அழகான ஆப்பிள் தோட்டம்!
‘தேன் நிலவு’ என்றாலே புதுமணத் தம்பதிகளுக்கு முன்பெல்லாம் நினைவுக்கு வருவது காஷ்மீரும், சிம்லாவும் தான். திருமணமாகி இந்த பிரதேசங்களுக்கு ‘தேன் நிலவு’ போய் வந்தால் சிவப்பான, அழகான பெண் குழந்தை பிறக்கும் என்று நம்பிய காலம் இது.
நேரு முதல், இந்திய திரைக்கலைஞர்கள் ராஜ்கபூரில் துவங்கி, நம்மூர் இயக்குனர் ஸ்ரீதர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வரை ஈர்த்த சிவப்பு அழகிய பள்ளத்தாக்கு காஷ்மீர்.
“மலைகள் மீதான என் தேசம், காஷ்மீருடனான என் உறவு, குறிப்பாக என்னை அவற்றிடம் ஈர்த்தன. அங்கே நான் நிகழ் கால நீரோட்டத்தை, ஆற்றலை, அழகை மட்டும் காணவில்லை. கடந்த காலங்களின் நினைவில் பதிந்த அழகுகளையும் கண்டேன். இந்தியாவைப் பற்றி நினைக்கும் போது, பலவற்றை நினைவு கூர்கிறேன். ஆனால், எல்லாவற்றையும் விட, எல்லாவற்றுக்கும் மேலாக பனிமுடி தரித்த இமயத்தையும், வசந்த காலத்தில் புதிய பூக்கள் சூடிய, நுங்கும் நுரையுமாகப் பொங்கிப் பிரவாகித்து ஜதியிட்ட சத்தத்துடன் ஓடிவரும் சிற்றாறுகளுடன் கூடிய காஷ்மீரின் மலைப் பள்ளத்தாக்குகளையும் நினைத்துப் பார்க்கிறேன்” என்று ஜவஹர்லால் நேரு 1946-ம் வருடம் சொன்னார்.
நம் ஊரில் இளமை இயக்குனர் என்று பெயர் பெற்ற ஸ்ரீதர், காதல் கதைகள் எடுப்பதில் வல்லவர். இவரது முதல் படமான கல்யாணப் பரிசு ஒரு முக்கோண காதல் கதை. இது வெள்ளி விழா கொண்டாடிய படம். இயக்குனர் ஸ்ரீதர், சிவாஜி - சரோஜாதேவியை வைத்து “விடிவெள்ளி” படம் எடுத்தார். படம் சரியாக ஓடவில்லை. அடுத்து அவர் தேர்ந்தெடுத்த காதல் கதைக்கான களம் காஷ்மீர். படத்தின் தலைப்பே ‘தேன் நிலவு’ தான்.
ஆனந்த விகடன் மணியனின் திரைப்பட நிறுவனம் உதயம் ப்ரொடக்ஷன்ஸ். இவர்கள் தயாரித்து, எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘சிரித்து வாழ வேண்டும்’. இந்தப் படத்தை இயக்கியர் எஸ்.எஸ். பாலன். இவர் தான் எங்கள் எம்.டி. எஸ். பாலசுப்ரமணியன்.
உதயம் ப்ரொடக்ஷன்ஸ் எடுத்த இன்னொரு படம் ‘இதய வீணை’. இதிலும் எம்.ஜி.ஆர் தான் கதாநாயகன். ‘இதய வீணை’ மணியன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வந்தது. படத்தின் கதாநாயகன் தமிழகத்தை சேர்ந்தவன். தந்தையிடம் கோபித்துக் கொண்டு காஷ்மீர் சென்று அங்கு வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவன்.
‘இதய வீணை’ படத்திற்காக கவிஞர் புலமைப்பித்தன் காஷ்மீர் பற்றி பாடல் எழுதினார்.. இந்தப் படத்திற்கு முன்பே சிவகுமார் – ஒரு புதுமுகத்துடன் நடித்த படம் ‘மதன மாளிகை’. இதில் புலமைப் பித்தன் எழுதி, ஜேசுதாஸ் பாடிய பாடல்...
‘ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது – அதன்
இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது’ என்று எழுதியிருப்பார்.
இதய வீணை படப்பாடலில் காஷ்மீரின் பெருமைகளைச் சொல்லியிருப்பார் புலமைப்பித்தன். அதை கதாநாயகன் எம்.ஜி. ஆர் பாடுவார்..
இந்தப் பாட்டில் காஷ்மீரின் பெருமைகளையும் சொல்லியிருப்பார், அங்கே காவல் நிற்கும் வீரர்களைப் பற்றியும் சொல்லியிருப்பார் புலமைப் பித்தன்...
வணக்கம்
வந்தனம்
நமஸ்தே
நமோஷ்கார்!
காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்!
ஓடுகின்ற மேகம் வந்து
உனைத் தொட்டுப் பேசும்!
ஓடை நீரில் மேடை போட்டு
வாடை காற்றும் வீசும்!
என்னென்ன வண்ணங்கள்
பூவில் உண்டென்று!
சொல்லுங்கள், காணுங்கள்
சொர்க்கம் இதுவென்று!
THIS IS A PARADISE ON EARTH
SO
A VISIT IS WORTH!
COME ON ENJOY
SUMMER SEASON
CHARMING FLOWERS
HANGING GARDENS
ஆடைகள் கூடைகள்
கம்பளம்
ஆயிரம் காணலாம்
இவ்விடம்!
கைத்தொழில்
வேலை செய்யும் ஏழை
கண்ணீரை மாற்றுகின்ற
நாளை!
நாமெல்லாம் சிந்தித்தால்
நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும்!
பொற்காலம் உண்டாகும்!
