தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 101 - பரணீதரன்

20250017205112620.png

மற்ற கலிப்பாக்களை மேலும் விவரிக்கிறார் பரணிதரன்.

(தரவு)

"விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்று

துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார்ப்

பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக்

குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்

மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கும் மல்லர்க்கும்

தாயாகித் தலையளிக்கும் தண்டுறை யூரகேள்'

(தாழிசை)

காட்சியாற் கலப்பெய்தி எத்திறத்தும் கதிர்ப்பாகி

மாட்சியால் திரியாத மரபொத்தாய் கரவினால்

பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய

அணிநலம் தனியேவந் தருளுவது மருளாமோ? (1)

அன்பினால் அமிழ்தளைஇ அறிவினாற் பிறிதின்றிப்

பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்

பெருவரைத்தோள் அளருளுவதற் கிருளிடைத் தமியையாய்க்

கருவரைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ? (2)

பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும்

தேங்காத கரவினையும் தெளியாத இருளிடைக்கண்

குடவரைவேய்த்தோளிணைகள் குளிர்ப்பிப்பான்தமியையாய்த்

தடமலர்த்தாள் அருளுநின் தகுதியும் தகுதியோ? (3)

(அராகம்)

தாதுறு முறிசெறி தடமலரிடையிடை

தழலென விரிவன பொழில்

போதுறு நறுமலர் புதுவிரை தெரிதரு

கருநெய்தல் விரிவன கழி

தீதுறு திறமறு கெனநனி முனிவன

துணையொடு பிணைவன துறை

மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு

கழிதொடர் புடையது கடல்.

(அம்போதரங்கம்)

கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனால்

இடுங்கழி யிரவருதல் வேண்டாமென் றுரைத்திலமோ? (1)

கருநிறத் துறுதொழிற் கராம்பெரி துடைமையால்

இருணிறத் தொருகான லிராவார லென்றிலமோ? (2)

(இவை பேரெண்)

நாணொடு கழிந்தன்றால் பெண்ணரசி நலத்தகையே; (1)

துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே, (2)

அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே; (3)

நயப்பொடு கழிந்தன்றா னனவது நன்னுதற்கே (4)

இந்த கலிப்பாவில் தரவு ஒன்றும், தாழிசை மூன்றும், அராகமும் (வண்ணகம்) அம்போதரங்க உறுப்பும், தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று வருவதால் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவாகும்.

வெண்கலிப்பா

கலித்தளையும் வெண்டளையும் சேர்ந்து வந்து அனைத்து அடிகளும் நான்கு சீர்களாகவும் கடைசி அடி மூன்று சீர்களாகவும் வந்தால் அது வெண்கலிப்பா ஆகும். வெண்கலிப்பா மற்றும் கலிவெண்பா ஆகிய இரண்டிற்கும் சிறிதுதான் வேற்றுமை.

வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக்

கோளார்ந்த பூனாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்

மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச்

சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொல்முறையான்

மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்

வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவையுரைத்த

தொன்மைசால் கழிகுணத்தெந் துறவரசைத் தொழுதேத்த

நன்மைசால் வீடெய்து மாறு

கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். அவை:

1. தரவு கொச்சகக் கலிப்பா

2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா

3. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

4. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

5. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா

ஒத்தாழிசைக் கலிப்பாவில் வரும் தரவு என்னும் உறுப்பு மட்டும் தனியாக வந்தாலும், அதனோடு தனிச் சொல்லும் சுரிதகமும் சேர்ந்து வந்தாலும் அது தரவு கொச்சகக் கலிப்பா ஆகும்

தினைத்தனை உள்ளதோர்

பூவினில்தேன் உண்ணாதே

நினைத்தொறும் காண்டொறும்பே

சுந்தொறும் எப்பொழுதும்

அனைத்தெலும் புண்ணெக

ஆனந்தத் தேன்சொரியும்

குனிப்புடை யானுக்கே

சென்றுதாய்க் கோத்தும்பீ

இது நாற் சீருடைய நான்கடியால் வந்த தரவு கொச்சகக் கலிப்பா. கவிஞர்கள் நான்கடிகளால் பாடுவதே பெருவழக்காக இருக்கிறது. திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை முதலியன எட்டடிகளால் வந்த தரவு கொச்சகக் கலிப்பாக்கள். காய்ச்சீரும் விளச்சீரும் வருவது இது. கலித்தளையும் வெண்டளையும் சிறுபான்மை நிரையொன்றாசிரியத் தளையும் கலந்து வரும். மாச்சீர் வந்தால் இயற்சீர் வெண்டளை அமையும்.

குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத்

தடநிலைய பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து

வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தொன்றப்போய்க்

கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப

எனவாங்கு

ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்

கானுடைத் தவர்தேர் சென்ற வாறே

இந்தப் பாட்டில் நாற்சீரடியாகிய அளவடிகள் நான்கு முன்பும், பிறகு தனிச் சொல்லும், ஆசிரியச் சுரிதகமும் வந்திருப்பதால் இது தரவு கொச்சக கலிப்பா

தரவிணைக் கொச்சகக் கலிப்பா

இரண்டு தரவுகளும், அவற்றில் இடையிலும் பின்னும் தனிச் சொல்லும், இறுதியில் சுரிதகமும் உடையதாகி வருவது தரவிணைக் கொச்சகக் கலிப்பா. இணை என்பது இரண்டைக் குறிப்பது.

வடிவுடை நெடுமுடி

வானவர்க்கும் வெலற்கரிய

கடிபடு நறும்பைந்தார்க்

காவலர்க்கும் காவலனாம்

கொடிபடு மணிமாடக்

கூடலார் கோமானே!'

எனவாங்கு

துணைவளைத்தோள் இவள்மெலியத்

தொன்னலம் தொடர்ப்புண்டாங்

கிணைமலர்த்தா ரருளுமேல்

இதுவதற்கோர் மாறென்று

துணைமலர்த் தடங்கண்ணார்

துணையாகக் கருதாரோ,

அதனால்

செவ்வாய்ப் பேதை இவள்திறத்

தெவ்வாறாங்கொல்இஃ தெண்ணிய வாறே

இந்தத் தரவிணைக் கொச்சகக் கலிப்பாவில் எனவாங்கு என்றும், அதனால் என்றும் இடையிலும் பின்னும் தனிச் சொல் வந்தது காண்க. சுரிதகம் இன்றியும் தரவிணைக் கொச்சகம் வரும்

முந்நான்கு திருக்கரத்து முருகவேள் தனைப்பணிந்தார்

இன்னாங்கு தவிர்ந்தென்று மின்டவாழ் வடைவரெனப்

பன்னாளும் பெரியோர்கள் பாடுவது கேட்டிருப்போம்;

அதனால்

பிறவியெனும் பிணிதொலையப் பிணிமுகமேற் கொண்டருளி

அறவுருவாம் தேவியர்கள் அணைந்திருபா லுஞ்சுடரத்

திறவிதின்நற் பவனிவரும் திருவுருவைப் போற்றுதுமே

இரண்டு தரவு வர, இடையே தனிச்சொல் வந்த தரவிணைக் கொச்சகக் கலிப்பா இது.

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

தரவு ஒன்றும் தாழிசை மூன்றும் இடையிடையே தனிச் சொல்லும் இறுதியில் சுரிதகமும் பெற்று வருவது சிஃறாழிசைக் கலிப்பா.

பரூஉத்தடக்கை மதயானைப்

பனையெருத்தின் மிசைத்தோன்றிக்

குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க்

குடைமன்னர் புடைசூழப் படைப்பரிமான் தேரினொடு

பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை யிடைப்பொலிந்தான்

கூடலார் கோமானே; -

ஆங்கொருசார் உச்சியார்க் கிறைவனா

யுலகெலாம் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூண்

புரந்தரனாப் பாவித்தார் வச்சிரங் காணாத

காரணத்தால் மயங்கினரே,

- ஆங்கொருசார் அக்கால மணிநிரைகாத்

தருவரையாற் பகைதவிர்த்து வக்கிரனை வடிவழித்த

மாயவனாப் பாவித்தார் சக்கரம் காணாத -

காரணத்தால் சமழ்த்தனரே,

ஆங்கொருசார் மால்கொண்ட பகைதணிப்பான் மாதடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங்

கொடியவனாப் பாவித்தார் வேல்கண்ட தின்மையால்

விம்மிதராய் நின்றனரே,

அஃதான்று

கொடித்தேர் அண்ணல் கொற்கைக் கோமான் நின்றபுகழ் ஒருவன் செம்பூண் சேஎய் என்றுநணி அறிந்தனர் பலரே தானும் ஐவருள் ஒருவன்என்றறிய லாகா மைவரை யானை மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்தத் தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே

இது சிஃறாழிசைக் கலிப்பா. இதில் தாழிசைகளுக்கு முன்னே தனிச் சொற்கள் வந்தன; அவை வராவிடின் இது நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா ஆகிவிடும்.

இன்னும் இரண்டு வாரங்களில் தமிழ் இலக்கணத்தின் கடினமான பகுதியான யாப்பிலக்கணம் முடிவடைந்து விடும். அடுத்த வாரம் மற்ற கலிப்பாக்களையும், இவற்றிற்கும் தமிழிசை என்று அழைக்கப்படும் கர்நாடக சங்கீதத்திற்கும் உள்ள உறவினை பற்றி பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் பரணிதரன்.