தொடர்கள்
Daily Articles
எதற்கும் தயார் எடப்பாடி... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

20200821205842381.jpeg

செப்டம்பர் 18ஆம் தேதி அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடந்தது. அதற்கு முன்தினம் கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தீர்மானம் பண்ணி அவசர அவசரமாக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. ஓபிஎஸ் உள்ளே நுழையும்போது புரட்சித்தலைவி அம்மாவின் வாரிசு ஓபிஎஸ் வாழ்க என்ற கோஷம் போடப்பட்டது. எடப்பாடி உள்ளே நுழையும்போது, வருங்கால முதல்வர் நிரந்தர முதல்வர் என்று அவரது கோஷ்டி பதிலுக்கு கோஷம் போட்டனர். இப்படிப்பட்ட பதட்டமான சூழ்நிலையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், சர்ச்சைகளுக்கும் சூடான விவாதங்களுக்கும் அங்கு பஞ்சமில்லை. அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை.

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கே.பி. முனுசாமி தான் விவாதத்தை துவக்கி வைத்தார். அதிமுகவின் இரு பெரும் தலைவர்கள் இங்கு இருக்கிறீர்கள், நீங்கள் இருவருமே எங்களுக்கு முக்கியம். நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் மீண்டும் அம்மாவின் ஆட்சியை நம்மால் அமைக்க முடியும். சமீபத்தில் ஒரு அறிக்கையில் டிடிவி தினகரன் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம் என்று குறிப்பிடுகிறார், அவருடைய கட்சி நிலவரம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது அவர் யாரை நம்பி சொன்னார் என்ற சந்தேகம் எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது என்று பத்தவைத்து விட்டு உட்கார்ந்துவிட்டார் கேபி முனுசாமி. தீவிர சசிகலா எதிர்ப்பாளர் ஓபிஎஸ் உடன் சேர்ந்து அவரும் வெளியே வந்தார். தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உள்ள பிணக்கை சரிசெய்ய முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் முதல்வர் எடப்பாடிக்கு அவர் பரிந்து பேசுகிறார் என்ற பேச்சும் உண்டு.

20200821210007194.jpeg

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேசும்போது ஆட்சி மிக நன்றாக நடக்கிறது, அதை யாரும் குறை சொல்ல முடியாது. ஸ்டாலின் கூட ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக ஏதோ சொல்கிறார். ஆனால், கட்சி நன்றாக இல்லையே, கீழ்மட்ட தொண்டர்கள் நமக்கு என்ன இவன் ஆட்சிக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்ற அவநம்பிக்கையை நாமே அவர்களிடம் வளர்த்து விட்டோம், இது திமுகவுக்கு சாதகமாக போய்விடும். இதை நீங்கள் இருவரும் உணர வேண்டும், நிர்வாகிகள் வேண்டாம், தொண்டர்கள் வேண்டாம் என்றால் மீண்டும் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும். இதையெல்லாம் நீங்கள் இருவரும் யோசிக்க வேண்டும். தொண்டர்களுக்கு மரியாதை இருந்தால்தான், ஆட்சியில் அவர்களுக்கு பலன் இருந்தால்தான், நாம் தேர்தலில் அவர்களை வேலை வாங்க முடியும். இதை தெரிந்து கொள்ளுங்கள் என்று இருவரையும் பயமுறுத்தி விட்டு அமர்ந்துவிட்டார்.

20200821210026384.jpeg

முதல்வரின் மன சாட்சியான அமைச்சர் தங்கமணி பேசும்போது, நமது தோழமை கட்சி எதிர்க்கட்சி எல்லாம் கூட யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறார்கள். நாம் தேர்தலை சந்திப்பதற்கு முன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து, அதன் பிறகு ஓட்டு கேட்டால் தான் மீண்டும் ஆட்சிக்கு நாம் வரமுடியும் என்று எடப்பாடிக்கு ஆதரவாக பேசி விட்டு அமர்ந்துவிட்டார்.

20200821205936615.jpeg

பி.எச். பாண்டியனின் மகனும் முன்னாள் எம்பியுமான மனோஜ் பாண்டியன், ஒபிஎஸ்-க்கு ஆதரவாக பேசினார். இரு அணிகளும் இணைந்தது. ஆனால், அந்த இணைப்பை முதல்வர் மனதார ஏற்றுக் கொண்டாரா என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. எங்களை எல்லாம் முதல்வர் அணி இன்றுவரை புறக்கணிக்கிறது, இது என்ன நாயம். இன்று ஆட்சி தொடர யார் காரணம், அதை நீங்கள் மறக்க கூடாது என்று தனது குமுறலை கொட்டிவிட்டு அமர்ந்தார்.

இன்னொரு ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிபி பிரபாகரன் அம்மாவின் ஆத்மா தான் ஓபிஎஸ். அவர் கள்ளம் கபடம் இல்லாதவர், சூது, வாது தெரியாதவர். அவர் மனதை நோகடித்தால், அது நன்றாக இருக்காது என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

அமைச்சர் உதயகுமார் பேசும்போது, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். சின்னம்மா விரைவில் விடுதலையாக இருக்கிறார், அவரையும் சேர்த்துக் கொண்டால் நாம் வெற்றி பெறுவது இன்னும் எளிதாகும் என்று பேச... அதற்கு எதிர்ப்புக் குரல் வர உதயகுமார் வலுக்கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டார்.

