தொடர்கள்
அழகு
காணிக்கை - மோகன் ஜி, சித்திரம் - தேவா

20250128195919373.jpg

முடிக் காணிக்கை கருப்பனுக்கு

முடிஞ்சு வச்ச காசோடு

முழுசா ஒரு வருஷஞ் சாமி!

தலைமுடியும் சடைவிழுக

டிக்கிட்டுக்கும் வழியில்லே

சொந்த ஊரு போகணுமே சாமி!

பிழிஞ்சு சோத்தை உனக்கு வச்சேன்

நீச்சத் தண்ணி மாமனுக்கு

குடத்து தண்ணி எனக்காச்சு சாமி!

கூலிவேலை கிடைக்க வில்லே

தாலிப்பொட்டும் மிஞ்சலையே

காலிசட்டி உருளுதய்யா சாமி!

திருவிழா போல தேர்தல்வர

குறுகியே கும்பிட்டு -கொஞ்சம்

பணம்தந்தே போனாங்க சாமி!

நாலுவட்டம் குடிச்ச மச்சான்

காலிசட்டி யோடுருள- காசும்

வந்தவழி போனதையா சாமி!

அடுத்தவாரம் கல்சுமக்க கூப்டாங்க

அதச்சொல்லி கடன்கேட்டே- சோறு

ஆக்கிப்போட நானிருக்கேன் சாமி!

கலேட்டருக்கு படிடா எம்மவனே!

நாலுபேட்டை பசியாத்த வேணுமடா

காலம்வரும் பாத்துக்கடா சாமி!

காத்திருக்கான் கருப்பன் உன்முடிக்கு

பாத்திருப்பான் பணமனுப்பி வழிக்கு

நேத்திக்கடன் நல்லபடி வாங்கிடுவான் சாமி!

கொள்ளயழகு நீயடா மகனே!

கொள்ளிக்கண்ணு பட்டிடுமே ராசா!

உள்ளேவந்தே உக்காரு எஞ்சாமி!