தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - வேடிக்கை பார்க்காதீர்கள்

20240116161948907.jpg

தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1448 பேருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்திருக்கிறது. ந்த ஒரு புள்ளி விவரம் அரசாங்கம் சமூக ஆர்வலர் ஒருவருக்கு தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தந்திருக்கிறது. இது அரசாங்கமே தந்த ஒப்புதல் வாக்குமூலமாக தான் பார்க்க வேண்டி இருக்கிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் 347 குழந்தைகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. இது தவிர நெல்லையை சுற்றியுள்ள சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் அவலம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் இந்த விவரங்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு சென்றிருக்கும். இதற்குக் காரணம் குழந்தைகள் திருமணம் என்பதுதான். இது சட்டப்படி தவறு என்றாலும் அரசாங்கம் மௌனமாக வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த குழந்தை மகப்பேறுகளே போதுமான ஆதாரம். நெல்லை மாவட்டத்தை போல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் குழந்தை திருமணங்களும் 18 வயதுக்கு குறைந்தவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதும் தொடர் நடவடிக்கையாக தான் இதுவரை இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் 10 குழந்தைகள் திருமணம் நடக்கிறது. இதன்படி கணக்கிட்டுப் பார்த்தால் ஓராண்டுக்கு 3650 குழந்தை திருமணம் தமிழ்நாட்டில் நடக்கிறது. இதனை தடுத்து நிறுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்படி இல்லாமல் மௌனம் காத்தால் அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள் என்றுதான் எண்ணத் தோன்றும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த அரசாங்கமும் குற்றவாளி தான்.