விமலா மாமி...
விமலா மாமியை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அதுவே ஒரு எபிசோட் வரும். விமலா மாமியார் இன்சூரன்ஸ் ஏஜென்ட், போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு முகவர், சீட்டு பிடிப்பவர், கல்யாண தரகர், வீட்டு புரோக்கர் வீடு வாங்க விற்க ஏற்பாடு செய்யும் கமிஷன் ஏஜென்ட், வட்டிக்கு கடன் தரும் பைனான்சியர், தீபாவளி பண்டு பிடிப்பவர் மற்றும் குடும்பத்தலைவி.
விமலா மாமியை பொருத்தவரை அந்தk காலனியில் யாரிடமும் வெட்டியாக பேசமாட்டார், அவர் யாருடனாவது பேசினால் நமக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்று அவர் மூளை கால்குலேட்டர் கணக்குப் போடும். அப்படி ஏதாவது பயன் இருந்தால்தான் அவர் பேசுவார்.
யாராவது ஓய்வு பெறுகிறார்கள் என்றால் அவர்களை மூன்று மாதம் முன்பே தபால் ஆபீசில் உள்ள எல்லா திட்டங்களையும் சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக தன் வழிக்குக் கொண்டு வருவார். பார்க்கும்போதெல்லாம் சிரிப்பார், நலம் விசாரிப்பார், யாராவது அவரது கஸ்டமர் திருப்பதி லட்டு தந்தால் கூட அவர்களிடம் தந்து, மாமா நல்லபடியாக வேண்டிக்கொண்டேன் என்று லட்டு பிரசாதத்தை தருவார். ஓய்வுபெற்ற மறுநாளே விமலா மாமியை அந்தப் பென்ஷன் தாரர் வரச்சொல்லி மொத்த பணத்தையும் அவர் சொன்ன திட்டத்தில் சேர்ந்து கட்டிவிடுவார். விமலா மாமிக்கும் கணிசமான கமிஷன் கிடைக்கும்.
இப்படித்தான் மரகதம் மாமி தன் பெண் வந்தனாவுக்கு மாப்பிள்ளை தேடுவதாக கேள்விப்பட்டதும், நேரே சென்று உங்கள் பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் தேடுவது என் பொறுப்பு. இன்று அஷ்டமி, நாளை புதன்கிழமை ஜாதகத்தை தாங்கோ நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பிள்ளையார் சுழி போட்டு விட்டு, மறுநாள் ஜாதகத்தை வாங்கி கொண்டு சில நாட்களிலேயே பத்து வரன்களை காண்பிப்பார்.
மரகதம் மாமி, விமலா நீ தந்த பத்து ஜாதகமும் 10 பொருத்தத்துடன் நல்லா இருக்கே... அந்த அமெரிக்க மாப்பிள்ளையை பார்க்கலாம் என்று எங்க ஆத்துக்காரர் சொல்கிறார் என்றபோது, அமெரிக்க மாப்பிள்ளை வேண்டாம் மாமி, மூஞ்சி கொஞ்சம் முத்தினமாதிரி இருக்கு. அந்த வேலூர் ஜாதகம் பாருங்க நாத்தனார் தொல்லை இல்லை, அண்ணன் ஆஸ்திரேலியாவில் இருக்கான், மாமனார் இருக்கிறார், மாமியார் இல்லை என்று சாதகமான பாயிண்டுகளை எடுத்துச் சொல்ல, நீ சொன்னா சரி தான்... அவளையே நீ பேசி முடிச்சுடு என்பார் மரகதம் மாமி. அமெரிக்க மாப்பிள்ளை கமிஷன் பற்றி எதுவும் பிடி கொடுத்து பேசவில்லை. வேலூர் மாப்பிள்ளை கணிசமான கமிஷன் தரேன் என்று உறுதியாக சொன்னதால், வேலூர் வரனுக்கு கொஞ்சம் அதிகமாக புரமோட் பண்ணினாள் விமலா மாமி. கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. இரண்டு இடத்திலும் கூடுதலான கமிஷன் கிடைத்தது. மரகதம் மாமி கிஃப்ட்டாக ஒரு பட்டுப் புடவையை தர, விமலா மாமி அந்தப் பட்டுப் புடவையை சமையல்கார மாமி உன்னிடம் தந்து கட்டிக்க சொன்னாள்.
