பொது
சபரிமலையும் அயோத்தியும்! - ‘யூ-டியூபில்’ ஒரு கருத்து மன்றம்! - மதராஸிவாலி

20190208212637685.jpg

அயோத்தியில் ராமஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரத்திலும் சரி.. சபரிமலை விஷயத்திலும் சரி.. மக்களின் மதநம்பிக்கைகளுக்கு முரணாக சுப்ரோம் கோர்ட் செயல்படுகிறதா? -இந்த டாபிக்கில் சமீபத்தில் யூ - டியூபில் ஒரு கருத்து மன்றம் நடத்தப் பட்டது. அதில் பத்திரிகையாளர் ஜெய் சாய் தீபக்கில் தொடங்கி பரநாட்டிய கலைஞர், சொர்ணமாலயா வரை முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை விவாதித்தனர். அவை:

நடுவர்: சபரிமலை விவகாரத்தைப் பொறுத்தவரை மக்களின் மத உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் தீர்ப்பளித்ததாகக் கருதப்படுகிறது. அயோத்யா விவகாரத்தில் அரசியல், வரலாறு, கலாசாரம், மதம் என்று பல்வேறு விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இதை சுப்ரீம் கோர்ட் எப்படி சரிவர கையாளப் போகிறது?

சாய்: மக்களின் மத நம்பிக்கைகளுடன் சுப்ரீம் கோர்ட் முரண்படுகிறது என்று கருதக் காரணம் - இந்த நாட்டின் அடிப்படை ஆணிவேர் மாதிரியான நம்பிக்கைகள், கலாசரம் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் முழுக்க முழுக்க சட்டரீதியாக மட்டுமே செயல்படுவதால்தான்! இந்தியா மாதிரியான பரந்துபட்ட கலாசாரம் கொண்ட நாட்டில், ஒவ்வொரு விஷயத்திலும் பரந்துபட்ட பார்வைக் கண்ணோட்டம் தேவை. இதில் diversity-க்கும் discrimination-க்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். மேற்கத்திய சட்டதிட்டங்கள் நம் நாட்டுக்குப் பொருந்தாது. ஒரே மாதிரி ஆங்கிலேயர்கள் கால ஸ்டீரியோ-டைப் சட்டதிட்டங்கள் இருப்பதால்தான் மத ரீதியான சென்சிடிவ் விஷயங்களை அலசும்போது பிரச்சினை ஏற்படுகிறது.


சபரிமலை விஷயத்திலேயே பெண்களை ஒதுக்குவதாக ஏன் கருத வேண்டும்? குறிப்பிட்ட வயதிலுள்ள பெண்களை அந்த கோயிலுக்குள் மட்டும்தான் வர வேண்டாம் என்கிறார்கள். அதற்குக் காரணம் - ஐய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதாலும் அதற்கேற்ப கோயிலைக் கட்டியிருப்பதாலும்தான்!

சொர்ணமால்யா: மாதவிலக்கு என்பது பெண்களுக்கு இயல்பாய் ஏற்படக்கூடிய ஒரு விஷயம். அதைக் காரணம் காட்டி, சபரிமலைக் கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுப்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. முன்பெல்லாம் பெண்களை மாதவிலக்கு சமயத்தில் வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைப்பது சகஜமாக இருந்தது. என் குடும்பத்திலேயே அப்படி நடந்திருக்கிறது. தாங்க் காட். எனக்கு அப்படி நேரவில்லை. இப்போது ரிவர்ஸ் கியரில் பழங்காலத்துக்கு திரும்பி செல்வது மாதிரி - மாதவிலக்கைக் காரணம் காட்டி, இனிவரும் இளைய தலைமுறை பெண்களையும் தற்காலிக தீண்டாமைக்கு உட்படுத்த வேண்டுமா?! டிரெடிஷன் என்கிற பெயரில் தீண்டாமைக்கு ஆளாக வேண்டுமா? டிரெடிஷன் வேறு.. ஒதுக்குதல் வேறு! நான் டிரெடிஷனை மதிக்கிறேன். ஆனால் சுயகவுரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன். சபரிமலை விஷயத்தில் பெண்களுக்கு ஆதரவான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்.

