தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!.- ஜாசன்

பயணங்கள்...

20210321085525505.jpeg

எனக்கு பயணம் செய்வது ரொம்பப் பிடிக்கும். ஏதாவது ஒரு ஊர் என்று தேடித்தேடி எங்காவது போய்க் கொண்டே இருப்பேன். எங்கள் வீட்டில் முதல் முதலில் டெல்லி போனது நான்தான். டெல்லி, ரிஷிகேஷ், ஹரிதுவார், முசௌரி என்று நான் வேலைக்கு சேர்ந்த அடுத்த வருடமே அங்கெல்லாம் போனேன். திருமணத்துக்கு பிறகு... நான், என் மனைவி, என் மகள் மூவருமே எங்கேயாவது ஊர் சுற்றிக் கொண்டுதான் இருப்போம். மே மாதம் பெரும்பாலும் எங்கள் இலக்கு டெல்லியாகத்தான் இருக்கும். பணிக்கர் டிராவல்ஸில் நாங்கள்போக வேண்டிய இடங்களை தீர்மானமாக முடிவு செய்து, பணம் கட்டி விடுவோம். ஆக்ரா, ஜெய்ப்பூர், குலுமனாலி, வாகா பார்டர், ஜாலியன் வாலாபாக், வைஷ்ணவ தேவி கோயில், ஜம்மு என்று இந்திய வரைபடத்தில் சில பல இடங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். இமயமலையை, அருகே போய் அண்ணாந்து பார்த்து வியந்திருக்கிறோம்.

எங்கள் பயணம், ஆன்மீகம் மற்றும் சுக வாசஸ்தலங்களாகவும் சில சமயம் இருக்கும். பஞ்ச துவாரகா, பத்ரி, நேபாளம், காசி எனவும்... மூன்று நான்கு முறை அலகாபாத், திரிவேணி சங்கமம், மும்பை என்று எங்கள் பயணம் போய்க் கொண்டே இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக, எங்கள் டிராவல் பேக் பரணில் கிடக்கிறது.

நான் பெரும்பாலும் ரயிலில் பயணிப்பதை விரும்புவேன். ரயில் பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம். ஆரம்ப காலங்களில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வது வழக்கம், என் மனைவி, இரண்டு நாட்களுக்கு சாப்பிடுவதற்கு இட்லி, புளியோதரை, சப்பாத்தி, தயிர்சாதம், நொறுக்குத் தீனி என்று ஒரு பெரிய பார்சலை எடுத்து வருவாள். அதன்பிறகு ராஜதானி அறிமுகமானதும், அதில் நாங்கள் பயணிக்க ஆரம்பித்தோம். அது ஒரு சுகானுபவம். படிப்பதற்கு பேப்பர் முதல் குடிக்க தண்ணீர், காலை டிபன் பிறகு சூப், மதியம் சாப்பாடு, சாய்ந்திரம் சமோசா, இரவு டின்னர் என்று சாப்பிட ஏதாவது வந்து கொண்டே இருக்கும். சாப்பிட்டுக் கொண்டே அந்த பிரயாணத்தை அனுபவிப்பது ரொம்பவும் சுகமாக இருக்கும்.

மும்பைக்கு நாங்கள் நான்கைந்து முறை போய் இருக்கிறோம். சினிமாவில் மும்பை என்றால் தாதா, சிகப்பு விளக்கு இப்படித்தான் நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல.... மும்பையில் இருப்போர் பெரும்பாலும் உழைப்பாளிகள். புலம்பெயர்ந்து வந்து வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலோர். அங்கு ஆண்களும், பெண்களும் சமமாக பார்ப்பார்கள். காரணம் - இருவர் வேலை செய்தால்தான் அங்கு வாழ்க்கை சக்கரம் கொஞ்சம் நிம்மதியாக சுற்றும். பஸ் நிறுத்தம், ஓட்டல் போன்றவற்றில் கியூ வரிசையில் நிற்பார்கள். ஆனால், ரயில் நிலையத்தில் அதற்கு வாய்ப்பில்லை. மும்பையில் நான் தங்கியிருந்த இடம் பெரும்பாலும் ரம்மியமான இடமாக இருக்கும். அங்கு இருக்கும் போது... காலையில் எழுந்து வாக்கிங் எல்லாம் போய் நாளிதழ்கள் வாங்கி படிப்பேன்.

