தொடர்கள்
திருக்கோயில்கள், தேவாலயங்கள் - 8 - மரியா சிவானந்தம்

2019020717271498.jpg

ஜென்மராக்கினி மாதா கோயில், புதுவை...

“கடல் நீரும் கூட உன் கோவில் காண

அலையாக வந்து உன் பாதம் சேரும்

அருள் தேடி நாங்கள் உம் பாதம் பணிந்தோம்

அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா.

உம்மைத் தேடி வந்தோம்

குறை தீரும் அம்மா”

(கீர்த்தனைப்பாடல் )

கடற்கரையில் அமைந்த கோயில்கள் இறைவனின் புகழை அலைகளுடன் சேர்ந்து வாழ்த்திக் கொண்டிருக்கும். அத்தகைய அழகிய கோயில்களில் ஒன்று புதுவை கடற்கரை அருகே உள்ள ஜென்மராக்கினி மாதா கோயில். ‘அமல உற்பவி அன்னை தேவாலயம்’ எனவும், ‘சம்பா கோயில்’ எனவும் அழைக்கப்படும் ஆலயம் இது.

ஆதாம், ஏவாள் என்ற ஆதி தகப்பன், தாய் கடவுளால் விலக்கப்பட்ட கனியைப் புசித்து பாவம் செய்தவர்கள் ஆனார்கள். அவர்களின் பாவம் தலைமுறைகளாக பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சேர்ந்து வந்தது. அவ்வித பாவத்தின் சுவடு இல்லாமல் ஜெனித்தவள் தேவ மாதா. எனவே அவளை அமல உற்பவி” என்றும் ஜென்மராக்கினி என்ற பெயராலும் அழைக்கிறோம். புனித சின்னப்பர் எனப்படும் செயின்ட். பால்” என்பது மருவி சம்பா கோயில் ஆனது என்று இக்கோயிலுக்கான பெயர் காரணங்களைக் கூறுகிறார்கள்.

20190207173022751.jpg

1689 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டிலிருந்து வந்த இயேசு சபை குருக்கள், புதுவை கடற்கரை அருகில் ஒரு பெரிய தோட்டத்தை வாங்கினார்கள். அங்கு 1692 ஆம் ஆண்டு ஒரு ஆலயத்தை எழுப்பினார்கள். பிரான்சில் உள்ள வால் தே கிராஸ் ஆலயத்தின் அமைப்பைப் போலவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டது. இக்கோயில் கட்ட பிரான்ஸ் தேசத்து மன்னன் 14 ஆம் லூயி பொருளுதவி செய்தார் என்று வரலாறு சொல்கிறது.

பிரெஞ்சுக்காரருக்கும், டச்சுக்காரருக்கும் நடைபெற்ற சண்டையின் தாக்கம் புதுவையில் இருந்தது. அப்போரில் இந்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டது. மீண்டும் கோயில் கட்டப்பட்டது. ஆங்கிலேயருக்கும் பிரான்சுக்கும் சண்டை நடந்தது. அப்போதும் கோயில் தரை மட்டமாக்கப்பட்டது. இப்போது உள்ள கோயில் 1791ஆம் ஆண்டு எழும்பிய கோயில்.

பிரான்சின் கட்டிட கலையும், போத்துக்கீசிய முகப்பும் கொண்ட தேவாலயம் இது. இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த கலைப் பொக்கிஷம் இந்த ஆலயம். எல்லா இடமும் பழமை மிளிருகிறது. வியட்நாமைச் சேர்ந்த தேவமாதா சிலை, இயேசுவின் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.

20190207173438679.jpg

பீட அமைப்பு அக்கால முறைப்படி, அதே அலங்காரங்களுடன் அமைந்துள்ளது. தேவ அன்னை மடியில் ஏசுவைத் தாங்கிய சிலை மிக அற்புதமாக வடிக்கப்பட்டு தெய்வீக அழகுடன் விளங்குகிறது. மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட ஞானஸ்நான தொட்டி இன்னும் கம்பீரமாய் கவனம் ஈர்க்கிறது .

20190207173612998.jpg

தேவமாதாவுக்கு உகந்த நாளான சனிக்கிழமை தோறும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அமல உற்பவி திருநாளான டிசமபர் எட்டாம் தேதியன்று, தேர்த் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. நாங்கள் கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்றதால், குடில் அலங்காரங்களும் கோயிலில் இருந்தது.

2019020717523653.jpg

புதுவை நகரில், மிக மிக அருகாமையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைந்துள்ளன. இவை எல்லாமே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. புதுவை பிரான்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது எழுப்பப்பட்ட இந்த தேவாலயங்கள் காலங்கள் கடந்து இறையருளை மக்களுக்கு வாரி வழங்கி கொண்டிருக்கின்றன.

புதுவை கடலூர் பகுதிகளில் உள்ள கோயில்கள், தேவாலயங்களை தரிசிக்க நாங்கள் சென்ற ஆன்மிக சுற்றுலாவில் வேறு சில கோயில்களையும் கண்டோம்.

ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் நிழலில் ஒரு வரலாறு உறங்குகிறது. அந்த வரலாறு தலைமுறை தலைமுறையாக மக்களைச் சென்றடைடைய வேண்டுமெனில் அது ஆவணப்படுத்தப் பட வேண்டும். பல இடங்களில் கோயிலின் வரலாறு, தல புராணம், தொன்மை போன்ற விவரங்கள் எந்த இடத்திலும் இல்லை. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலேனும், எல்லோரும், குறிப்பாக எளிய மக்கள் பார்க்கும் வண்ணம் விவரங்கள் எழுதி வைக்க வேண்டும். இது தேவாலயங்களுக்கும் பொருந்தும். நம் நாட்டின் ஆன்மிகச் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை.

மீண்டும் வேறு பயணக்குறிப்புடன் சந்திக்கிறேன்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” நாம் பெறும் இறை அருள் நம்மை வழி நடத்தட்டும்...

(முற்றும்)