அரசியல்
​​​​“ஆளுங்கட்சியின் அதிரடி மாற்றம்! உற்சாகத்தில் பழைய தொண்டர்கள்!" - ஸ்வேதா அப்புதாஸ்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில் ஊட்டி நகரில் பட்டாசு வெடி சப்தம் கேட்க, நம் நாட்டு விமானப்படை வீரர் அபிநந்தன் தான் நாட்டிற்கு திரும்பி வந்து விட்டார் என்று அனைவரும் நினைக்க, பின்னர் தான் தெரிந்தது நீலகிரி அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலர் அர்ஜுனன் மாற்றப்பட்டு முன்னாள் சுற்றுலா மற்றும் உணவு துறை அமைச்சர் புத்தி சந்திரன் புதிய மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார் என்ற செய்திதான் நீலகிரி முழுவதும் பட்டாசு வெடிக்கச் செய்தது என்று.

20190208120111457.jpg

ஏன் இந்த திடீர் மாற்றம்...? அதுவும் நாடாளுமன்ற தேர்தல் வேலைகள் படு சுறுசுறுப்பாக துவங்கிய சமயத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீலகிரியில் இந்த அதிரடி மாற்றத்தை ஏன் உருவாக்கினார் என்று விகடகவிக்காக ஆழ்ந்து விசாரித்தோம்.

ஜெயலலிதா கே.ஆர்.அர்ஜுனனை நீலகிரி மாவட்ட செயலாளராகவும் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுத்து நீலகிரிக்கு மகுடம் சூட்டினார் என்பதால், அனைத்து அ.தி.மு.க.வினரும் அர்ஜுனனை ஒரு குட்டி அரசராகவே பாவித்தனர் என்று சொன்னால் மிகையாகாது.

20190208120808192.jpg

அர்ஜுனனை சுற்றி அவருக்கு வேண்டப்பட்ட ஒரு கூட்டம் அவர் எங்கு சென்றாலும் வலம் வந்த வண்ணம் இருந்தது. அதில் கப்பச்சி வினோத் இளைஞர் அணி தலைவராக அர்ஜுனனின் வலது கரமாக எப்பொழுதும் தளபதியாக உடன் வந்து கொண்டிருந்தார். அர்ஜுனனை மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து நீக்கியவுடன் வினோத் உடனடியாக புத்தி சந்திரன் இடது பக்கத்தில் இடம் பிடித்தது தான் ஆச்சிரியமான விஷயம்.

20190208120226852.jpg

ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு அப்பல்லோவில் இருந்தபோது மருத்துவமனை வாசலில் அர்ஜுனன் காத்துக்கிடந்ததை அனைவரும் அறிந்திருந்தனர். அம்மா இறந்த பின் சசிகலாவின் பக்கம் தாவின அர்ஜுனன் ஜெ. சமாதியில் சசிகலா ஆக்ரோஷமாக சபதம் எடுத்தபோது, சின்னமா வாழ்க’ என்று அடித்து கோஷம் எழுப்பியதை தமிழகமே கண்டது. பின்னர் தினகரன் பக்கம் தாவ இருந்த அர்ஜுனன் நூலிழையில் எடப்பாடி பக்கம் சாய்ந்து தன் பதவியை தக்கவைத்து கொண்டு மாவட்டத்தை தன் பக்கம் இறுக்கமாக பிடித்து கொண்டார்.

நீலகிரிக்கு என்று இரண்டு எம்.பி-கள். ராஜ்யசபைக்கு அர்ஜுனன், மக்களவைக்கு கோபாலகிருஷ்ணன். ஒரு கட்டத்தில் அர்ஜுனன் கோபாலகிருஷ்ணனை ஓரம் கட்டி வந்தார் என்ற பேச்சு எழுந்தது. அதுவும் உண்மை. முதல்வரை கோபாலகிருஷ்ணன் குன்னூரில் தன் குல கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைத்து தன் முத்திரையை பதிக்க, அர்ஜுனன் சற்று ஆடிப்போய்விட்டார். பின்னர் கோபாலகிருஷ்ணனை ஒதுக்காமல் பார்த்து கொண்டார் இந்த ராஜ்ய சபை உறுப்பினர்.

