போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தன்னைக் கொல்ல சதி நடந்திருப்பதாக தமிழக ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் குற்றம் சாட்டியுள்ளார். கூடுதல் டிஜிபி ஆன கல்பனா நாயக் 2023-இல் காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் தேர்வு வாரிய உறுப்பினராக பணியாற்றி வந்தார்.
கிட்டத்தட்ட 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ததில் குளறுபடிகள் நடந்துள்ளது. மதிப்பெண்கள் பெற்று தகுதி இருந்தும் இட ஒதுக்கீடுகளில் சேர வேண்டியவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது கல்பனா நாயக் குற்றச்சாட்டு. இது பற்றிய புகாரை அப்போதே உள்துறை மற்றும் டிஜிபி அலுவலகத்திற்கு புகாராக தெரிவித்து இருக்கிறார். ஆனால், அந்த புகார் கண்டுகொள்ளப்படவில்லை. காரணம் தேர்வாணைய வாரிய உறுப்பினர்களாக இருந்த டிஜிபி சீமா அகர்வால், ஐஜி ராஜேஸ்வரி அந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து போட்டு விட்டார்கள். ஆனால், கல்பனா நாயக் கையெழுத்து போட மறுத்து விட்டார் மூன்று பேர் கொண்ட குழுவில் பெரும்பான்மை அடிப்படையில் அந்தப் பட்டியலை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில் தான் 2024 ஜூலை 29-ஆம் தேதி கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கல்பனா நாயக் அலுவலகத்தில் இல்லை. தீ விபத்து நடந்த மறுநாளே டிஜிபி சங்கர் ஜிவாலை சந்தித்து இந்த தீ விபத்து ஏதோ சதி திட்டம் மாதிரி தெரிகிறது என்று புகார் சொல்லியிருக்கிறார் கல்பனா நாயக். ஆனால் டிஜிபி அதை பெரிது படுத்தவில்லை.
அதன்பிறகு 2024 ஆகஸ்ட் 14-இல் சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் வாயிலாக ஒரு புகார் அனுப்பி இருக்கிறார் கல்பனா நாயக். அதில் மின் கசிவு காரணமாக என் அறையில் தீ விபத்து நடந்ததாக கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை. நான் மட்டும் அலுவலகத்தில் இருந்தால் இந்நேரம் என்னை உயிருடன் நீங்கள் பார்த்திருக்க முடியாது. என்னை கொல்ல சதி நடந்து இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். அது பற்றி சட்டரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கல்பனா நாயக். என் அறை பற்றி எரிகிறது என தகவல் கிடைத்த போதே நெஞ்சம் பதைபதைத்தது. விரைந்து சென்று ஐஜி அலுவலக அறையில் காத்திருந்தேன். தீ அணைக்கப்பட்ட பின் என் அறைக்கு சென்று பார்த்தேன். நான் ஆசையாக அமர்ந்திருந்த இருக்கை உள்ளிட்ட அத்தனை பொருட்களும் கரிக்கட்டையாக கிடந்தன. நல்ல வேளையாக உயிர் பிழைத்தேன். நான் இருக்கும் போது தீப்பற்றி இருந்தால் என் முகத்தை என் பிள்ளைகள் கூட பார்க்க முடியாத நிலை உருவாகி இருக்கும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கல்பனா நாயக்.
ஆகஸ்ட் 14-இல் எழுதிய கடிதம் திடீரென சில தினங்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியானதை தொடர்ந்து இப்போது இந்த பிரச்சனை பெரிதாக பேசப்படுகிறது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இந்த கொலை முயற்சியை சதி திட்டத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.
காவல்துறை டிஜிபி இது பற்றி வெளியிட்ட செய்தி குறிப்பில் இதில் சதி வேலை எதுவும் இல்லை, மின்கசிவு காரணமாகத்தான் அவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி தீவிர விசாரணை நடத்தி, இதை பற்றி விவரங்களை அப்போதே கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கிடம் தெரிவித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.
இது போதாது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கல்பனா நாயக் சொல்லியது போல் பணியாளர் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை என்று மறுத்திருக்கிறார்கள். இந்த தேர்வில் கலந்து கொண்ட ஐந்து பேர்கள் இந்தத் தேர்வை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். அதில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கிணங்க இறுதிப் பட்டியலை திருத்த வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அப்போதே உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி திருத்தங்கள் செய்ய வாரியம் ஒப்புக்கொண்டது. எனவே கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல என்று சொல்லி இருக்கிறார்கள்.
புகார் சொல்லியிருக்கும் பெண் அதிகாரி கல்பனா நாயக் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த விஷயத்தை தேசிய எஸ்சி எஸ்டி ஆணையமும் கவனித்து வருகிறது. இது போதாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விஷயத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்.
உளவுத்துறை மூலம் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் இது பற்றி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார். அப்போது மத்திய பாஜக அரசு இதை அரசியல் ரீதியாக அணுகக்கூடும் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவு போடக்கூடும் அதற்கேற்ற படி நாம் எல்லா விவரங்களையும் சேகரித்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். கல்பனா நாயக் கணவர் மகேந்திர குமார் ஐபிஎஸ் தமிழ்நாட்டில் தான் பணியாற்றி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
Leave a comment
Upload