பொது
விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழக இன்ஜினியர்!! – ஆர்.ராஜேஷ் கன்னா

20191105162225871.jpg

நிலவின் தென் துருவத்தினை ஆராய்ச்சி செய்ய இந்தியா சந்திராயன் 2 என்ற அதிநவீன தொழில்நுட்ப செயற்கைகோளை மிகக்குறைந்த செலவில் வெற்றிகரமாக நிலவிற்கு அனுப்பியது.

சந்திராயன் 2 செயற்கைகோளிலிருந்து லேண்டர் பிரிந்து, அதிலிருந்து ரோவர் தரையிறங்க முயற்சி செய்த போது நிலவின் தரைப்பகுதியை தொடுவதற்கு முன்பு 2.1 கி.மீ தூரத்தில் இஸ்ரோவுடன் லேண்டர் தொடர்பு இழந்து, நிலவில் மென்மையான தரையிறக்கம் நிகழாமல் பின்னடைவு ஏற்பட்டதை பார்த்து, ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ச்சி அடைந்தது.

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் 600 கிமீ தொலைவில் நிலவின் தரையின் மேற்பரப்பில் மோதி விழந்து இருக்கலாம் என்பதால், விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்த இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

நாசா நிலவினை ஆய்வு செய்ய எல்.ஆர்.ஒ. ஆர்பிட்டர் அனுப்பி நிலவினை சுற்றி வருகிறது. விக்ரம் லேண்டர் விழந்து நொறுங்கிய நிலவின் தென் துருவத்தினை எல்.ஆர்.ஒ ஆர்பிட்டர் கடந்த போது, புகைப்படங்களை எடுத்து நாசா ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியது. முதலில் வந்த புகைப்படங்கள் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மீண்டும் அக்டோபர் 14, 15 தேதிகளில் எல்.ஆர்.ஒ ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் விழந்து நொறுங்கிய இடத்தினை கடந்த போது, எடுத்த புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பியது. விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் விழந்து நொறுங்கிய இடத்தின் புகைப்படங்களை நாசா தனது இணையதளத்தில் வெளியிட்டது.

சென்னை ரெயின் என்ற மழை தகவல் தரும் தனியார் வலைதளத்தினை நடத்திவரும் சென்னையை சேர்ந்த தமிழக இன்ஜினியர் சண்முக சுந்தரம், செப்டம்பர் 7 தேதிக்கு முன்னரும் அதன் பின்னால் நாசா வெளியிட்ட நிலவின் தென் துருவ புகைப்படங்களையும் தன் கம்ப்யூட்டரில் டவுன் லோடு செய்து, பிக்சல் பை பிக்சலாக பெரிதாக்கி ஆராயத் தொடங்கினார். விக்ரம் லேண்டர் விழந்த இடத்தில் இருந்து 750 மீட்டர் வடமேற்கில் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை கண்டறிந்தார். நவம்பர் 11-ம் தேதி நாசா வெளியிட்ட புகைப்படத்தில், விக்ரம் லேண்டர் விழுந்ததால், நிலவின் தென் துருவத்தில் ஏற்பட்ட பள்ளம், அதனருகே விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் சிதறி விழந்து இருந்தது .

20191105162558609.jpg

விக்ரம் லேண்டர் லேண்டர் நிலவின் தென் துருவ தரையின் மேற்பரப்பில் உடைந்த இடத்தில் S என்று குறிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பச்சை நிறப்புள்ளிகள் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள்... நீல புள்ளிகள், விக்ரம் லேண்டர் மோதிய வேகத்தில் நிலவின் மண்பகுதிகள் சேதாரப் பகுதி என தமிழக தமிழக இன்ஜினியர் சண்முக சுந்தரம் நாசாவிற்கு சந்திராயன் 2 லிருந்து பிரிந்து சென்ற லேண்டர் கருவி, நிலவில் விழந்து நொறுங்கியதை தான் கண்டுபிடித்ததை இமெயில் அனுப்பினார்.

அவரது தகவல்களை நாசா விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து, தமிழக இன்ஜினியர் சண்முக சுந்தரம் நாசாவின் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் கருவி உடைந்ததை முதன்முதலில் கண்டுபிடித்தவர் என நாசாவின் எல் ஆர் ஒ ஆர்பிட்டர் துணை திட்ட விஞ்ஞானி ஜான்கெல்லர் பாராட்டி கடிதம் எழுதி இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

சண்முக சுந்தரம் என்ன சொல்கிறார்?

