தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைக்கழி திருக்கோயில். இக்கோயிலில் முருகப் பெருமான் தெய்வானை சமேதராக அருள்பாலிக்கிறார். முருகப் பெருமான் அறுபடை வீடுகளைத் தவிர, அவரின் திருப்பாதங்கள் பதித்த ஸ்தலங்கள் இரண்டு, அவற்றில் ஒன்று வள்ளியை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று முருகன் பாப விமோசனம் பெறுவதற்காகத் தவமிருந்த இந்த திருவிடைக்கழி திருத்தலம் என்பது சிறப்புக்குரிய விஷயமாகும். மற்றும், தெய்வானை இங்கு முருகனை மணம் செய்ய விரும்பிய தவம் இருந்த ஸ்தலம். மேலும் இங்குதான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
“அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே” - திருப்புகழ்
இந்தக் கோயிலைப் பற்றி அருணகிரிநாதரால் "திருப்புகழ்" "கந்தர் அனுபூதி" "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட நூல்களில் போற்றி பாடப்பட்டுள்ளது. சேந்தனார் பெருமானால் பாடப்பட்ட "திருவிசைப்பா" “ திருப்பல்லாண்டு” ஆகிய நூல்கள் இந்த ஆலயத்தில் இருந்துதான் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குன்றுகள் இல்லாத இடங்களிலும் கூட முருகப்பெருமானுக்குச் சிறப்பு மிக்க பல கோயில்கள் அமைந்துள்ளன. அதில் பிரசித்தி பெற்ற ஒரு ஸ்தலம் திருவிடைக்கழி முருகப்பெருமான் திருக்கோயில் என்றால் மிகையாகாது.
பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் முருகப்பெருமானுடைய பெயர் 'திருக்குராத்துடையார்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர இதனை 'மகிழ்வனம்' என்றும், குராப்பள்ளி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
ஸ்தல புராணம்:
திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை முருகன் சம்ஹாரம் செய்தபின், சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன் சுறாமீன் வடிவெடுத்து தரங்கம்பாடி கடலில் ஒளிந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால் முருகனுக்குப் பாவம் உண்டானது. அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக, இங்குள்ள குராமரத்தின் அடியில் தவமிருந்தார். இதையடுத்து அவருக்குப் பாப விமோசனம் கிடைத்தது. தன் மகனான முருகனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்குப் பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது ஸ்தல வரலாறு. குராமரத்தின் அடியில் தவமிருந்ததால் 'திருக்குராவடி' என இத்தலத்திற்குப் பெயர் வந்தது. இவரை இங்குத் தரிசித்தால் பாவங்கள் நீங்கும். முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை தவம் செய்த தலம் இது. முதல் படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், சிவனருளால் முருகனுக்கு ஹிரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம்
“திருவிடைக்கழி” என்று அழைக்கப்படுகிறது.
ஸ்தல வரலாறு:
இக்கோயில் முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் சோழ மன்னன் கட்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆனால் காலத்தைச் சரியாகக் கணிக்க முடியவில்லை. இந்த கோவில் பல நூற்றாண்டுகளாகப் பல புனரமைப்பு செய்யப்பட்டு, மேலும் தற்போதைய அமைப்பு 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்டது. இந்த கோயில் அழகிய கட்டிடக்கலை மற்றும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுக்காகப் பெயர் பெற்றது.
இங்குள்ள பல கல்வெட்டுகள் வாயிலாக இந்தப் பகுதியில் பல மடங்கள் இருந்த விவரமும், அதன்மூலம் நாள்தோறும் அன்னதானம் பல ஆண்டுகள் நடைபெற்று வந்ததும், மேலும் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டதும் செய்தியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஸ்தல அமைப்பு:
இக்கோயில் கிழக்கு நோக்கிய இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரமும், பலிபீடமும், அடுத்து விநாயகர் அருள் புரிகின்றார். முன்மண்டபத்தில் திருப்புகழ் பாடல்கள், வேல் விருத்தம் முதலிய கல்வெட்டுக்கள் உள்ளன.
வலதுபுறம் தெய்வானை தனி சந்நிதியில் தவக்கோலத்தில் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் மற்றுமொருவிநாயகர் சந்நிதி. ஸ்தலவிருட்சம் குராமரம் தழைத்துக் காட்சி தருகிறது. முருகப்பெருமான் சிவபெருமானைத் தியானித்து தவம் செய்த இம்மரத்தடியில் பலிபீடம் (பத்ர லிங்கம்) அமைந்துள்ளது. இதற்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. குராமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனம் ஒன்றி, சாந்தமான குணத்தை அடையலாம். தனிச் சந்நிதியில் திருக்காமேஸ்வரர் சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார். கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், பின்புறம் பாபநாச பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம். பிரகார வலம் முடித்து உள்வாசலைத் தாண்டி இடதுபுறம் செல்லும்போது சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்களை வழிபடலாம். உட்சுற்றில் நவசக்திகளும், விநாயகரும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். அதை தொடர்ந்து, நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய உற்சவ மூர்த்தியை வணங்கலாம்.
