பா வகைகளை தொடர்ந்து விவரிக்கத் தொடங்குகிறார் பரணீதரன்.
இந்த வாரம் சீட்டுக்கவியில் உள்ள இலக்கண இலக்கிய நடையையும் தூதையும் பார்ப்போம். சங்ககாலத்தில் தருமிக்காக, சிவபெருமான் எழுதிய ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற செய்யுள் கூட சீட்டு கவியை போன்றது தான். இதற்கு முந்தைய 97 ஆம் என்ணுள்ள தொடர் குறியீடிட்ட இதழில் சீட்டுக் கவியை பற்றிய முன்னுரையை நாம் பார்த்து விட்டதால், இந்த வாரம் சில சீட்டுக்கவி பாடல்களை நேரடியாக பார்ப்போம்.
சீட்டுக்கவி
பாடியவர் : சுப்ரமணிய பாரதியார்
பாடப்பட்டவர் : எட்டயபுரம் அரசர் வெங்கடேசுரெட்ட சிங்கன்
பாடப்பட்டதன் நோக்கம் : பொருள் வேண்டி
பாடப்பட்ட பாடல்கள் : 1 (1 கவி)
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
சேகரன் ஸ்ரீராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண்க!
வாசமிகு துழாய்த் தாரன் கண்ணனடி
மறவாத மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்விளங்கும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு!
மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை என்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்தபொழு திருந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு
சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தாய் அன்றே!
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டிற் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது!
சொற்புதிது! சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மாகவிதை என்று நன்கு!
பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறகு மாங்கே
விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார் பாரோ ரேத்துந்
தராதிபனே! இளசைவெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ்கொ ணர்ந்தேன்!
வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட
நீகேட்டு நன்கு போற்றி
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
பொற்பைகள் ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
பல்லூழி வாழ்க நீயே!
இந்தக் கவியில் அரசனை புகழ்வதை விட தன்னுடைய புகழினை பாரதியார் மிகுதியாக கூறியுள்ளார். வறுமையின் பொருட்டு, அவருடைய குடும்பத்தார் வற்புறுத்தலின் பேரில் இந்த கதையை பாரதியார் பாடியுள்ளார்.
சீட்டுக்கவி
பாடியவர் : இலக்குமண பாரதி
பாடப்பட்டவர் : பழையகோட்டை வள்ளியம்மன் (சர்க்கரைமன்றாடி ராசன் மனைவி) - தீரன் சின்னமலையின் பெரிய தாயார்
பாடப்பட்டதன் நோக்கம் : சிவராத்திரி பூஜைக்கு பொருள் வேண்டி
பாடப்பட்ட பாடல்கள் : 1 (1 கவி)
திருமருவு பழநிமலை முருகேசர் அரவிந்த
செங்கமல பாத தியானம்
திரிகின்ற தண்டுமிண் டுகள்கொண்ட கவிமலை
செகுத்திடச் செய்வச் சிரம்
செய்யகார் காலமழை என்னவே மதுரித
செழுந்தமிழ் கொழிக்கும் மேகம்
தென்பரவு மங்கைபுர இலட்சுமண பாரதி
தெளிந்தெழுதி விட்ட நிருபம்,
தருவுலவு காரையூர் நல்லசே னாபதிச்
சர்க்கரைமன் றாடி ராசன்
தனதுமனை யாள்இனிய கற்பினில் அருந்ததி
சமானசற் குணபூ டணி
சந்ததி நிரம்பிவளர் சிவமலைப் பல்லவன்
தந்தசீ மந்த புத்ரி
தருமமிகு பயிறகுல வள்ளிநா யகியெனும்
தாய்மனம் மகிழ்ந்து காண்க,
அருள்பரவு சிவன்உமைக் குத்திருக் கல்யாணம்
ஆனசுப தினம்நா ளையே
ஆகையால் மாங்கலிய விரதபூ சனைசெய்ய
ஆரும்ஆ தரவ றிகிலேன்
ஐந்துவள் ளப்பச்சை அரிசிபா சிப்பயறு
அதற்குள்ள மேல்முஸ் திதி
ஆவின்நெய் வெல்லம் உழுந்துபால் தயிர்வெண்ணெய்
அரியதயிர் எண்ணு கறிகாய்
மருவுலவு சந்தனம் குங்குமம் புனுகுசவ்
வாதுபரி மளமும் உனது
மருமகட் கோர்புடவை பாக்குவெற் றிலைநல்ல
வாழையிலை இவையா வுமே
வாணருக் கார்அனுப் பினதெனக் கேட்பவர்
மனதுமென் மேலும் மெச்ச
மன்னர்புகழ் சர்க்கரைத் துரைராசி தந்ததென
வரவனுப் பிடவேண் டுமே!