வெடவெடவென்று குளிரும்போது
கதகதப்பாகை இருப்பதற்கு!
இங்கே வாழும் மனிதர்
யாவரும் வயிற்றில்
கட்டி வைத்திருப்பார்
ஒரு கனப்பு!
வாடைக்கு பயந்தாரோ!
இல்லை
வாழ்வுக்கு பயந்தாரோ!
மடியினில் நெருப்பை
கட்டிக் கொள்வார்
எனும் பழமொழி
இவர்தான் படைத்தாரோ!
என் தாய் திருநாட்டிற்கு
வாசல் இது!
எந்நாட்டவர்க்கும்
கலைக்கோவில் இது!
அண்ணாவின் பேர் சொல்லும்
காஞ்சியைப் போல்
நேருவின் புகழ் சொல்லும்
பூமி இது!
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ?
தேசம் மானம் நம்மை விட்டுப் போகுமோ ?
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்.
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்!
சங்கர் கணேஷ் இசையமைத்த இந்தப் பாடலில் தான் கவிஞர் புலமைப்பித்தனின் காஷ்மீர் பற்றிய பூரிப்பும், குதூகலமும், கூடவே சந்தேகமும், பயமும் கலந்த வரிகள் தான் எத்தனை தீர்க்கதரிசனமானவை?
வாடைக்கு பயந்தாரோ? இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ?
ஒரு காலத்தில் காஷ்மீரத்து மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வாடைக்குத்தான் பயந்தார்கள்!
இப்போது வாழ்வுக்கு பயப்படுகிறார்கள்!
மடியினில் நெருப்பைக் கட்டிக் கொள்வார் என்னும் பழமொழி இவர்தான் படைத்தாரோ? பழமொழியை அவர்கள் படைக்காவிட்டாலும், இன்று காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும், ஏன் உலகத்து மக்களும் கூட அங்கே தலைவிரித்தாடும் தீவிரவாதத் தாக்குதல்களினால், பாகிஸ்தான் அரசினால் பயிரிட்டு வளர்க்கப்படும் பயங்கரவாதத்தினால் மடியினில் நெருப்பை கட்டிக் கொண்டுதான்இருக்கிறார்கள்.
ராணுவம், அவர்களின் உளவுத்துறை (தீவிரவாத உற்பத்தி) ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மை அரசு!
நேருவிற்கு காஷ்மீர் மீதான காதலினால்தான் எத்தனை கொடூரங்கள்!
இப்போது காஷ்மீர் கதைக்கு வருவோம்!
வெள்ளைக்காரர்கள் நமக்கு சும்மா சுதந்திரம் கொடுத்து விட்டுப் போகவில்லை.
முதலில் இந்தியா என்பது ஒரு தேசமாகவே கருத முடியாது என்பதுதான் வெள்ளைக்காரர்கள், பல ஐரோப்பிய எழுத்தாளர்கள், அறிவிஜீவிகள், கல்வியாளர்கள், கருத்தாக இருந்தது!
ஏன் பல இஸ்லாமிய கிழக்காசிய நாடுகளின் இஸ்லாமிய கவிஞர்களுக்கும் இதே எண்ணம் தான்.
ஏராளமான மக்கள். ஏராளமான பிரிவினர். அதனால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டுள்ளனர். கவிஞர் மிர்ஸா அஸதுல்லாகான் காலிப் டெல்லியிலிருந்து கல்கத்தாவுக்குப் புறப்பட்டார்.
அது 1827ம் வருடத்திய வசந்த காலம்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் இந்துக்களின் புனித நகரமான காசியை அடைந்தார். அங்கே அவர் ‘திருவிளக்குகளின் தேவாலயம்’ (Chirag – i –Dair)என்ற கவிதையை எழுதினார். காலத்தால் அழியாத அமர வரிகள் கொண்ட கவிதை இது! இப்படி வர்ணித்தவர் ராமசந்திர குஹா! இந்தியாவின் மிகப் பெரிய, புகழ்பெற்ற சரித்திர ஆசிரியர். இந்தியா (போலியான) மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
இவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் ‘INDIA AFTER GANDHI’ இது தமிழில் ‘காந்திக்கு பிறகு இந்தியா’ என்கிற தலைப்பில் வந்திருக்கிறது. இதை மொழி பெயர்த்தவர். ஆர்.பி. சாரதி! தமிழில் அதன் வெளியீட்டாளர்: கிழக்குப் பதிப்பகம்.
குஹாவால் அமரகாவியம் என்று புகழப்பட்ட அந்த கவிதையின் சாராம்சம் இதுதான்.
முதுபெரும் முனியிடம் ஒர் இரவு சொன்னேன்.
நல்லவை, நம்பிக்கை, நன்றி, நேசம்,
யாவும் அகன்றன இத்துயர நாடுவிட்டு
தந்தையும் மகனும் கழுத்தைப் பிடிக்க
சகோதரர் சண்டை சகோதரரோடு,
ஒற்றுமை, ஓரணி இழந்தன மதிப்பை
இத்தனை தீய அறிகுறி இடையிலும்
இறுதி நாள் ஏன் இன்னும் வரவில்லை?
இறுதிப் பேரழிவு யாருடைய கையில்?!
முகலாயப் பேரரசின் வீழ்ச்சிப் பின்னணியில் காலிஃப் எழுதிய கவிதை.
இறுதிப் பேரழிவு யாருடைய கையில்? (வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலோடு இந்த கவிதையைப் பொருத்திப் பார்த்தால் நான் பொறுப்பல்ல)
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பதன் பின்னணி தெரிந்தால், இன்றைய காஷ்மீர் நிலையும் பயங்கர தேசமான பாக் நடத்தும் ரத்த வெறியாட்டமும் புரியும்.
(தொடரும்)
Leave a comment
Upload