போன வாரமே தமிழன்னை படத்துடன் முத்தும் தந்தமும் தந்து பீடிகை போட்டிருந்தார் பரணீதரன்.
அதைப்பற்றி அவர் தொடர்கிறார்.
இப்போது நாம் பார்க்கப் போவது வல்லெழுத்து / வல்லினம் மிகும் இடங்கள் மற்றும் மிகா இடங்கள்.
சென்ற வாரம் நாம் இந்த எழுத்துக்களின் தன்மையை ஒரு சிறு காட்சி மூலம் பார்த்தோம். இப்போது அந்த பகுதியின் முழுமையான அர்த்தத்தை பார்ப்போம்.
அன்னைத் தமிழை - அன்னையாகிய தமிழை என்று பொருள் தரும்.
அன்னை தந்தை - அன்னையும் தந்தையும் என்று பொருள் தரும்
தந்த பாத்திரத்தில் - யானை தந்தத்தால் செய்த பத்திரத்தில்
தந்தப் பாத்திரத்தை - ஒருவர் கொடுத்த பாத்திரத்தை
சக்கரத் தையல் - சக்கரத்தால் உருவாக்கப்பட்ட தையல் முறை
சர்க்கரை தண்ணீரால் - சர்க்கரை சேர்க்கப்பட்ட தண்ணீர்
சங்கப் புலவர்கள் - சங்கத்தை சேர்ந்த புலவர்கள்
சங்கத் தமிழ் - சங்கத்தால் வளர்க்கப்பட்ட தமிழ்
மகிழ்ச்சி பொங்கப் பாடினர் - மகிழ்ச்சி பொங்கியதால் பாடினர்
சங்கு புஷ்பம் - சங்குப்பூவின் வடமொழிப் பெயர்
சங்குப் பூவினை - சங்குப்பூவின் தமிழ்மொழிப் பெயர்
சங்குப் புய்பம் - சங்குப்பூவின் வடமொழிப் பெயரை தமிழ் மொழிக்கு ஏற்ப மாற்றி அமைத்தது
இதேபோல் இன்னும் சில எடுத்துக்காட்டுகளையும் பார்ப்போம் :
தீர்த்த பாத்திரம் (புனித தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம்) - தீர்த்தப் பாத்திரம் (முழுவதுமாக காலி செய்யப்பட்ட பாத்திரம்)
அடிதடி (அடியும் தடியும்) - அடித்தடி - அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் தடி
தமிழ் தேசியம் (தமிழ் நாட்டின் வடமொழிப் பெயர்) - தமிழ்த்தாய் (தமிழின் தாய் உருவக வடிவம்)
தமிழ் மொழியில் பங்சுஏஷன் (Punctuation) (நாம் பன்சுவேஷன் / பஞ்சுவேஷன் என்றும் தவறாக கூறுவோம்) என்ற நிறுத்தற் குறியீடு இல்லாததால், ஒரு சொல்லின் சரியான பொருளை படிப்பவர்கோ கேட்பவர்க்கோ புரிய வைப்பதற்காக உருவாக்கப்பட்ட முறையே வல்லினம் மிகும் மற்றும் மிகா எழுத்துக்கள்.
இந்த நிறுத்தற்குறியீடுகள் எந்த இந்திய மொழிகளிலும் கிடையாது. அதனால் இந்தியாவில் உருவான அனைத்து மொழிகளும் இது போல பல்வேறு முறைகளை கையாளுகின்றன. இரண்டு சொற்களுக்கு நடுவில் வல்லின எழுத்து வந்தால் ஒருவிதமான பொருளையும் வராவிட்டால் வேறு விதமான பொருளையும் தமிழ் மொழி கொடுக்கும்.
பொதுவாக வடமொழி சொற்கள் அல்லது எழுத்துக்கள் கலந்த சொற்களில் நிறுத்தற்குறிகள் அல்லது வல்லின எழுத்துக்கள் மிகுந்து வருவதில்லை. எடுத்துக்காட்டாக புஷ்பம், தேசியம், தந்தம், தீர்த்தம் போன்றவை. இந்த சொற்களை இன்னும் சற்று விளக்கமாக பார்ப்போம்.
தேசியம் - தே₃ஸியம்
தந்தம் - த₃ந்தம்
தீர்த்தம் - தீர்த்த₂ம்
கந்த சஷ்டி கவசம் - கந்த₃ ஸஷ்டி கவஸம்
ஒருவேளை வட மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கியோ அல்லது அந்த எழுத்துக்களின் தமிழ் பதங்களை பயன்படுத்தியோ நாம் எழுதினோமானால் அப்பொழுது வல்லின எழுத்துக்கள் மிகுந்து வரும். எடுத்துக்காட்டாக
தேசியம் என்ற பதத்தை தே(The)சி(Chi)யம் என்று உச்சரிக்க வேண்டும். அப்போது வல்லின எழுத்து மிகுந்து வரும்.
தந்தம் என்ற பதத்தை த(Tha)ந்த(Tha)ம் என்று உச்சரிக்க வேண்டும். அப்போது வல்லின எழுத்து மிகுந்து வரும்.
தீர்த்தம் என்ற பதத்தை தீ(Thee)ர்த்த(Tha)ம் என்று உச்சரிக்க வேண்டும். அப்போது வல்லின எழுத்து மிகுந்து வரும்.
