தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
திருச்சபையில் தீந்தமிழ்   - மரியா சிவானந்தம் 

20221121112819520.jpg

இறை வழிபாடும் மொழியும் ஒன்றுடன் ஒன்றாக பின்னி பிணைந்தவை. இறைவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவன். ஓர் ஆன்மா எழுப்பும் குரல் இறைவனின் செவிகளைச் சென்றடைய மொழி தேவை இல்லை .ஆனால் மக்கள் ஒன்று கூடி பிராத்திக்கும் போது அவர்களுக்கு புரியும் மொழியில் வழிபாடு செய்வதே உன்னதம். இன்னும் நம் கோவில்களில் தமிழில் வழிபாடு செய்வதா அல்லது சமஸ்கிருதத்தில் வழிபாடு செய்வதா என்ற சர்ச்சை நம்மூரில் ஓடிக் கொண்டு இருப்பதை நாம் அறிவோம்.

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திருவழிபாட்டு மொழி பற்றிய விவாதம் பல்லாண்டுகளாகவே இருந்து வந்தது. குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பல நூறு ஆண்டுகளாக திருப்பலி பூசை லத்தின் மொழியில் இருந்தது என்றும் சுமார் ஐம்பது ஆண்டுகளாத்தான் தமிழ் மற்றும் பிராந்திய மொழிகளில் என்று சொன்னால் நம்புவீர்களா? தற்காலத்தில் தூய தமிழில் வழிபாடு மற்றும் ஜெபங்கள் நடத்தப்படுகின்றன.

நான் பிறந்து வளர்ந்த சிற்றூரில், சிறு வயதில் சர்ச்சில் பூசையில் எல்லா ஜெபங்களும் லத்தினில் தான் இருந்தது. பாதிரியார் ஜெபிக்கும் போது ,மக்கள் பதில் மொழி சொல்வதும் வழக்கம். அதிகம் படிக்காத எளிய மக்களும் ,பெண்களும் லத்தின் மொழியில் பதில் உரைப்பதை பார்த்திருக்கிறேன்.

பீடத்தை நோக்கி நின்றுக் கொண்டே பாதிரியார் திருப்பலி நிறைவேற்ற, மக்கள் பொருள் புரியாத மொழியில் பதில் சொல்வார்கள். "தாந்தும் ஏர்கோ சாக்ரமெந்தோ" என்ற லத்தின் பாடலை பின்னாளில் "மாண்புயர் இவ்வருட் சாதனத்தை" என்று மொழி பெயர்த்தனர். வழிபாட்டின் இறுதியில் சொல்லும் 'தேயோ கிராசியஸ்' என்னும் தொடர் தமிழ் படுத்தப்பட 'இறைவனுக்கு நன்றி' என்றானது. இவை சின்ன எடுத்துக்காட்டுகளே. ஒரு அகண்ட வெளியில் இறைவனும், மனிதனும் சொற்களின்றி தவிப்பது போல் இருந்தது அக்கால வழிப்பாடு .

1962 ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற வாடிகன் சங்கம், மக்களை மேலும் இறைவனிடம் நெருக்கமாக்க மொழி அவசியம் என்பதை உணர்ந்து அவரவர் தாய் மொழியில் வழிபாட்டை நடத்த அனுமதி அளித்தது. தேவாலயங்களில் இருந்து லத்தின் பிரியா விடை பெற்றுக் கொண்டது.

அதன் பின் நிகழ்ந்ததெல்லாம் அற்புதம். தமிழ் மொழியில் பூசை ஜெபங்கள், பதிலுரைகள் எழுதப்பட்டன. விவிலியம் நல்ல தமிழில் எழுதப்பட்டது.அழகான இசைப்பாடல்கள் உருவாகின.

‘ செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி நான் பாடிடுவேன் இறைவா

என் சிந்தனையில் நீ இருந்து வாழ எழுந்தருள்வாய் தலைவா

போன்ற அழகான பாடல்கள் உயிர் பெற்றன

ஆனால் அன்றாட ஜெபங்களில் மட்டும் வடமொழி கலந்தே இருந்தது . சில நூறு ஆண்டுகளுக்கு முன் வடமொழி கலந்த தமிழில் எழுதப்பட்டு ,ஜெபிக்கப்பட்ட தமிழ் ஜெபங்கள் எவ்வித மாறுதலுக்கும் உட்படுத்தப்படாமல் இருந்தன .

