில் நன்றாக இருந்த பட்டாசு இப்போது எப்போதாவது யாராவது கொளுத்தினால் உண்டு. மற்றபடி தானுண்டு தன் வேலையுண்டு என்று ஓரமாய் ஒதுங்கி நிற்கும். பெயருக்கேற்றபடி எல்லாவற்றிலும் “புஸ்” தான். வெறும் காத்து தாங்க வரும். ஆனாலும் தன் ஜோடியைப் பார்த்தால் சில சமயங்களில் வெடிக்கவும் செய்யும்.
கம்பி மத்தாப்பு...
கலர் கலராய் அழகழகாய் ஏக்கமாய் (ம்ம் பெருமூச்சு) எப்போதும் கண் பார்வையிலேயே இருக்கும். ஆனால், கிட்ட போய் தொட்டுவிட முடியாது. “அதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும் சாமி”. மரிக்கொழுந்துகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
சங்கு சக்கரம்...
இது ஒரு இடத்தில் நிற்காது சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு எல்லா போக்குவரத்திற்கும் இதுதான் காலில் சக்கரம் என்றும் சொல்வோம். இதற்கு மற்றொரு பெயர் தாய் மாமன். பாவம் சீறுவதற்கு மட்டுமே தெரியும் எப்போதும் வெடிக்காது.
பாம்பு மாத்திரை...
கொளுத்தியவுடன் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வெடித்து முடித்து விடும்.. பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. எல்லா வெடியும் வாங்கும்போது இதையும் வாங்கி வருவார்கள். அடங்கி அமைதியாய் வெடிக்கும், பேச்சு மூச்சு வராது. பேட்டி பாம்பு என்றும் சொல்லலாம். உங்கள் முகம் நினைவுக்கு வந்தால், மன்னிச்சு...!
சரம்...
இது பல வீடுகளில் வெடிக்கப்படும். எல்லாவற்றிலும் ஏதாவது ஒன்றை தேடிப்பிடித்து அதை பிடித்து பட பட பட வென பொரிந்து தள்ளி விடும். எல்லார் வீட்டிலும் நிச்சயமாய் ஒன்று உண்டு. ஆனால் சில வீடுகளில் அது பாட்டுக்கு வெடித்துக்கொண்டேயிருக்க... மற்றவர்கள் கண்டுக்காமல் கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள்.. “இங்க ஒருத்தன் /ஒருத்தி கரடியாய் கத்தறேனே யாரும் என்னன்னு கேட்க மாட்டீங்களா” இதை அடிக்கடி சொல்லிக்கொண்டே வெடிக்கும். என்ன ? உங்களுக்கு உங்க குடும்பத்தில யார் முகம் நினைவுக்கு வருகிறது..?
என்னை நோக்கி ராக்கெட் விட தயாராக வேண்டாம், யாராவது ஒருத்தர் உண்மையை சொல்லிவிட்டு போகட்டுமே...!
ஆனால் இது எல்லாம் சேர்ந்து வெடித்தால்தாங்க சந்தோஷ தீபாவளி..!
Leave a comment
Upload