கந்த சஷ்டி கவசம் என்ற பதத்தை க(Ka)ந்த(Tha) ச(Cha)சு(Chu)டி கவச(Cha)ம் என்று உச்சரிக்க வேண்டும். அப்போது வல்லின எழுத்து மிகுந்து வரும்.
இவற்றுக்கான தமிழ் சொற்களை பயன்படுத்தினால் வல்லினம் மிகுந்து வரும். எடுத்துக்காட்டாக
தேசியம் - நாடு
தந்தம் - பல்
தீர்த்தம்- நன்னீர்
கந்த சஷ்டி கவசம் - முருகன் ஆறாம் நாள் காப்பு
இந்த முன்னுரையுடன் வல்லெழுத்து மிகும் இடங்கள் மற்றும் மிகா இடங்களில் இலக்கணத்தை பார்ப்போம் என்று அழைக்கிறார் நமது பரணீதரன்.
சுட்டெழுத்துகளின் பின் மிகுந்து வரும்
அ,இ,உ என்னும் சுட்டெழுத்துகளின் பின் வல்லின எழுத்துக்கள் மிகுந்து வரும். எடுத்துக்காட்டாக அப்பையன், இவ்விடம், உப்பக்கம்.
நன்னூலில் ஒரு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு பத்து இலக்கணத்தினை பவணந்தி முனிவர் கூறியுள்ளார்.
அதில் அவர் முதலில் கூறுவது சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்.
அதாவது, ஒரு சொல்லையோ அல்லது சொற்றொடரையோ எவ்வளவுக்கு எவ்வளவு சுருக்கமாக கூறுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று கூறுகிறார். அதனால் தான் அந்தப் பையன் என்ற ஒரு பெரிய சொல்லை அப்பையன் என்று சுருக்கி கூறுகிறோம். அதேபோல் இந்த இடம் இவ்விடம் ஆனது. உந்தப் பக்கம் உப்பக்கம் ஆனது. சுருங்கச் சொல்லுதலின் இலக்கணத்தை செய்தாகிவிட்டது.
இப்போது விளங்க வைத்தல் என்ற இலக்கணத்தையும் இதில் கொண்டு வர வேண்டும். அ பையன் என்று நாம் எழுதினால் பலருக்கு அது புரியாது. அதேபோல் அது இனிமையையும் கொடுக்கவில்லை. இந்த சொற்றொடருக்கு அர்த்தமும் இல்லை. அதே அப்பையன் என்று எழுதும் பொழுது சொல்லின் ஓசை நயமும் கூடிவிட்டது, இந்த சொல்லிற்கான அர்த்தமும் புரிகிறது. இதுதான் வல்லின எழுத்தின் பலம்.
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவி்ன்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
முறையின் வைப்பே உலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே - நன்னூல் 13
சில வினாவெழுத்தின் பின்னால் மிகுந்து வரும்
எ என்ற வினா எழுத்தின் பின் வல்லின எழுத்துக்கள் மிகுந்து வரும். எடுத்துக்காட்டாக எப்பக்கம், எத்திசை, எச்சிறுவன் போன்றவை. இங்கேயும் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் இலக்கணம் மேலே உள்ளது போலவே உள்ளது.
சில சுட்டு வினாத் திரிபுகளின் பின் மிகுந்து வரும்
அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு மற்றும் வினா திரிபுகளின் பின்னால் வல்லின எழுத்துக்கள் மிகும். எடுத்துக்காட்டாக
அந்தப் பையன், இந்தப் பையன், எந்தப் பையன் போன்றவை. இவற்றில் வல்லின எழுத்துக்கள் வராமல் போனால் அந்தவும் பையனும், இந்தவும் பையனும், எந்தவும் பையனும் என்று பொருள் மாறிவிடும். அன்னை தந்தை என்ற பதத்தில் அதைத்தான் நாம் பார்த்தோம்.
சில சுட்டு வினாப் புணர்ச்சியின் பின் மிகுந்து வரும்
அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு போன்ற சுட்டு வினா புணர்ச்சியின் பின்னாலும் வல்லின எழுத்துக்கள் மிகும். எடுத்துக்காட்டாக
அப்படிப் பாடினான், இப்படிச் சொன்னான், எப்படிப் போனான், அங்கு பாடினான், இங்குச் சென்றான், எங்குப் போனான்.
இதில் “அப்படி பாடினான்” என்று வல்லின எழுத்து சேர்க்காமல் சொன்னால் அப்படி என்ற பெயர் கொண்ட ஒருவன் பாடினான் என்று பொருள் தரும். அதேபோல் “இப்படி சொன்னான்” என்று சொன்னால் இப்படி என்ற பெயர் கொண்ட ஒருவன் சொன்னான் என்று பொருளாகிவிடும். “எப்படி போனான்” என்று கூறினால் எப்படி என்ற பெயர் கொண்ட ஒருவன் போனான் என்று ஆகிவிடும். அதே போல் தான் “அங்கு பாடினான்” என்று கூறினால் அங்கு(அங்குசாமி) என்ற பெயர் கொண்ட ஒருவன் பாடினான் என்று பொருளாகிவிடும். அதேபோல் தான் மற்ற பதங்களும். அதனால் தான் இந்த சொற்களுக்குப் பின்னால் நாம் வல்லின எழுத்துக்களில் சரியாக சேர்க்க வேண்டும்.
மற்ற மிகும் இடங்களை வரும் வாரம் பார்ப்போமே என்று விடை பெற்றார் பரணீதரன்.
Leave a comment
Upload