அலுவலகத்தில் மதிய உணவு இடைவெளியில் ராமனும் சங்கரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்னடா புது மாப்ள… தலைதீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு எப்ப போறே? வெயிட்டுதான்… கலக்கு!” - ராமன்.
“நீ வேறடா… பொண்டாட்டிகிட்ட எதேச்சையா ‘ஒரே மாப்பிள்ளைக்கு வெயிட்டா ஏதாச்சும் போடுவாங்களா?’னு கேட்டேன். அதுக்கு அவ ‘அங்க வாங்க, தெரியும்’னு கிண்டலா சிரிக்கிறாடா!” என்றான் சங்கர்.
ராமன், “நீ ஏண்டா பயப்படறே… வெயிட்டா போடுவாங்க! நீ போகும்போது, மாமனார், மாமியாருக்கு வேட்டி-புடவை வாங்கிட்டு போ… அதோட மாமனாருக்கு பிடிச்ச அயிட்டங்கள் வாங்கி, தனியா குடு!”
“அவருக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதேடா… பொண்டாட்டிகிட்ட கேட்டா, காறி துப்புவா!” என நெளிந்தான் சங்கர்.
“அப்ப ஜாலி மூடுல ‘உங்க வீட்டுல தலைதீபாவளிக்கு சிம்பிளா செய்ய சொல்லு. ஆமா, உனக்கு என்ன எடுத்திருப்பாங்க?’னு கேளு… அவ கடகடனு சொல்லிடுவா!” என ராமன் ஐடியா கொடுக்க...
“அவளா… ராங்கிக்காரி! ‘எனக்கு பாவாடை சட்டையும், உங்களுக்கு அரைடவுசரும் எடுத்திருப்பாங்க’னு நக்கலடிப்பா…” என்றான் சங்கர்.
“எதுவா இருந்தாலும் வாங்கிக்கோ… இருந்து வாங்கிட்டு போங்கனு சொன்னா நம்பிடாதே! அப்புறம் நீ ஜென்மத்துக்கும் அடிமைதான். பயப்படாதே…” என ராமன் தைரியம் கொடுக்க…
“பயப்படாம என்னடா பண்றது… கொரோனா காலமாச்சே! தீபாவளி சீரா மாஸ்க், சானிடைசர், மூலிகை கஷாயம்னு கொடுத்தா… என்ன பண்றது?” என்று சங்கர் சங்கடமாக கூறினான்.
“ஆமாண்டா மாப்ள… அதை மறந்தே போனேன்!” என தலையில் குட்டிக் கொண்டான் ராமன்.
பின்னர் வேலை முடிந்து, மாலையில் மீண்டும் ஒரு பூங்காவில் அமர்ந்து யோசித்தனர். ஒரு ஐடியாவும் தோன்றவில்லை.
“மாப்ள… ஒண்ணு பண்ணலாமா? ஒரு டீயும் தம்மும் போட்டா… ஐடியா தானா வரும்!” என ராமன் கூற, இருவரும் குடித்தனர். நேரம் போக போக… டீ, வடை, போண்டா, பஜ்ஜி மற்றும் சிகரெட்தான் அதிகமானதே தவிர… இருவருக்கும் ஒரு ஐடியாவும் தோன்றவில்லை.
பூங்காவில் இருந்து கிளம்பும் நேரத்தில், “மாப்ள… எனக்கு ஒரு ஐடியா தோணுது!” என ராமன் அலறினான்.
“என்ன… மீண்டும் ஒரு ரவுண்டு சாப்பிடலாங்கிறியா? இதுக்கே ஐந்நூறு ரூபா எகிறிடுச்சு! நானே பார்த்துக்கறேன்…” என்றான் சங்கர்.
“என்ன பண்ணப்போற?” - ராமன்.