20200821210051119.jpeg

கடைசியாக பேசிய ஓபிஎஸ், ஆட்சியும் கட்சியும் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். சில நாட்களுக்கு முன் சகோதரர் பழனிச்சாமியிடம் வாரம் இருமுறை நான் தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு, நானும் வருகிறேன் என்றார். கட்சி பணியை ஒழுங்காக ஆற்றினால், தான் ஆட்சி அமைக்க முடியும். ஆட்சியை வைத்து, ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று நாசூக்காக பழனிச்சாமியை குத்திக் காட்டிப் பேசினார். கட்சிப் பணிக்காக நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றேன். மூத்த அமைச்சர்களும் கட்சிப் பணிக்கு வர வேண்டும் என்றேன். ஆனால், இதுவரை இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. இதேபோல் இணைப்பின் போது 11 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த குழு இதுவரை அமைக்கப்படவில்லை. அந்தக் குழுவும் அமைக்கப்பட வேண்டும், வேட்பாளர் தேர்வுக்கு ஆட்சி மன்ற குழு அமைக்கப்பட வேண்டும். இது இரண்டும் மிக மிக அவசியம் என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டு அமர்ந்தார்.

கட்சியினை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பேசும்போது இப்போதைக்கு 4 ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறார்கள், அமைச்சர்கள் இருக்கிறார்கள் எல்லோரின் ஆலோசனையை கேட்டு தான் கட்சியும் முடிவு செய்கிறது. எனவே உயர்மட்டக்குழு தேவையில்லை என்பதை சூசகமாக சொல்லி கூட்டத்தை முடித்து வைத்தார்.

அந்தக் கூட்டத்தில் 28 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளி வந்திருக்கிறது

20200821210118387.jpeg

கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமாக இருந்தாலும் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஒப்புதலின்றி ஓபிஎஸ்-ல் எதையும் செய்ய முடியவில்லை. சென்னை மாவட்டத்தின் நிர்வாக ரீதியாக சில மாற்றங்களை செய்ய நினைத்து, அதற்கான ஒரு பட்டியலை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியிடம் தந்தார் ஓபிஎஸ். ஆனால், அதை எடப்பாடி இப்போது வேண்டாம் என்று திருப்பி அனுப்பி விட்டார். இப்படிப் பல மாவட்ட பட்டியல் எடப்பாடியிடம் நிலுவையில் இருக்கிறது. சில மாவட்டங்களில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றெல்லாம் நியமித்திருக்கிறார் எடப்பாடி. தனக்கு வேண்டிய மாவட்டங்களில் அப்படி பிரித்து தரப்படவில்லை. அவ்வளவு ஏன்... கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி இன்றுவரை சேலம் தெற்கு மாவட்டச் செயலாளராகவும் தொடருகிறார். கட்சியே நீங்கள்தான் மாவட்டச் செயலாளர் பதவியை வேறு யாருக்காவது தரக்கூடாதா என்று கேட்டால் பிடிவாதமாக மறுத்து வருகிறார் எடப்பாடி.

ஓபிஎஸ்-ஸை பொருத்தவரை கட்சி தன்னிடம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அடுத்து ஆட்சிக்கு யார் வருவார் என்பது உத்தரவாதம் இல்லாத போது, கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தால், அது தான் தனக்கு நல்லது என்று நினைக்கிறார். ஆனால் ஓபிஎஸ்-ஸுடன் சேர்ந்து இணைந்த அவரது ஆதரவாளர்கள் பலர், இன்று எடப்பாடி ஆதரவாளர்களாக மாறி விட்டார்கள் என்பதும் உண்மை.

பொதுக்குழுவில் தனக்கு ஆதரவாகப் பேச இப்போதே பல பொதுக்குழு உறுப்பினரிடம் தங்கமணி, வேலுமணி இருவர் மூலம் எடப்பாடி பேசிவருகிறார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தேவையான உதவியையும் தற்போது செய்து வருகிறார். பொதுக்குழுவில் கட்சி, ஆட்சி இரண்டும் எனக்கே எனக்கு என்று நிரூபிக்கும் வேலையில் எடப்பாடி இறங்கிவிட்டார். அது எந்த அளவு வெற்றி பெறும் என்பது தெரியவில்லை.

அதே சமயம் பாரதிய ஜனதா தனக்கு எதிராக ஏதாவது சதி செய்தால், அதை சமாளிக்கவும் எடப்பாடி தயாராகிவிட்டார்.

வேளாண்மை மசோதா ராஜ்யசபாவில் ஓட்டெடுப்புக்கு வந்தபோது, பாரதிய ஜனதா முன்தினமே எல்லா உறுப்பினர்களும் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக வரவேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. தோழமைக் கட்சியான அதிமுகவுக்கு ராஜ்யசபாவில் ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதிமுக தங்களது உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. மசோதா ஓட்டெடுப்புக்கு வரும்போது, சபையில் மூன்று உறுப்பினர்கள் தான் இருந்தார்கள். அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினரான எஸ்ஆர்பி அந்த மசோதாவை எதிர்த்துப் பேசினார். ஆனால் அதிமுகவின் மூன்று உறுப்பினர்களும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு அளித்தார்கள். இதெல்லாமே எடப்பாடி ஏற்பாடுதான். எடப்பாடியை பொருத்தவரை எதற்கும் தயார். அதற்கேற்ற பணபலம், ஆள்பலம் அவரிடம் நிறைய நிறைய.