இதேபோல் அமிர்தசரஸ் பொற்கோவிலில் நாம் நுழையும்போதே.... நம்முடன், பக்தியும் நமது மனதில் நுழையும். அந்த இடமே பக்தி மயமாக இருக்கும்.

ஜெனரல் டயர், அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்த ஜாலியன் வாலாபாக் இடத்தை பார்க்கும்போது, நமக்கு ஜெனரல் டயர் துப்பாக்கி சூடு சத்தம்... அப்பாவி இந்தியர்கள் அலறல் எல்லாம் நம் காதுக்குள் கேட்கும். அவ்வளவு தத்ரூபமாக, நமக்கு அந்த இடத்தை நம்மை அழைத்துச் சென்ற கைடு வர்ணிப்பார். நாம் வெளியே வந்தால் கூட... அந்த பாதிப்பு சில மணி நேரம் நம்மிடமே இருக்கும். அப்போது தேசத்திற்காக நாம் ஏதாவது செய்து இருக்கிறோமோ என்ற கேள்வி கூட நமக்கு எழும்.

இதேபோல் வாகா பார்டரில் தேசியக் கொடி இறக்கும் வைபவம், அது ஒரு தேசபக்தி அனுபவமாக இருக்கும். அந்த இடமே தேச பக்தியுடன் கூடிய உணர்ச்சிபூர்வமான இடமாக நம்மை மாற்றி விடும். நாம் அங்கே உட்கார்ந்தால், நம்மையும் அறியாமல் பாரத் மாதா கி ஜே என்று சொல்ல வைக்கும். அப்படிப்பட்ட சூழல் அங்கு இருக்கும். பக்கத்தில் பாகிஸ்தானிலும் இதே மாதிரி தேசியக் கொடி இறக்கும் வைபவத்தை கொண்டாடுவார்கள். அங்கே அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. இந்திய எல்லையில், ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி தங்கள் தேசபக்தியை பதிவு செய்வார்கள். ஆனால், பாகிஸ்தானியர் தங்கள் தேசியக் கொடியை, இந்தியா இருக்கும் பகுதியில் காண்பித்து நம்மை வெறுப்பேத்த முயல்வார்கள். ஆனால் இந்தியர்கள், அதைப் பொருட்படுத்தவே மாட்டார்கள்.

காசியில் உள்ள கங்கை புனிதமானது என்று சொன்னாலும், அதை சுத்தமானது என்று என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. அதே சமயம் இரவில் நடக்கும் கங்கா ஆரத்தி ரொம்பவும் அழகாகவே இருக்கும். அதே சமயத்தில், நாம் நம்மை அறியாமலேயே ஆன்மீக சூழலுக்குள் செல்வோம். அந்த ஆரத்தி, அழகே.. அழகு. ரசிக்க, இரண்டு கண்கள் போதாது.. அவ்வளவு அழகாக இருக்கும். ரிஷிகேஷ், ஹரிதுவார் இந்த நதிகளில் நீர் சில்லிட்டு இருக்கும். குளிப்பதற்கு இறங்கும்போதும் தயங்கிக்கொண்டே இறங்குவோம். ஆனால், குளித்தது போதும் என்று கரையேற மனசே வராது. அதே சமயம் அவ்வளவு சில்லிட்ட தண்ணியில் நாம் குளித்தாலும், நமக்கு சளி பிடிக்காது, தும்மல் வராது. இதுவும் ஒரு ஆச்சரியம் தான்.

பத்ரி என்பது இமயமலை தொட்டுவிடும் தூரத்துக்கு அருகில் இருப்பது. குளிரெடுக்கும்... ஜெர்கின், கம்பளியில் ஆன ஸ்வெட்டர், அதன்மேல் கம்பளிப் போர்வை, காலில் சாக்ஸ், கையில் உறை என்று எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், நம் முதுகுத்தண்டை கண்டிப்பாக சில்லிட வைக்கும். அங்கு, தண்ணீர் இமயமலையிலிருந்து கீழே வந்து ஊற்றாக கொட்டுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில், சாதம் செய்வதற்கான உலை நீர் போல் தண்ணீர் கொதிக்கும். இந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எப்படி தண்ணீர் கொதிக்கிறது என்று பகுத்தறிவு விஞ்ஞானிகள் எல்லாம் ஆராய்ந்து விட்டு, ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று விட்டுவிட்டார்கள். இந்த அதிசயத்தைப் பார்த்து, நானும் வியந்திருக்கிறேன்.