மறைமுகமாக புத்தி சந்திரனுக்கும் அர்ஜுனனுக்கும் ஒரு வித வெறுப்பு தொடர்ந்து கொண்டிருக்க... புத்தி சந்திரன் அமைதியாக அரசியல் காய்களை மேலிடத்திற்கு நகர்த்தி கொண்டிருந்தார். அமைச்சர் வேலுமணியின் மறைமுக சீடராக செயல்பட்டு வந்த புத்தி தன் கூர்மையான புத்தியை சரியான தேர்தல் நேரத்தில் யூஸ் செய்ததின் விளைவு நினையாத நேரத்தில் மாவட்ட செயலர் பொறுப்பு கிரீடமாக அவருக்கு வந்து சேர்ந்தது. அர்ஜுனனுக்கு இது ஒரு ஷாக்கிங் நியூஸ்.

20190208120346134.jpg

புத்தி சந்திரன் - 2011-ல் ஊட்டி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவரை, முதல்வர் ஜெயலலிதா தன் அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் உணவு துறை அமைச்சராக பதவி கொடுத்தார். பதவி சற்று கர்வத்தை ஏற்படுத்தியத்தின் விளைவு ஆவின் பால் பூத் வழங்கும் விவகாரத்தில் அமைச்சரின் தலையீட்டால் வெறுத்துப் போன கட்சி பிரமுகர்கள், விஷயத்தை முதல்வரிடத்திலும் பத்திரிகையிலும் வெளியிட.. உடனடியாக முதல்வர் அமைச்சர் பதவியை அதிரடியாக பறித்தார். 2016 தேர்தலில் ஜெ இவருக்கு சீட்டு வழங்கவில்லை. அதை தொடர்ந்து வன வாசத்தை மேற்கொண்டிருந்த புத்தி சந்திரன் திடீர் என்று மாவட்ட செயலர் பதவியை எட்டிப் பிடித்து அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும்
மூழ்கடித்துள்ளார்.

இந்த தருணத்தில் நீலகிரி ஆளும் கட்சியில் திடீர் என்று பரபரப்பு தொற்றிக் கொண்டது. காணாமல் போன பழைய கட்சிப்பிரமுகர்கள் புடைசூழ புத்தி சந்திரனை அழைத்துக் கொண்டு வந்து அம்மா படத்திற்கு மாலை கொடியேற்றி வைபவத்தை நடத்தி அசத்தி விட்டார்கள்.

2019020812041817.jpg

கட்சியின் முத்த உறுப்பினர் முன்னாள் மாவட்ட செயலர் வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணனை சந்தித்தோம்... தற்போது ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் உண்மையில் வரவேற்கத்தகுந்த ஒன்று. தலைமை, அர்ஜுனனை மாவட்ட செயலர் பதவியில் இருந்து தூக்கி எறிந்த நல்ல முடிவை எடுத்தது என்னைப் போன்ற முத்த பழைய கட்சி பிரமுகர்களுக்கு சந்தோஷமான விஷயம். 1972 முதல் என்னைப் போன்று பலர் கட்சிக்காக உழைத்து கொண்டு இருக்கிறோம். அதிலும் புரட்சி தலைவர் எம் .ஜி.ஆர் காலத்தில் இருந்து நாங்கள் எல்லாம் உறுப்பினர்கள். எங்களை எல்லாம் சுத்தமாக கண்டுகொள்ளாமல் உதறிவிட்டு, யார் யாரோ புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு நீலகிரியில் ஒரு குட்டி ஆட்சியை அர்ஜுனன் செய்து வந்தது தான் வருத்தமான விஷயம்.

நான் மாவட்ட செயலாளராக இருந்த போது தான், மில்லர் சுற்றுலா துறை அமைச்சராக பொறுப்பேற்ற விஷயங்கள் நடந்துள்ளன. பின்னர் அம்மா எங்களை எல்லாம் அரவணைத்து சென்றார். அம்மாவின் முடிவை ஏற்று கொண்டு கட்சிக்காக நாங்கள் எல்லோரும் உழைத்து வந்தோம். அர்ஜுனன் மாவட்ட செயலர் பொறுப்பை ஏற்ற உடன் எல்லாமே தலைகீழ். கட்சிக்காக உழைத்து வந்த பல உள்ளங்கள் ஒதுக்கப்பட்டு காணாமல் போய்விட்டார்கள். அதில் நானும் ஒருவன். அம்மா உடல் நலம் குன்றி இறந்து விட இதைப்பற்றியெல்லாம் கேட்க முடியாமல் போனது.

ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் அதை எப்படி கையாண்டு இருக்கவேண்டும்? நம்மை விடுங்கள்... மாவட்டத்திற்கு என்று எதாவது செய்துள்ளாரா இந்த அர்ஜுனன்? சொல்லுங்க பார்க்கலாம். இந்த அழகில் இந்திய ராணுவத்துறையில் இவர் ஒரு உறுப்பினர் என்பது வேடிக்கையான விஷயம். இப்படி நிறைய சொல்லலாம்... ஆனால் தற்போது தலைமை மற்றும் முதல்வர் எடுத்துள்ள முடிவு பாராட்டுக்கூறியது மற்றும் வரவேற்புக்கூறியது. அதே சமயம், புதிய மாவட்ட செயலர் புத்தி சந்திரன் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரையும் அரவணைத்துச் சென்றால்தான் தன் பதவியை தக்கவைத்து கொள்ளமுடியும். தற்போது வரக்கூடிய தேர்தல் அவருக்கு ஒரு சாவல். எங்களின் ஒத்துழைப்பு புத்திக்காக அல்ல.. கட்சிக்காக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை”.

2019020812073355.jpg

மாவட்டம் முழுவதும், புத்தி சந்திரனின் மாவட்ட செயலர் பதவி ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. பழைய உண்மையான தொண்டர்கள் வந்து குவிந்து விட்டனர். ஓரங்கட்டப்பட்ட அனைவரும் ஆஜர் என்று சொல்லலாம்.

20190208120840793.jpg

உதகை ஆவின் துணை தலைவர் குமார் கூறும்போது, “இந்த அதிரடி மாற்றம் ஒரு புதிய எழுச்சியை நீலகிரி ஆளுங்கட்சியில் ஏற்படுத்தியுள்ளது. அது வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். அர்ஜுனன் அனைவரிடமும் வேண்டாத கும்பிட்டு மட்டும் போடு விட்டு யாரையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவருக்கு வேண்டப்பட்ட உறவினர்கள் மட்டும் சிலரை தவிர பழைய உண்மையான சீனியர் தொண்டர்களை ஒதுக்கிவிட்டார். அதன் விளைவு தற்போது தெரிந்துள்ளது. மாவட்ட செயலர் மாற்றம் என்பது ஒரு பெரிய இடி அவருக்கு. கூட்டுறவு தேர்தலில் நீங்கள் பார்க்கலாம். அர்ஜுனன் ஆளை எதிர்த்து ஆளும் கட்சி பிரமுகர் போட்டியிடுவதை எங்காவது பார்த்திருப்பீர்களா. இந்த அதிசியம் இவரால் நம்ம மாவட்டத்தில் நடந்துள்ளது. பல தேவையற்ற விஷயங்களை அர்ஜுனன் செய்ததின் விளைவு இந்த மாற்றம். புத்தி சந்திரனும் ஏனோ தானோ என்று நினைக்க முடியாது. ஏற்கனவே அம்மா தூக்கி எறிந்த அமைச்சர். தற்போது திருந்தி அமைதியாக இருந்ததால் முதல்வர் இந்த பதவியை கொடுத்துள்ளார். அவரின் புத்தியான நடவடிக்கையால் கட்சியை வலுப்படுத்தலாம். எங்களைப் போன்றவர்கள் நல்ல ஆரோக்கியமான அரசியலுக்கு தோள் கொடுப்போம். தேர்தலில் எங்க கட்சியின் வெற்றி உறுதி. மீண்டும் கோபாலகிருஷ்ணனுக்கு சீட் கொடுத்தால் படு தோல்வி தான் அதையும் மேலிடம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று முடித்தார்.

20190208120908620.jpg

இந்த அதிரடி மாற்றத்திற்கு மறைமுக காரணம் முன்னாள் நகர செயலர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ராஜா முகமது என்று கூறப்படுகிறது.

