தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 41 - மோகன் ஜி

"பைனாப்பிள் கேசரியும் பகவானும் மற்றும் பல்பும்"

20241123222139244.jpg

இரண்டு நாட்களுக்குமுன் சுவாமிக்குப் படைக்க பைனாப்பிள் கேசரி பண்ணியிருந்தது. பூஜை முடித்து கேசரியைக் கொஞ்சம் சாப்பிட்டேன்.

வாயில் சிறு துண்டு முந்திரியோடு முன்பு பைனாப்பிள் கேசரியால் வாங்கின பல்பின் நினைவும் நிரடியது.

நான் பேச்சிலனாக முதல் வேலையில் சேர்ந்து சென்னையில் இருந்த நாட்கள். வழக்கம்போல் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தேன். விரத காலத்தில் என்னைப் பார்த்துக் கொள்ள அம்மா சென்னை வந்திருந்தாள்.

அன்று அலுவலகத்தில் யாரோ பார்ட்டி தந்தார்கள். வெளியில் ஏதும் சாப்பிடுவதில்லையாதலால் எல்லோருக்கும் அங்கு இனிப்பை மட்டும் நானே பரிமாறிவிட்டு வந்தேன்.

அது பைனாப்பிள் கேசரி.

ஆஹா! வெளிர்பச்சையில் பைனாப்பிள் மணம் மூக்கைத் துளைத்தது. ‘அப்படியென்ன நாக்கு உனக்கு?’ என்று எனக்கு நானே வைது கொண்டேன்.

வீட்டுக்கு வந்தபின் சுவாமிக்கு நைவேத்தியமாக பைனாப்பிள் கேசரியை செய்து தருமாறு அம்மாவிடம் கேட்டேன்.

‘’ஏதோ இனிப்பைச் செய்யின்னா சரி! அதென்ன குறிப்பா உன்னிடம் பைனாப்பிள் கேசரியா படைக்கச் சொல்லி ஐயப்பன் கேட்டாரா?”

“அப்படி இல்லேம்மா! கேரளாவுல தான் பைனாப்பிள் விளைச்சல் அதிகம். காட்ஸ் ஓன் கண்ட்ரியோட லோகல் பழமாச்சா… அதனால மலையாளிகள் இந்தப் பழத்தில் கேசரி பண்ணிப் படைப்பாங்க! அதான் கேட்டேன்…”

என்னை மீறி வெளியே துறுத்திக் கொண்ட நாக்கை அம்மா மனசு கண்டுகொண்டு விட்டதோ! ருக்மணியிடம் பொய் செல்லுபடியாகாது. குரலை வைத்தே கண்டுபிடித்து விடுவாள்.

“அதுக்கென்ன மோகி! கேசரியைப் பண்ணிட்டா போச்சு!” என்றாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. கறிகாய்களுடன் நன்கு பழுத்த பைனாப்பிள் ஒன்றும் வாங்கி வந்தேன்.

பைனாப்பிளின் தோலையெல்லாம் நீக்கித் தந்தேன். அம்மா கேசரி செய்யும் நறுவீசைப் பார்த்து ரசித்துக் கொண்டு நின்றேன்.

பாதிப் பழத்தை சிறுசிறு துண்டுகளாக்கியும், பாதிப்பழத்தை கூழாக அரைத்தும் வைத்தாள். நெய்யில் முந்திரியையும் திராட்சையையும் வறுத்தும் ஏலக்காயைப் பொடித்தும் வைத்தாள். ரவையும் சர்க்கரையும் தயாராக வாணலிக்கருகில் உட்கார்ந்திருந்தன.

“நீ குளிச்சிட்டு பூஜையை ஆரம்பி மோகி. நைவேத்தியம் பண்றதுக்குள்ள கேசரி தயாராகிடும். ‘பைனாப்பிள் பிரியனே சரணமய்யப்பா!’ என்றாள்.

சொன்னபடி நைவேத்தியம் பண்ணும் சமயத்தில் கேசரியைக் கொண்டு வைத்தாள் அம்மா. அதைப் படைத்துவிட்டு பூஜையை முடித்து எழுந்தேன்.

“என்னம்மா? வீதி முனையிலேயே பைனாப்பிள் மணமா இருக்கேன்னு பார்த்தேன்!” என்றபடி என்னுடன் பணிபுரியும் ராயப்பன் உள்ளே வந்தான். கொண்டுவந்திருந்த பூவையும் பழங்களையும் அம்மாவிடம் கொடுத்தான்.

“வா! ராயப்பா! வீட்டில் எல்லோரும் சௌக்கியமா?” என்றபடி ஒரு கிண்ணத்தில் கேசரியை தட்டில் வைத்து அவனுக்குத் தந்தாள்.

“எல்லோரும் நல்லா இருக்கோம்மா! இந்த வாரம் எனக்கு பைனாப்பிள் யோகமாயில்லே இருக்கு! ஆஹா! அற்புதமா இருக்கும்மா கேசரி! ஹோட்டல் கேசரிக்கெல்லாம் இந்த டேஸ்ட் வராதும்மா!“ என்று ராயப்பன் நாக்கில் லொட்டை விட்டபடியே பாராட்டியதை புன்சிரிப்புடன் அம்மா ஏற்றுக் கொண்டாள்.

“நேத்தைக்கு எங்க ஆபீஸ் பார்ட்டிலயும் பைனாப்பிள் கேசரி தான்ம்மா! நம்ம மோகன் தான் எல்லாருக்கும் அதைப் பரிமாறிட்டு அதைப் பாத்துக்கிட்டே நின்னான். பாவம் மோகன் சாமி! எப்படித் தான் வெளியில் எதுவும் சாப்பிடாமல் கட்டுப்பாடா இருக்கானோ?”

ஆஹா! வந்த ஜோலிய முடிச்சிட்டியே நண்பா…

ராயப்பன் செய்யும் அகடவிகடத்தையெல்லாம் அம்மா ரசித்தாள். ராயப்பன் கிளம்பும்போது, ஒரு டிபன் பாக்ஸில் கேசரியுடன் ஒரு பாட்டிலில் வத்தக் குழம்பும் நிரப்பித் தந்தாள்.

“மசக்கைக் காரிக்கு கொண்டு போய் குடு ராயப்பா! ஆபீஸ்விட்டுப் போகும்போது தினம் இங்கே வந்துட்டுப் போ! எங்களுக்கு சமைச்சதை அவளுக்கும் தந்து விடறேன்”.

கர்ப்பமாயிருந்த அவன் மனைவி மேல் அம்மாவுக்கு கரிசனம்…

“சரிம்மா வர்றேன்” என்று ராயப்பன் கிளம்பினான்.

நான் ஆபீஸ்ல வாசம் பிடிச்சு ஐயப்பனுக்கு படைக்கச் சொன்ன பைனாப்பிள் கேசரியின் குட்டை ராயப்பன் உடைத்துவிட்டுக் கிளம்பினான். ஹும்ம்.

“அதென்னம்மா எப்பவும் கர்ப்பமா இருக்கிறவங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா சாப்பிடக் கிடைக்குது?” என்று பேச்சை மாற்றிப் பார்த்தேன்.

“பொம்மனாட்டிகளுக்கும் கூட மசக்கையெல்லாம் உண்டு மோகி! வெரைட்டியா சாப்பிட்டா தேவலைப் போலத் தோணும்” என்றாள் அம்மா.