“ம்… மாமனார் வீட்டுக்கு போகும்போது, ஒரு செட் கொரோனா பாதுகாப்பு சாதனங்களை வாங்கிட்டு போயிடுவேன்! அங்கே அவரும் அதையே கொடுத்தா, ‘என்கிட்ட ஏற்கெனவே ஒண்ணு இருக்கு. நீங்க யூஸ் பண்ணுங்க’னு திருப்பி கொடுத்துடுவேன்!” என்றான் சங்கர்.
அதே நேரம்… ஊரில் சங்கரின் மாமனார் கிருஷ்ணன், ‘தலைதீபாவளிக்கு வரும் மாப்பிள்ளைக்கு ஒரு பவுன் மோதிரம் போட பணம் கிடைக்கலையே?’னு பரிதவித்தார்.
அவரது பரிதவிப்பை பார்த்த மனைவி ருக்மணி, “ஏங்க… குட்டி போட்ட பூனையாட்டம் சுத்திட்டு இருக்கீங்க. மண்டையை பிச்சுக்கிறீங்க. என்னன்னு சொல்லுங்க?” என்றாள்.
“தலைதீபாவளிக்கு வர்ற பொண்ணு, மாப்பிள்ளைக்கு டிரஸ் எடுத்தாச்சு... பலகாரம் பண்ணியாச்சு! ஆனா, மாப்பிள்ளைக்கு மோதிரம் போட பணம்தான் கிடைக்கலை… கேட்ட இடத்துல கைவிரிச்சுட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியலை!” என கிருஷ்ணன் புலம்பினார்.
“கொரோனா இருக்க பயமேன்…” எனக் கூறியபடி, கிருஷ்ணனின் காதை இழுத்து ரகசியம் சொன்னாள் ருக்மணி.
“பேஷ்… பேஷ்! மனைவி சொல்லே மந்திரம்…” என விசிலடித்தபடி வெளியேறினார் கிருஷ்ணன்.
தலைதீபாவளிக்கு முதல் நாள் வந்த பெண் ரமாபிரபாவையும் மாப்பிள்ளை சங்கரையும் வரவேற்று, தடபுடலாக விருந்து வைத்தனர் மாமனாரும் மாமியாரும்.
தீபாவளியன்று காலை மாப்பிள்ளையும் பெண்ணும் எண்ணெய் தேய்த்து குளித்து வந்ததும், புத்தாடை கொடுத்தனர் கிருஷ்ணனும் ருக்மணியும். பின்னர் தீபாவளி லேகியம், காலை டிபனுடன் மூலிகை தேநீரும் வழங்கினர்.
உஷாரான சங்கர், “மாமா… உங்களுக்கும் அத்தைக்கும் ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேன். நான் வாங்கின டிரஸ்ஸை ரெண்டு பேரும் போட்டுட்டு வாங்க, தர்றேன்!” என்றான். தாயும் மகளும் ‘என்ன?’ என்பதை கண்ணால் பேசிக்கொண்டனர்.
பின்னர் மாமனாரும் மாமியாரும் புத்தாடை அணிந்து வந்ததும், கிஃப்ட் பாக்ஸை வழங்கினான் சங்கர். அதேபோல் கிருஷ்ணனும் ஒரு பரிசுப் பெட்டியை கொடுத்தார். இருவரும் ஒரே நேரத்தில் பிரிக்க, இரண்டிலும் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் இருப்பதை கண்டு இருவரும் அசடு வழிய சிரித்தனர்.
“தமிழ்நாடு முழுக்க மீண்டும் கொரோனா 2-வது அலை பரவலா வரும்னு சொன்னாங்க. அதான், உங்க ரெண்டு பேரையும் பாதுகாக்க வாங்கி வந்தேன்!” என்றான் சங்கர்.
“நானும் அதையே நினைச்சுதான் வாங்கினேன்!” - கிருஷ்ணன் பல்லிளித்தார். பின்னர் 4 பேரும் வாய்விட்டு சிரித்தனர்.
Leave a comment
Upload