இப்போது நான்கு ஆண்டுகளாக இந்த அன்றாட ஜெபங்களில் இருந்த வடமொழிச் சொற்களுக்கு பதிலாக தூய தமிழ் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன.அதே போல் பூசை ஜெபங்களிலும் இந்த மொழி மறுமலர்ச்சி நுழைந்தது. இப்போது எல்லா இடங்களிலும் சம்ஸ்கிருத சொற்கள் நீக்கப்பட்டுள்ளன .

ஜெபம்-மன்றாட்டு, சர்வேஸ்வரன்-இறைவன், மகிமை-மாட்சிமை, பிதா, சுதன்-தந்தை,மகன் , அர்ச்சியசிஷ்ட மரியாயே-புனித மரியே ஜெபிப்போமாக -மன்றாடுவோமாக என்று வடமொழி சொற்கள் நல்ல தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. திருச்சபை என்று காலங்களாய் வழங்கி வந்த சொல் இன்று திரு அவையாகி விட்டது .

கிறிஸ்துவ கீதங்கள் மனதை உருக்கும் மகத்துவம் கொண்டவை. முதல் முதலாக அந்த கீர்த்தனைகளை இயற்றிய பண்டிதர்கள் அந்நாள் வழக்கப்படி வடமொழி கலந்தே எழுதினார்கள் . இனிமை நிறைந்த அப்பாடல்கள் இன்றும் பல சபையினரால் பாடப்பட்டு வருகின்றன .

சர்வ லோகாதிபா நமஸ்காரம்

சர்வ சிருஷ்டிகனே நமஸ்காரம்

தரை, கடல், உயிர் வான் சகலமும் படைத்த

தயாபர பிதாவே நமஸ்காரம்

1864 ஆம் ஆண்டு, வேதமாணிக்கம் என்பவரால் எழுதப்பட்டு இன்றும் பாடப்பட்டு வரும் பாடல். இந்த பாடல் போலவே பல பாடல்கள் வடமொழி கலந்து எழுதப்பட்டன. நூறாண்டுகள் கடந்தும் இன்றும் மக்கள் நினைவில் இருந்து நீங்காத பாடல்களில் இதுவும் ஒன்று .

இப்போது தேவாலயங்களில் பாடப்படும் பாடல்களில் ஒன்று இது.

தமிழால் உன் புகழ் பாடி ,தேவா நான் தினம் வாழ

வருவாயே திருநாயகா ,வரம் தருவாயே உருவானவா

எனைச் சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது

துணையாகி எனை ஆள்பவா

மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு

குணமாக்க வருவாயப்பா ,

எனை உனதாக்கி அருள்வாயாப்பா .

இறைவனை மொழி என்னும் சட்டகத்தில் அடைக்க முடியாது. எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன். மனிதனோ வரையறைக்குள் உட்பட்டவன். அவன் சிற்றறிவின் வழியாக இறைவனை எட்ட முயல்கையில் மொழி ஒரு கருவியாகிறது . அக்கருவி அவன் மனதுக்கு உகந்த தாய் மொழியாகும் போது கூடுதல் நிறைவும், மகிழ்வும் பிறக்கிறது .

தமிழ் மொழி பக்தி இலக்கியங்களின் தங்கச் சுரங்கம். திருவாசமும், தேவாரமும் , திவ்ய பிரபந்தமும் ,திருப்பாவையும் ,சீறாப்புராணமும் , இரட்சணிய யாத்ரீகமும் பிறந்த மண் இது. இறைவனை மதம் என்னும் கட்டமைப்புக்குள் புகுத்தாமல் , தமிழ் பக்தி இலக்கியங்களில் உள்ள நல்ல பாடல்களை தேவாலயங்களில் பாடும் நாள் வர வேண்டும். திருஅவைக்குள் தீந்தமிழ் ஓங்கி ஒலிக்க வேண்டும் .

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்