அவரை அவரின் மார்க்கெட் அலுவலகத்தில் சந்தித்தோம்... இந்த பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது நம் தலைமை மற்றும் முதல்வர் தான். பல புகார்கள் இவர் மேல் சென்றதின் விளைவு மாவட்ட செயலர் பதவியை அர்ஜுனனனிடம் இருந்து பறித்து புத்தி சந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் முதல்வர் துணை முதல்வர் மற்றும் நம் மாவட்ட அமைச்சர் வேலுமணியின் ஆழமான செயல்பாடு தான் காரணம். இது மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜுனன், மாவட்ட செயலர் மற்றும் ராஜ்ய சபை உறுப்பினர் என்ற மிக பெரிய பொறுப்பை வகித்துவந்தார். அப்படிப்பட்டவர் எப்படி இருக்கவேண்டும். பழைய மற்றும் அடிப்படை தொண்டனிடம் எந்த தொடர்பும் இல்லை. அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்தார். அவர் மாவட்டத்தில் எங்கு சென்றுள்ளார்... கீழ்கோத்தகிரி முதல் தேவால வரை எங்காவது சென்று கட்சி கொடி ஏற்றியிருப்பாரா? அரசு விழா மற்றும் மாவட்ட ஆட்சியர் நடத்தும் நிகழ்வில் இவர் நுழைந்து தலையை காட்டி வந்தார் என்பது தான் உண்மை. அவருடன் ஒரு நிரந்தர கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டம் கூட தற்போது இந்த பக்கம் வந்துவிட்டது என்றால் பாருங்கள். புத்தி சந்திரன் வகித்த மாநில அமைப்பு செயலாளர் பதவியை தற்போது இவருக்கு கொடுத்துள்ளனர். மாவட்ட செயலர் பதவியை விட இது பெரியது கிடையாது. ராஜ்ய சபா உறுப்பினர் என்ற முறையில் என்ன வேலையை இவர் செய்துள்ளார் சொல்லுங்கள். இப்படிப்பட்டவரால் வளர்ந்தவர்கள் அவரின் உறவினர்களும் வேண்டப்பட்டவர்களும் தான்.

புத்தி சந்திரன் அறிவிப்பை தொடர்ந்து எப்படிப்பட்ட கூட்டம் வந்தது பார்த்தீர்களா?! முடங்கி கிடந்த கட்சியின் உண்ணமையான தொண்டர் படை வீறு கொண்டு எழுந்து வந்துள்ளது. அதில் நானும் ஒருவன்.

புத்தி சந்திரன் தன் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர் பதவியை இழந்து கடந்த ஏழு வருடமாக வன வாசத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கு அந்த பாதிப்பு என்ன என்று புரிந்திருக்கும் அதை புரிந்த கொண்டு திறம்பட செயல் படுவார் என்று தெரிகிறது . வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் நம்ம கட்சி வெற்றி பெற்று சாதனை புரியும்.

நாம் புதிய மாவட்ட செயலர் புத்தி சந்திரனை தொடர்பு கொண்டோம். 'சென்னை சென்று வந்து சந்திக்கிறேன்' என்று கூறினார். பின்னர் ஊட்டி கமர்ஷியல் சாலையில் காரில் ஏறினவரிடம் பேச... 'சென்னை சென்றுகொண்டிருக்கிறேன் வந்து பேசுகிறேன்' என்று கூறினார். பின்னர் சென்னையில் இருந்து திரும்பி வந்தவரை தொடர்பு கொண்டபோது...

20190208121502426.jpg

'மீண்டும் அவசரமாக சென்னை அழைத்துள்ளனர்' என்று கூற கடைசியில் போனில் பேசினோம்... "நம் கட்சி மேலிடம் ஒரு திறமையான பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளனர், அதற்கு முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நன்றி. என் பணியை திறம்பட செய்வேன்"

"கடந்த 2011-ல், அமைச்சர் பதவி, மாவட்ட செயலர் பதவி பறிபோய் அப்செட்டில் வன வாசத்தில் இருந்திர்களா?"என்று கேட்க...

"நோ... நோ... யார் சொன்னது. அமைதியான முறையில் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த மாநில அமைப்பு செயலர் பதவியை திறம்பட செய்து வந்தேன். அதன் விளைவு தான் இந்த பதவி மீண்டும் எனக்கு கொடுத்துள்ளார்கள்."

"அர்ஜுனனை பற்றி என்ன சொல்கிறீர்கள்?"

