தொடர்கள்
நெகிழ்ச்சி
56000 கி.மீ. ஸ்கூட்டரில் சென்ற பாட்டி!- சுவர்ணபிரியா

20200818230601334.jpeg

தனது தாய் ஆசைப்பட்டார் என்பதற்காக, அவரை ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு, சுமார் 56 ஆயிரம் கிமீ தூரம் ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று வந்திருக்கிறார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு மகன்.

கர்நாடக மாநிலம், மைசூரு நகரை ஒட்டிய போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (45). பெங்களூரில் தனியார் நிறுவன ஊழியர். இவரது தாய் ரத்னம்மா (70). கிருஷ்ணகுமாரின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், அவரது தாய் ரத்னம்மா தனிமையில் தவித்து வந்தார். மேலும், தனது மகனிடம் ஹசன் மாவட்டம், பேளூரில் உள்ள ஒலேபீடு கோயில் உள்பட பல்வேறு வெளிமாநில கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டும் என ரத்னம்மா தன் ஆசையை கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டதும், தனது தாயை இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல கிருஷ்ணகுமார் திட்டமிட்டார். அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு, ஜனவரி 16-ம் தேதி தனது தந்தை 40 ஆண்டுகளாக பயன்படுத்திய ஸ்கூட்டரில் தாய் ரத்னம்மாவை ஏற்றிக்கொண்டு, ஆன்மீக சுற்றுலாவுக்கு கிருஷ்ணகுமார் கிளம்பியிருக்கிறார். இவர்கள் முதலில் ஒலேபீடு கோயிலுக்கு சென்று, பிறகு ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, புதுவை, தமிழ்நாடு, சட்டீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். அங்குள்ள இந்து கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டு 9 மாதங்கள் என மொத்தம் 33 மாதங்கள் ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, மைசூரில் உள்ள வீட்டுக்கு தாயும் மகனும் கடந்த 16-ம் தேதி ஸ்கூட்டரில் பத்திரமாக திரும்பினர். அவர்களுக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதாவது, அவர்கள் ஸ்கூட்டரிலேயே சுமார் 56 ஆயிரம் கிமீ தூரம் இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆன்மீக சுற்றுலாவாக சென்று வந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு மத்தியிலும், தாய்க்கு ஆன்மீக சுற்றுலா தலங்களை சுற்றிக் காண்பித்து, தாயின் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் கிருஷ்ணகுமார் இருக்கிறார்.

அதேபோல், தனது வயோதிகத்தை பொருட்படுத்தாமல் மகனுடன் ஸ்கூட்டரில் 56000 கிமீ தூரம் பயணம் செய்து, அனைத்து வழிபாட்டு தலங்களையும் தரிசித்த பூரிப்பில் ரத்னம்மா காணப்படுகிறார்.