20191105162824444.jpg

"நான் மதுரையில் பிறந்து, திருநெல்வேலி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஞினியரிங் பட்டம் பெற்று, சென்னை தொழில்நுட்ப பூங்காவில் பணியாற்றி வருகிறேன். நிலவின் தென் துருவத்தில் காணமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினேன். நாசா வெளியிட்ட விகரம் லேண்டர் விழந்து நொறுங்கிய பகுதியின் புகைப்படத்தினை டவுன்லோடு செய்து, தொடர்ந்து 4 முதல் 5 நாட்கள் தினமும் 7 மணி நேரம் இணைய தளத்தில், என் மடிக்கணிணியை வைத்துகொண்டு புகைப்படங்களை இன்ச் இன்ச்சாக ஆராய்ந்தேன். விக்ரம் லேண்டர் காணாமல் போவதற்கு முன்பும் தற்போதும் கிடைத்த புகைப்படங்களை ஒப்பிட்டு பிக்சல்களை ஆய்வு செய்த போது, விக்ரம் லேண்டர் இறங்க திட்டமிட்டிருந்த இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் லேண்டரின் முன்பகுதி விழுந்து நொறுங்கி கிடப்பதையும், 24 இடங்களில் விகரம் லேண்டரின் உடைந்து சிதறிய பாகங்கள் இருந்ததை உறுதிபடுத்தினேன். நாசாவிற்கும் இஸ்ரோவிற்கும் எனது கண்டுபிடிப்பினை இமெயில் செய்தேன். நாசா எனது கண்டுபிடிப்பினை முறைப்படி அங்கீகரித்து பாராட்டு தெரிவித்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் எனக்கு வரவேற்பு கிடைத்தது. சிறு வயது முதலே ராக்கெட் ஏவுதலில் எனக்கு ஆர்வம் உண்டு. இஸ்ரோ ஒவ்வொரு முறை ராக்கெட் ஏவும்போதும் நான் அதை பார்க்க தவறுவது இல்லை. என்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்து, என் கண்டுபிடிப்பை பாராட்டி பூங்கொத்து கொடுத்தது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் நாசாவில் பாராட்டு பெற்ற தமிழக இன்ஜினியர் சண்முக சுந்தரம்.

"தமிழக இன்ஜினியர் சண்முக சுந்தரத்தினை அவரது வீட்டில் சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தினேன். அமெரிக்க இளைஞர்கள் விஞ்ஞான கண்டுபிடிப்பு தகவல்களை நாசாவுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் அமெரிக்க இளைஞர்கள் நிறைய சாதிக்க முடிகிறது. நம் நாட்டிலும் இன்ஞினியர் சண்முக சுந்தரம் போன்ற இளைஞர்கள் பல்வேறு சாதனைகளை செய்யமுன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக இன்ஞினியர் சண்முக சுந்தரத்திற்கும் நமது நாட்டிற்கும் உயர்வை தரும். வெளிநாடுகளில் மட்டும் தான் சாதனை படைக்க முடியும் என்பதில்லை, நம்மாலும் சாதிக்க முடியும் என்பதனை நிலவின் தென் துருவத்தில் விகரம் லேண்டர் விழுந்த இடத்தினை கண்டுபிடித்த தமிழக இன்ஞினியர் சண்முக சுந்தரம் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது" என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணை தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

20191105163739258.jpg

"சந்திரயாயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நாங்கள் கடந்த செப்டம்பர் 10-ம் தேதியே நிலவில் கண்டுபிடித்துவிட்டோம். அதன்பின் எவ்வளவு முயற்சி செய்தும் விக்ரம் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை. நாசாவிற்கு முன்பே இஸ்ரோ சந்திராயன் 2 செயற்கைகோள் மூலம் கண்டறிந்து, இஸ்ரோ சமூக வலைதளமான டிவிட்டரில் செப்டம்பர் 10 தேதியே பதிவிட்டு விட்டோம்" என இஸ்ரோவின் தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இஸ்ரோவின் டிவிட்டரில் வந்த செய்தியில் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் என்ன ஆனது என்ற தகவல் இல்லை ! இஸ்ரோ கூற்றுப்படி பார்த்தாலும், விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் விழந்து நொறுங்கியதை முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் தமிழகத்தின் இன்ஜினியர் சண்முக சுந்தரம் என்பது ஊர்ஜிதமாகிறது.