இக்கோயிலில் சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்ண்டேசுவரர் என்று (சிவனுக்கும், முருகனுக்கும் உரியவர்களாக) பெயர்கள் சொல்லப்படுகின்றன. துர்க்கை, பைரவர், சூரியன் ஆகியோரை வணங்கியபடி, முன் மண்டபத்திற்கு வந்து இரு கணபதிகளையும் வணங்கிப் படியேறிச் சென்றால் கருவறையில் முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடி அருள்பாலிக்கின்றார். கருவறையின் உட்புறத்தில் ஒரு சிவலிங்கமும், முருகனுக்கு முன்புறம் ஒரு ஸ்படிக லிங்கமும் உள்ளது. முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவவிமோசன சுவாமியாக அருள்கிறார். திருச்செந்தூருக்கு நிகரான இவரைத் தரிசிக்க தீராப்பழியும் தீரும். இரண்டாம் பிராகாரத்தில் வடக்கு மதிற்சுவரில் இரு உருவங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் மேல் பொற்கோயில் நம்பி, தில்லை மூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ஒரு மேடையில் ரிஷபம், இடையன், குடம், பாம்பு முதலிய உருவங்களும், சற்றுத் தள்ளி மன்னன் ஒருவன் உள்ளிட்ட பல உருவங்களும் உள்ளன.
இக்கோயிலில் அம்பாளுக்குத் தனி சந்நிதி இல்லாமல் அருகிலுள்ள தரங்கம்பாடி கோயிலில் அமைந்துள்ளது. இங்கு நவக்கிரக சந்நிதி இல்லை.
ஸ்தல விருட்சம் - குரா மரம்
ஸ்தல தீர்த்தம் - சரவண தீர்த்தம், கங்கை கிணறு
ஸ்தல சிறப்பு:
முருகப்பெருமான் திருமுறைகளில் பேறு பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
இக்கோயில் சோழநாட்டுத் திருச்செந்தூர் எனப் போற்றப்படுகிறது.
முருகனும், லிங்க வடிவ சிவனும் ஒரே கருவறையில் இருந்து அருள்பாலிக்கும் அற்புத ஸ்தலம்.
இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் குறிப்பிடத்தக்கது.
இத்திருத்தலத்தில் 'சர்வமும் சுப்பிரமணியம்' என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்பிரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சியளிக்கின்றனர்.
இங்கு தான் முருகன், தெய்வானைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதை வெளிப்படுத்தும் விதத்தில் தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல உள்ளது சிறப்பு.
மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம், திருவிடைக்கழியில் சம தளமான மண்ணிலும் வளர்ந்து ஸ்தல விருட்சமாகவும் உள்ளது என்பது அதிசயமான நிகழ்வு. இந்த குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும்.
அருணகிரிநாதர் (திருப்புகழ்), சேந்தனார் (திருவிசைப்பா) ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
இந்த கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேஸ்வரர் என அனைத்து தெய்வங்களும் முருகப்பெருமானாகவே காட்சியளிப்பது தனிச் சிறப்பாகும்.
திருப்பல்லாண்டு பாடப்பெற்ற தலம், அதைப் பாடிய சேந்தனார் முக்தி பெற்ற தலம்,
ராகு தோஷ நிவர்த்தி ஸ்தலம்:
முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த கோயிலில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.
திருவிழாக்கள்:
தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசத்தின் போது, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக வருவது பெரிய திருவிழாவாக நடக்கிறது. சிவன் மற்றும் முருகனுக்கான கோயில்களில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் இங்கு மிகவும் விமரிசையாக நடத்தப்பெறுகிறது. தில்லையில் பொன்னம்பலக் கூத்தனுக்குத் திருவாதிரை நாளில் களி நிவேதனம் செய்தவரும், திருப்பல்லாண்டு அருளி திருத்தேரினை தில்லை திருவீதிகளில் ஓடவைத்தவருமான சேந்தனார் இத்தலத்தில் குரா மரத்தின் அடியில் முக்தி பெற்றது ஒரு தைப்பூச நன்னாள். அன்றைய தினம் இவருக்கு அபிஷேக, ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
மனத்தெளிவு பெற, சிறந்த அறிவு பெற, தீராத பழி நீங்க, இத்தலத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறப் பக்தர்கள் பால், பன்னீர் காவடிகளை முருகனுக்குச் செலுத்துகின்றனர். திருமணத்தடை நீங்க வைகாசி, புரட்டாசி மாதத்தில் சிக்கல், சிதம்பரம் பகுதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் கோவில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடையூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது. திருக்கடையூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. சென்றால் திருவிடைக்கழி ஸ்தலத்தையடையலாம். கோயில் வரை பேருந்து செல்கிறது.
திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து 21 கி.மீ.,
நல்ல திருப்பங்களைத் தந்திடும் திருவிடைகழி முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
https://youtu.be/x1YHyvJUcUE
Leave a comment
Upload