அடுத்ததாக நாம் தூது இலக்கியத்தைப் பற்றி பார்ப்போம். பொதுவாக மனிதர்கள் போன்ற உயர்திணை அல்லாத, அஃறிணை பொருட்களை வைத்து பாடப்படுவதே தூது இலக்கியமாகும். அன்னம், மயில், கிளி, வண்டு, பூ, மான், நெல், நாரை, முகில் (மேகம்), தென்றல், பணம், தமிழ், நெஞ்சு போன்ற பொருட்களை வைத்து கவிஞர் தான் சொல்ல வந்ததை பாட்டுடை தலைவனுக்கு (ஹீரோ) கூறுவது தூது இலக்கியமாகும்.
சில நேரங்களில் தோழி, செவிலித்தாய் (வளர்ப்புத் தாய்), விறலி (பாணர்குல பெண்கள் - பாடல் பாடி, அபிநயம் பிடித்து, ஆடக்கூடிய பெண்கள்) போன்ற உயர்திணை மக்களையும் வைத்து தூது அனுப்பி உள்ளார்கள்.
இதிகாச புராண காலத்தில் கூட தூது என்பது ஒரு உயர்வான தொழிலாக கொள்ளப்பட்டுள்ளது. இராமாயண காவியத்தில் கூட அனுமாரும், அங்கதனும் இராமருக்கு தூதனாக இராவணனிடம் செல்கிறார்கள். அதே போல மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக கிருஷ்ண பரமாத்மா கௌரவர்களிடம் தூது செல்கிறார். இதே போல சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரருக்கு தூதாக பரவை நாச்சியாரிடம் சிவ பெருமான் செல்கிறார். செல்லும் தூதனுக்கு தீங்கு ஏதும் நிகழாமல், தகுந்த மரியாதையுடனும், பாதுகாப்புடனும் நடத்த வேண்டும் என்பதே தமிழ் மக்கள் மற்றும் பாரத மக்களின் அரச நீதி ஆகும். தூதனை ஒரு விருந்தினர் போல வரவழைத்து அவருக்கு தக்க சன்மானத்தையும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்கள் மற்றும் பாரத மக்கள் கண்ட விருந்தினர் விருந்தோம்பல் ஆகும். அது தான் இன்றும் ‘அதிதி தேவோ பவ’ என்று வடமொழிப் பதம் நம்மிடையே பரவலாக பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
சங்க இலக்கியங்களில் தூது என்பது இயல்பாக பாடப்பட்ட ஒரு இலக்கியப் பகுதியாகும். நட்பையும், காதலையும், அகத்திணை பொருட்களையும் கூறுவதற்கு இந்த இலக்கிய வகை ஒரு பாலமாக அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியத்தில் நட்புக்கு இலக்கணமாக கூறப்படும் பிசிராந்தையார் தன்னுடைய நட்பை பற்றி அன்னத்திடம் கூறி அதை கிள்ளி குடியில் வந்த கோப்பெருஞ்சோழனுக்கு தூதாக அனுப்புகிறார். புகையிலையைக் கூட பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் மீது தூதாக அனுப்பி இருக்கிறார் சீனிச்சர்க்கரைப் புலவர். தூது இலக்கியங்கள் சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை இருப்பதால், தமிழில் நிறைய தூது இலக்கியங்கள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.
அழகர் கிள்ளைவிடுதூது
கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டுவிடு தூது
காக்கை விடு தூது
காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது
கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது
சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சுவிடு தூது
சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
சேதுபதி விறலிவிடு தூது
தமிழ்விடு தூது அல்லது மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது
திருத்தணிகை மயில்விடு தூது
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது
துறைசை அம்பலவாண தேசிகர் பொன்விடு தூது
நெல்விடு தூது
பஞ்சவன்னத் தூது
பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது
பழனி முருகன் புகையிலைவிடு தூது
மதுரைச் சொக்கநாதர் பணவிடு தூது
மாரிவாயில்
முகில்விடுதூது
நெஞ்சு விடு தூது
புகையிலை விடு தூது
மேலே உள்ள இலக்கியங்களில் இருந்து ஒரு சில பாடல்களை வரும் வாரம் பார்ப்போம் என்று கூறி விடை பெறுகிறார் பரணீதரன்.
Leave a comment
Upload