நான் அவரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அவர் ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் தற்போது மாநில அவை செயலர். தன் பணியை அவர் திறம்பட செய்ய வாழ்த்துக்கள்."

"தங்களின் மாவட்ட செயலர் பணி மிக முக்கிய நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கிடைத்துள்ளதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"எனக்கு தற்போது கிடைத்துள்ள பதவி ஒரு சவாலான ஒன்று. கட்டாயம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம். அது மட்டும் உறுதி..."

"அர்ஜுனன் அடிமட்ட தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது... அதை நீங்கள் எப்படி சரி செய்ய போகிறீர்கள்?"

"நான், அர்ஜுனன் உட்பட அனைவரையும் அரவணைத்து செல்வேன். இதில் எந்த சந்தேகமும் வரக்கூடாது. தற்போது தேர்தல் பணி தான் முக்கியம். அதில் என் கவனம் முழுமையாக இருக்கப்போகிறது. சென்னை சென்று வந்து உங்களை சந்திக்கிறேன்" என்று கூறி விடைபெற்றார் புத்தி சந்திரன்.

20190208121025450.jpg

நாம் அர்ஜுனனை தொடர்பு கொண்டபோது, 'சென்னையில் முதல்வரை சந்திக்க சென்று விட்டு பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியையும் சந்தித்து விட்டு வந்து கொண்டிருக்கிறேன்'என்று கூறினார்...

20190208121050303.jpg

பின்னர் அவரது அலுவலகத்தில் ஒரு வழியாக அவரை சந்தித்தோம்...

"இந்த திடீர் மாற்றத்தால் தங்களின் மன நிலை எப்படி உள்ளது?"

"எந்த பாதிப்பும் இல்லை. எனக்கு ப்ரோமோஷன்தான் கொடுத்துள்ளார்கள். மாநில அமைப்பு செயலராக, இனி மாநிலம் முழுவதும் செல்லவேண்டும். முன்பு இருந்ததை விட அதிகமாக பிஸி."

"தங்கள் கட்சி பிரமுகர்களை அரவணைத்து செலவில்லை மற்றும் பழைய அடிமட்ட தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறுகிறார்களே?"

"அது எல்லாம் பொய். தினகரன் பக்கம் சென்றவர்களை நான் எப்படி கண்டுகொள்ள முடியும் . நான் எல்லோரையும் அரவணைத்து தான் சென்றுள்ளேன்."

"மாவட்டத்தில் உங்களின் பணி இனி எப்படி இருக்கும்? வரக்கூடிய தேர்தலை எப்படி சந்திக்கபோகிறீர்கள்?"

"மாவட்டத்தில் எல்லோரும் சேர்ந்து இணைந்து இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறோம். மாவட்ட செயலர் புத்தி சந்திரனுக்கு என் முழு ஒத்துழைப்பு என்றும் உண்டு. வெற்றி தான் எங்கள் குறிக்கோள்" என்று முடித்துக்கொண்டார்.

20190208121625834.jpg

ஆளும்கட்சியின் செயல்பாட்டை எதிர் கட்சியான தி.மு.க உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது . தி .மு .க வின் ஒரு முக்கிய பிரமுகர் நம்மிடம் கூறும்போது,

“ஒரு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பெரிய ஆளும் கட்சி ஒரு மாவட்ட செயலரை மாற்றியது மிகப் பெரிய தவறு. அந்த அம்மா இருந்த போது எந்த மாற்றத்தையும் தேர்தல் நேரத்தில் செய்யமாட்டார். தேர்தல் முடிந்த கையொடு அதிரடி மாற்றங்களை செய்வார். ஆனால் தற்போதைய முதல்வர் இப்படிப்பட்ட திடிர் மாற்றத்தை செய்தது எங்க கட்சிக்கு சாதகம் தான். மேலும் தற்போது ஒரு தகவல், நீலகிரி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பாக, தேமுதிக கட்சியின் வேட்பாளர் நீலகிரி தொகுதியில் நிறுத்தப்படலாம் என்று முடிவு வரும் என்றும் தகவல்கள் வந்துள்ளன. அப்படி இருந்தால் நிலமையை நீங்களே கணித்து கொள்ளுங்கள். அர்ஜுனனின் ஆதரவாளர்கள் கட்சிக்கு எதிராக வேலை செய்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை" என்றார்.