கோபி ஷங்கர்: (சமூகப் போராளி): இந்தியாவில் பல கோயில்களில் பல்வேறு நடைமுறைகள் இருக்கிறது. அந்தந்த கோயிலின் சட்டதிட்டங்களைக் கடைபிடித்துதான் ஆக வேண்டும். இதில் பொத்தம்பொதுவாக எல்லாக் கோயில்களுக்கும் ஒரே ரூலை சுப்ரீம் கோர்ட் போட முடியாது. ஒவ்வொரு கோயிலும் பல்வேறு ஆகம விதிகளின்படியும் சம்ஸ்காரப்படியும் உருவாக்கப் பட்டிருக்கு. அதை மதித்துதான் ஆக வேண்டும். உலகிலேயே திருநங்கைகளுக்குனு கோயில் வேறு எங்காவது உண்டா? தமிழ்நாட்டுலதான் கூத்தாண்டவர் கோயில் இருக்கு. ஒவ்வொரு சித்ரா பவுர்ணமியன்றும் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான திருநங்கைகள் வந்து கும்பிடறாங்க. இதேபோல, கொங்கண் பகுதியில் மங்கள்முகி கோயில் மேளா உற்சவம் மிகப் பிரபலம். ஆந்திராவில் எல்லம்மா கோயில், ஜொகப்பா கோயில் என்று நாட்டில் பல கோயில்கள் வித்தியாசமான நடைமுறைகள், சாஸ்திரங்களைக் கொண்டிருக்கு. அதிலெல்லாம் சுப்ரீம் கோர்ட் மூக்கை நுழைக்க முடியாது.


அதே போல சபரிமலை விவகாரத்திலும் சுப்ரீம் கோர்ட் தலையிட உரிமையில்லை. நம் நாட்டில் வாமாசாரம், தட்சிணாசாரம்னு இரண்டு வகையான வழிபாடுகள் உள்ளன. வாமாசாரத்தை கடைபிடிபவர்களுக்கு தட்சிணாசார வழிமுறைகள் தவறாகத் தோன்றும். வாமாசாரம் இடதுசாரி என்றால், தட்சிணாசாரம் வலதுசாரி மாதிரி என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார். வாமாசரத்தில் மாதவிலக்கு போற்றப்படுகிறது.


தமிழ்நாட்டிலேயே பல அம்மன் கோயில்களில் அம்மனுக்கு மாதவிலக்கு ஏற்படுவதாகவும், அச்சமயம் அம்மன் அணிந்திருந்த புடவையை பிரசாதமாகப் பெற பக்தர்கள் விரும்புவதாகவும் நாம் காணவில்லையா? வாமாசாரத்தில் சின்னமஸ்தா, பகாளாதேவி, துர்கை என்று பெண் கடவுளர் கொண்டாடப்படுகின்றனர். அதேபோல், கொட்டாரக்கரா பகவதி கோவிலுக்கு ஆண் பூசாரி புடவை அணிந்துதான் கர்ப்பகிரகத்துக்குள் செல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இப்படி அந்தந்த கோயில்களின் தனித்தன்மையை மதிக்க வேண்டும். சபரிமலை விஷயத்திலும் அப்படித்தான்! அக்கோயிலுக்கு பெண்கள் செல்வது தவறுதான். ஏனென்றால் அக்கோயிலின் அமைப்பும் கட்டுமானமும் அப்படி!

நடுவர்: சரி.. அயோத்தியா பிரச்னையில் இன்னமும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லாதது ஏன்?