இதேபோல் காஷ்மீரில் நான் சொல்வது 80- 85ல்... அங்கு ஒரு கடைக்குப் போனபோது, கடைக்காரர்oh you are from India என்றார். நான் அப்போது அவருக்கு பதிலாக... yes. I am from India. you are also in India என்றேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல், நோ.. நோ.. நோ.. என்றார். ஆகஸ்ட் 15 கொடியேற்றம் எல்லாம் காஷ்மீரில் அந்தக் காலத்தில் சும்மா, ஏற்றி இறக்கி விடுவார்கள் ஒரு சம்பிரதாயத்திற்கு. காஷ்மீர் இந்திய வரைபடத்தில் இருந்தது அவ்வளவுதான். ஆனால் அங்கிருந்த பெரும்பாலோர், பாகிஸ்தான் ஆதரவாளர்களாக தான் இருந்தார்கள். இதை நான் நேரில் பார்த்தேன். இப்போது அதெல்லாம் பழங்கதை என்கிறார்கள். நேரில் பார்த்தால் தான் உண்மை தெரியும். ஆனால், காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என்று எம்ஜிஆர் பாடியது புதுவிதம்தான். காஷ்மீர், உண்மையில் ரொம்பவும் அழகான இடம்தான். ஆனால், அதை ரசிப்பதற்கு முடியுமா என்று தெரியவில்லை.

இதேபோல் ஜெய்ப்பூர் அரண்மனையை பார்க்கும்போது, எங்களுக்கு அந்த இடத்தை சுற்றி காட்டியவர் இங்குதான் எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படம் சூட்டிங் நடந்தது என்று சொல்லிவிட்டு... எம்ஜிஆர் பெருமைகளை எங்களுக்கு சொன்னார். அப்போது அடிமைப்பெண் எம்ஜிஆர், ஒரு நிமிடம் என் மனக்கண் முன் வந்து விட்டு போனார்.

நமக்கு, ரயில் பயணத்தில் பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் அனுபவம் ஏற்படும். சிலர் நான் ரொம்பவும் ரிசர்வ் என்பது போல் காட்டிக்கொண்டு உட்காருவார்கள். ஆனால், அவர்களே சில ரயில் நிலையங்கள் கடந்த பிறகு, நம்மோடு கலகலவென்று பேசி ஐக்கியமாகி விடுவார்கள். ஒரு முறை, நாங்கள் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்த போது... சூரத்தில் யாரோ ஒரு தனவந்தர் வீட்டில் யாகம் நடத்திவிட்டு சில ஆன்மீகர்கள் எங்கள் பெட்டியில் ஏறினார்கள். அவர்கள் எங்களிடம் நட்பாய் பழகினார்கள். அவர்கள் எடுத்து வைத்திருந்த சுட சுட சாம்பார் சாதம், சிப்ஸ் போன்றவற்றை தந்தார்கள். அதன் பிறகு அவர்கள் சீட்டு ஆட தொடங்கிவிட்டார்கள். என் அண்ணனும் அவரோடு ஆடினான். அவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாய் ஜெயித்தும் சம்பாதித்தான். இப்படி எல்லாம் கூட ரயிலில் அனுபவம் ஏற்படும்.

பயணம் என்பது நம் வாழ்க்கையின் அங்கமாக இருந்தால், உனது வாழ்க்கை அலுப்புத் தட்டாமல் இருக்கும். இதை நாம் தவற விடக்கூடாது. பணம் இல்லை, நேரம் இல்லை என்பதெல்லாம் நியாயமான காரணம் இல்லை. பயணத்தை ரசித்தால், வாழ்க்கையையும் நாம் ரசிக்கலாம்.