தொடர்கள்
அரசியல்
பாபா ஆசிரமம் இடிப்பு... - அம்ரிதா பாஜ்பாய்

காங்கிரசில் கைகோர்த்ததால் வினை...

20201013212429403.jpeg


மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிக நீண்ட காலமாக பாஜக அரசின் செல்வாக்குடன் திகழ்ந்து வந்தவர், ‘கம்ப்யூட்டர் பாபா’ எனும் நாம்தேவ் தியாகி (74) சாமியார். இவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இந்தூரில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கரில் பிரமாண்ட ஆசிரமம் கட்டியிருக்கிறார். தற்போது அந்த ஆசிரமம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

முன்னதாக அரசு நில ஆக்கிரமிப்பு குறித்து உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கண்டுபிடித்து, ஆசிரம கட்டிடத்தை இடித்து அகற்றும்படி ஆசிரம நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இருப்பினும், அந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை ஆசிரமத்தினர் அகற்றாததால், கடந்த 8-ம் தேதி அரசு தரப்பில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆசிரம கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. மேலும், இவ்வழக்கு தொடர்பாக ‘கம்ப்யூட்டர் பாபா’ சாமியாரை போலீசார் கைதும் செய்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய பிரதேச மாநில காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், “ ஆசிரம கட்டிடங்களை இடித்தபோது, சாமியாரின் ஆதரவாளர்கள், காவலர்களை தடுக்க முயன்றனர். இதையடுத்து தியாகி சாமியாரும், அவரது 6 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணை முடிந்த நிலையில், தியாகி சாமியார் சிறையில் அடைக்கப்பட்டார்” என தகவல் தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டர் பாபா கைதின் பின்னணி குறித்து விசாரித்தபோது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம்தேவ் தியாகி சாமியார் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருந்தார். அப்போது அவருக்கு இணை அமைச்சர் அந்தஸ்தை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் வழங்கியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன், நர்மதை ஆற்றில் சட்டவிரோதமாக ஆளுங்கட்சியே மணல் அள்ளுவதாக தியாகி சாமியார் குற்றம்சாட்டியிருக்கிறார். பின்னர், அவர் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் முதல்வரான பிறகு, நாம்தேவ் தியாகி சாமியாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சில மாதங்களில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதன் பிறகு அங்கு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. இதைத் தொடர்ந்தே சாமியாருக்கு எதிரான நடவடிக்கைகளில் சவுகான் அரசு தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 3-ம் தேதி 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு எதிராக தியாகி சாமியார் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. மேலும், சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த 22 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை ‘துரோகிகள்’ என சாமியார் நாம்தேவ் தியாகி விமரிசித்துள்ளார். இதற்கடுத்தே அரசு நில ஆக்கிரமிப்பில் இருந்த ஆசிரம கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன என அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.