அதீக் உர் ரஹ்மான்: மதசார்பற்ற இந்த நாட்டில், எந்தவொரு முஸ்லீம் அமைப்பும் - அயோத்தியா ராம்ஜென்ம பூமியில் மறுபடியும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால், அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்பதற்கும், அங்கு மசூதிக்கு முன்பே கோயில் இருந்ததற்கான ஆதாரம் என்ன என்றுதான் கேட்கிறோம். அங்கு தொல்பொருள் ஆராய்ச்சித்துறை உட்பட பலரும் பலவகையான ஹேஷ்யங்களையும் கண்டுபிடிப்புகளையும் காட்டலாம். ஆனால் அங்கு ராமர் கோயிலை அழித்துதான் பாபர் காலத்தில் மசூதி கட்டினார்கள் என்பதற்கான உறுதியான சான்றோ ஆதாரமோ காட்டவில்லை. இப்போது பிரச்சினையைக் கிளப்புபவர்கள் எல்லாரும் - இந்திய தொல்பொருள ஆராய்ச்சித் துறையின் அறிக்கையை வெச்சு ஆர்க்யூ பண்றாங்க. அதுவும் யாரு? மீடியா, மற்றும் அரிசியல் கட்சிகள்தான் சொந்த ஆதாயத்துக்காக பிரச்சினையை ஊதி பெரிதாக்கறாங்க.


அப்போ 18-ம் நூற்றாண்டில் இங்கு இந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கமாகத்தான் வாழ்ந்தாங்க. இப்போ ராமஜென்ம பூமினு சொல்லபடற அந்த இடம் முஸ்லீம்களின் மயான பூமி (கபரஸ்தான்) ஆக இருந்தது. அப்புறம் இந்துக்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுக்கப்பட்டது. இப்படித்தான் சீதா கே ரஸூல்னு கார்டன் எல்லாம் வர ஆரம்பிச்சது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விஷயத்தில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. முஸ்லீம்களை எதிரியாகப் பார்ப்பது இந்துத்வா அமைப்புதான்!

ஜெய்சாய் தீபக்: அப்படி சொல்ல முடியாது. அயோத்தி பிரச்சினை 1858-லேயே ஆரம்பமாகி விட்டது. அப்போ ஹிந்துத்வாவோ ஆர்.எஸ்.எஸ்-ஸோ இல்லை. மேலும் உலகளவிலான பிரபல யாத்திரிகர்கள் 500-க்கு மேற்பட்டவர்கள் எழுதிய யாத்திரை குறிப்புகளில், இந்த இடம் இந்துக்கள் வழிபடும் புனித இடம் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.

மீனாட்சி ( ராமர் கோயில் கமிட்டி ஆதரவாளர்): அயோத்தியாவில் 1858-லிருந்தே பிரச்னைகள் இருக்கிறது. அலகாபாத் ஹைகோர்ட் ஆணைப்படி தொல்துறை ஆராய்ச்சி செய்ததில், அங்கு கி.மு.2000-க்கு முன்பிருந்தே இந்துக்களில் வழிபாட்டுத் தலமாக இருந்ததும், அங்கு மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியாக இருக்கவில்லை என்பதும் ஆதாரபூர்வமாக தெரிய வந்துள்ளது. ஆனால் முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் 10 மற்றும் 11-ம் நூற்ராண்டில் அப்பகுதி இடிக்கப்பட்டு, பின்னர் 12-ம் நூற்றாண்டில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அதை இடித்து அந்த தூண்களையும் கட்டுமானங்களையும் உபயோகித்து இஸ்லாமியர்கள் பாபர் மசூதியைக் கட்டியிருக்கிறார்கள். அந்த மசூதி தூண்களில் இப்போதும் இந்து கடவுளர்களின் உருவங்கள் காணப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தகுந்த தீர்ப்பு கொடுக்க முடியாமல் திணறுவதற்குக் காரணம் - சென்சிடிவ்வான இந்த விஷயத்தில் மதமும் அரசியலும் புகுந்து விளையாடுவதுதான். நிச்சயம் நல்ல தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டியே தீருவோம்.