மாமிக்கு ரெண்டு, மூணு கேட்டரிங் ஏஜென்ட் தெரியும். பரிமளம் மாமியோட மாமியார் இழுத்துண்டு இருந்தா, எப்படியும் சனிக்கிழமை தாண்டாது.. எனவே கிச்சா கேட்டரிங் மாமாகிட்ட ஒரு ஆர்டர் ரெண்டு மூணு நாள்ல சொல்றேன்னு, முன்கூட்டியே ரிசர்வ் செய்து இருந்தார். சொன்னபடி பரிமளம் மாமியோட மாமியார் வெள்ளிக்கிழமை நடுராத்திரி போயிட்டா, விமலா மாமிக்கு தான் முதல் போன். உடனே எழுந்து வந்த விமலா மாமி, நான் நல்லபடியா காரியத்தை முடித்து தர எல்லா ஏற்பாட்டையும் நான் பண்றேன் கவலைப்படாதீங்க என்று சொல்ல... சரி என்று பரிமளா மாமி பணத்தை நீட்ட பணம் எல்லாம் இப்போது தேவையில்லை, நான் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு... கேட்டரிங், புரோகிதர், பாடைகட்டுகிறவர் என்று எல்லோரையும் ராத்திரியே எழுப்பி, ஏற்பாடு பண்ணிட்டா. நல்லபடியா காரியம் முடிந்ததும், பரிமளா மாமி குடும்பத்தினர் பாராட்ட... பரிமளம், விமலா மாமி நான் உங்களுக்கு எவ்வளவு பணம் தரணும்... அதை நீங்க இன்னும் சொல்லவே இல்லையே என்று கேட்க... இதோ தேதிவாரியாக செலவுக் கணக்கு எழுதி வைத்திருக்கிறேன் என்று நோட்டை நீட்டுவார். மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் என்று சொல்வார். இந்தாங்க மாமி வச்சுக்கோங்க என்று விமலா மாமியின் சர்வீஸ் சார்ஜ்ஜையும் சேர்த்து 7 லட்சமாக கொடுத்தார். அவ்வளவு எல்லாம் வேண்டாம் என்று 25 ஆயிரத்தை திருப்பித் தந்தார். 6 லட்சம் தான் செலவு கணக்கு, 50000 விமலா மாமியின் சர்வீஸ் சார்ஜ். இந்த 25 ஆயிரம் கூடுதல் போனஸ். அந்த 25 ஆயிரத்தை இரண்டு தையல் மெஷின் வாங்கி, இரண்டு ஏழைப் பெண்களுக்கு விமலா மாமி தந்தார். அது யாருக்கும் தெரியாது.
விமலா மாமிக்கு திவ்யதேச யாத்திரை போகும் பவித்ரா பழக்கம். யாத்திரைக்கு ஆள் பிடித்து தந்து, கமிஷன் வாங்கியது மூலமாக இந்த தொடர்பு. அவர்கள் திவ்யதேசம் போகும் இடங்களில் என்ன மலிவாக கிடைக்கும் என்று அதை வாங்கி வரச் சொல்லி, அதை விற்று காசு பார்ப்பார் விமலா மாமி. கேரளா டூர் போகும்போது, மிளகு, ஏலக்காய் மொத்தமாக வாங்கி வரச் சொல்லி, அதை கடை விலையை விட பத்து ரூபாய் குறைவாக விற்று லாபம் பார்ப்பார் விமலா மாமி.
மாமியின் பணம் பண்ணும் வித்தையை சொல்லிக்கொண்டே போகலாம். கல்யாண வீடுகளில், கல்யாணம் முடிந்ததும் மீந்து போகும் அரிசி, பருப்பு, காய்கறிகள், ஸ்வீட், காரம் எல்லாம் மாமி வாங்கி கொள்வார். அவ்வளவையும் மூட்டை கட்டி அருகில் அவருக்குத் தெரிந்த முதியோர் இல்லம் இருக்கிறது, அங்கு தனது காரில் எடுத்துச் சென்று இறக்கி விடுவார்.
விமலா மாமியின் மாத வருமானம் சுமார் 5 லட்சம் இருக்கும். சொந்த வீடு, இது தவிர 3 பிளாட் வாடகைக்கு விட்டிருக்கிறார். ஒரே பெண். அவளுக்கும் திருமணமாகி பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டாள். கார், டெபிட் கார்டு, வங்கியில் கணிசமான பணம் என்று இருக்கும் விமலா மாமியின் கணவர் ஒரு ஓட்டலில் சர்வராக இருக்கிறார். மாமி அவர் தரும் சம்பளப் பணத்தை அப்படியே வாங்கி தபால் ஆபீஸில் சேமிப்பு கணக்கில் கட்டிவிடுவார். கலைந்த தலையுடன் வலம்வரும் விமலா மாமியின் கணவர் சுந்தரம், விமலா மாமியுடன் வெளியே வர தயங்குவார். ஒரு சில திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது, சில பணக்கார மாமிகள், விமலா உன் கூட வராரே... யார் இவர்? இவர் அன்னபூர்ணா ஹோட்டலில் சர்வராக இருப்பவர் தானே என்று கேட்டால்... இவர் என் கணவர் என்று தேங்காய் உடைப்பது போல் எந்த தயக்கமும் இன்றி சொல்லிவிடுவாள் விமலா மாமி. விமலா மாமிக்கு தன் கணவரை தன்னுடன் அழைத்துச் செல்வதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், சுந்தரம் தான் வேண்டாம் என்று தவிர்த்துவிடுவார். விமலா மாமியும் கணவரை சங்கட படுத்த வேண்டாம் என்று வற்புறுத்த மாட்டார். மேலும் விமலா மாமி சம்பாதித்து வாங்கிய எல்லா சொத்துக்களும் சுந்தரத்தின் பெயரில்தான் வாங்குவார், வாங்கினார், வாங்கிக் கொண்டே இருக்கிறார். அதுதான் விமலா மாமி.
Leave a comment
Upload