குழந்தைப் பருவம் முதல் வயதான காலம் வரை… ஆண்டுகள் பல கடந்தாலும், மனதுக்கு நெருக்கமான பண்டிகை என்றால்... அவை தீபாவளியும், பொங்கலும்தான். நம்முடைய இந்தியத் திருநாட்டில், எத்தனை மதங்கள் உண்டோ… அத்தனையிலும் விதம் விதமான திருநாட்கள் உண்டு. ஆனால், மத வேறுபாடின்றி, அனைவரும் இனிப்பு உண்டு, பட்டாசு வெடித்து, வண்ணமயமான வாணவேடிக்கைகளைக் கண்டு மகிழும் நாள் தீபாவளி.
பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் முதல் சிறிய கடைகள் வரை எல்லாமே களைகட்டும். துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவகங்கள் என்று எல்லாவற்றிலும், போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடிகளை அறிவித்து, மக்களை ஈர்க்க பெரும்போட்டியே நடக்கும். மக்களின் மகிழ்ச்சியைப் பார்த்தால், நரகாசுரனே திக்குமுக்காடிப் போவான். ஆனால், இப்போதைய நிலை வேறு.
இந்த தீபாவளி பல பேருக்குத் திகைப்பூட்டும் வகையில்தான் உள்ளது. மெல்ல மெல்ல வாழ்க்கை இயல்புக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தாலும், பண்டிகை கொண்டாடும் மனநிலையில் பல பேர் இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை. பல நிறுவனங்களிலும், தனியார் பள்ளிகளிலும் ஊழியர்களுக்கு பாதி சம்பளம்தான் தரப்படுகிறது. அது மட்டுமில்லாமல், தற்காலிக வேலைகளில் இருந்த பலர், வேலையிழந்துள்ளனர். மாத சம்பளத்தில், கட்டுசெட்டாக குடும்பம் நடத்தி, சிக்கனமாக இருந்து ஏதோ, சொற்ப சேமிப்பு உள்ளவர்கள், இந்தக் காலகட்டத்தை ஓரளவு கடந்திருப்பார்கள். “குடி” மகன்களாக இருந்தாலும் “குடி”மகள்களாக இருந்தாலும் இந்த அங்கலாய்ப்புக்குத் தகுதியானவர்கள் அல்ல. அது அவர்கள் வாழ்வை நிச்சயம் பாதித்திருக்கும்.
“சீ… சீ.. இந்தப் பழம் புளிக்கும்” என்று திராட்சைக்கொத்தை எம்பி…. எட்டிப் பறிக்க முடியாத நரி, அலுத்துக்கொண்டு ஓடியதைப் போல, மதுபாட்டில்களை வாங்கமுடியாமல், இவர்கள் அந்தப் பழக்கத்தை விட்டு ஒழித்திருந்தால், சிறப்பு.
“நான் சிரித்தால் தீபாவளி…. ஹோய்..
நாளுமிங்கே ஏகாதசி…………..” என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. சாப்பிடுபவர்களுக்குத்தான் ஏகாதசி என்பது விரத தினம். சாப்பாட்டுக்கே தினமும் தடுமாறுபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏகாதசிதான்….
சுற்றுச் சூழல் சீர்கேட்டினைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தன்னார்வர்களாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் அளிக்கப்பட்ட தொடர் அறிவுறுத்தல்களின் விளைவாக, பட்டாசு வெடிப்பதை குழந்தைகள் தானாகவே குறைத்துக்கொண்டு, காற்று மாசு மற்றும் ஒலி மாசினைக் குறைக்க ஒத்துழைத்தார்களோ, அது போல இப்போதிருக்கும் சூழ்நிலையில், இருப்பதைப் பகிர்ந்து மகிழ ஊக்குவிப்போம்.
“பசுமை தீபாவளி” போல “பகிரும்” தீபாவளியாக அமையட்டும். பட்டாசுகள், புத்தாடைகள் வாங்கும்போது, ஏதோ ஒரு வகையில், இன்னொரு குழந்தைக்கோ அல்லது பெரியவருக்கோ, அல்லது ஏதோ ஒரு அநாதை இல்லத்துக்கோ அல்லது முதியோர் இல்லத்துக்கோ…. உங்கள் செலவின் ஒரு பகுதியைச் செலவிட்டால், அது அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
பல பேருக்கு திகைப்பூட்டும் வகையில் இருக்கும் தீபாவளியை நம்முடைய முயற்சியாலும் நல்லெண்ணத்தாலும், திகைப்பூட்டா தீபாவளியாக மாற்ற முயலுவோம். இதனை பண்டிகைக் காலம் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் வழக்கத்துக்குக் கொண்டுவருவோம்.
Leave a comment
Upload