நமது பாரத தேசத்தில் புண்ணிய நீர்நிலைகளில் புனித நீராடி, அவற்றின் கரைகளில் இறையை வழிபடுவது என்பது இந்துக்களின் இன்றியமையாத கடமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் துலா மாதமாகிய ஐப்பசியில் ஆறுகளில் நீராடுதல் மிகவும் விசேஷம். அதிலும் முக்கியமாக, மயிலாடுதுறையில் காவிரி துலா ஸ்நானம் என்பது கங்கா ஸ்நானம் செய்வதற்கு ஒப்பாக கருதப்படுகின்றது. இது ஆண்டுதோறும் பெருவிழாவாக நிகழ்கின்றது.
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமோ?''
ஐப்பசி மாத கடைசி நாளன்று காவிரியில் மேற்கொள்ளப்படும் புனித நீராடல் "கடை முகம்/கடை முழுக்கு" என்றும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடல் "முடவன் முழுக்கு" என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று முடவன் முழுக்கு புனித நீராடல் நடைபெறுகின்றது.
ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் அனைத்துப் புண்ணிய நதிகளும் வந்து கலப்பதால் இங்கு வந்து நீராடுவது அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் ஐப்பசி மாதத்தில் மாயூரம் என்றழைக்கப்படும் மயிலாடுதுறையில் காவிரி நதிக்கரையோரம் உள்ள நந்திக்கட்டத்தில் கங்கையானவள் நீராடுகிறாள். அதனால் பாரதத்தில் உள்ள அனைத்து நதிகளும் அங்கு நீராடி, மக்கள் தங்களிடம் தொலைத்துச் சென்ற பாவங்களைப் போக்கிக் கொள்கின்றன என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதனால்தான் ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
துலாக் கட்ட வைபவத்தின் கடைசி நாளான 'கடைமுழுக்கு வைபவம்' அன்று நீராடி, மயூர நாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் விலகி, மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. அன்று துலாக் காவிரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி ஆற்றுக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன்களைத் தரும்.
முடவன் முழுக்கு:
ஒரு சமயம் முடவன் ஒருவன் தொலைதூர கிராமத்திலிருந்து துலாம் ஸ்நானம் செய்ய மாயூரம் நோக்கிச் சென்றான். தன் உடல் இயலாமை காரணமாக துலா ஸ்நானம் முடிந்த பின்னரே மயிலாடுதுறையை அடைய முடிந்தது. தன்னால் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லையே என்று வருந்தி மயூரநாதரிடம் பிரார்த்தனை செய்தான். அவனுடைய பிரார்த்தனைக்கு மனமிறங்கி, "இன்றைய தினம் கார்த்திகை முதல் தேதியாக இருப்பினும் இக்காவிரியில் நீராடு, உனக்கு முழுமையான துலா ஸ்நான செய்த பலன் கிட்டும்" என்று அசரீரியாக அருளினார்.
அத்துடன் கார்த்திகை முதல் நாள் எவர் ஒருவர் காவிரி ஸ்நானம் செய்தாலும் அது துலா மாதம் முழுவதும் ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என்றும் கூறி அருள்பாலித்தார். இந்த நிகழ்வின் காரணமாகவே முடவன் முழுக்கு என்று பெயர் பெற்றது.
முடவன் முழுக்கு விழா:
மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல இன்று (16.11.2024) மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி காவிரித் தாய்க்குச் சிறப்புத் தீபாராதனையுடன், காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.. அப்போது காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.
“கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு”
மேற்கண்ட ஸ்லோகத்தைக் கூறி, துலா மாதத்தில் காவேரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் 'கடைமுகம்' என்று சொல்லப்படும் ஐப்பசி 30ம் தேதி நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், 'முடவன் முழுக்கு' என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் அதே புனித பலனைப் பெறலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
Leave a comment
Upload