தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன் ஞாயிறு காலை 6 மணி… தூக்கத்தில் இருந்த கணவன் ரகுநாதனை தட்டி எழுப்பி, “ஏண்ணா… சீக்கிரம் எழுந்து ரெடியாயிடுங்க. காலையில சீக்கிரம் கடைக்கு போய், தீபாவளி பர்ச்சேஸ் முடிச்சுட்டு வந்துடலாம்! மறக்காம உங்க பர்ஸ்ல டெபிட் கார்டு இருக்கானு செக் பண்ணிக்குங்க…” என்றாள் ஆத்துக்காரி அகிலா மரியாதையுடன்.
“நீ டிபன் பண்ணி முடிக்கறதுக்குள்ள ஒரு குட்டி தூக்கம் போடறேனே…” என்றான் ரகு.
“மரியாதையா சொன்னா கேட்க மாட்டியா? எழுந்திருடா!” - அகிலா.
ரகு முணுமுணுத்தபடி எழுந்து, குளித்து ரெடியாகி, “பசங்களுக்கு எடுக்க வேணாமா… அவங்க ரெடியாகலையே?” - ரகு.
“அவங்களே தனியா போய் செலக்ட் பண்ணிக்கிறாங்களாம்… உங்க பர்ஸ்ல இருந்து பணம் எடுத்து கொடுத்துட்டேன்! நாம ரெண்டு பேரும் மட்டும் தான் போறோம்!” - அகிலா.
“அப்ப… டிபன், சாப்பாடு எல்லாம்?” - ரகு கேட்க... “எல்லாம் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிட்டேன். கடைக்கு கரெக்டா, உங்களுக்கு பிடிச்ச அயிட்டங்கள் டிஸ்கவுண்ட் ரேட்ல வந்துடும்!” - அகிலா சொல்ல, ரகு அதிர்ந்தான்.
இருவரும் காலை 9 மணியளவில் கரெக்டா ஒரு கால்டாக்சியில் சென்று கடை வாசலில் இறங்கினர். புடவை பிரிவுக்கு சென்ற அகிலாவுடன் சிறிது நேரம் நின்றான் ரகு. அதற்குள் கடை ரேக்கில் இருந்த அனைத்து புடவையையும் பரப்பி செலக்ட் செய்வதில் அகிலா மும்முரமானாள்.
ரகு நைசாக நழுவி ஆண்கள் துணி பிரிவுக்குள் நுழைந்து, தனக்கு தேவையான பேண்ட், ஷர்ட்டுகளை செலக்ட் செய்தான். பின்னர் அந்த உடைகளை அகிலாவிடம் காட்டச் சென்றான்.
அதை பார்த்ததும் “உனக்கு சுத்தமா டிரஸ் சென்ஸே இல்ல. எதையும் செலக்ட் பண்ணவே தெரியலை… நீயெல்லாம் எப்படி ஆபீஸ்ல குப்பை கொட்டறியோ… தெரியலை! இரு, நான் வந்து செலக்ட் பண்றேன்...” என அகிலா ஒருமையில் பேச, சங்கட நெளிவுடன் ரகு வெளியேறினான்.
கடையின் முன்பக்கம் இருந்த சேரில் அமர்ந்தான். இதற்குமுன் தான் வாங்கிய பேண்ட்-ஷர்ட், மற்றொரு பார்சலுக்கு பணம் கட்டி வாங்கிக் கொண்டான். பிறகு அதை கடைக்குள்ளேயே தைக்கவும் கொடுத்துவிட்டான்.
அதே நேரம் உணவு டெலிவரி பாய் வந்து, “நீங்கதானே ரகு… இந்தாங்க, உங்க உணவு பார்சல்… ₹150!” எனக் கூறி பார்சலை கொடுத்துவிட்டு, டெபிட் கார்டில் ₹150 பெற்றுச் சென்றான். பார்சலை பிரித்தபோது, அதில் காய்ந்துபோன சோளத்தட்டு தோசை 2, ஊசிப்போன தேங்காய் சட்னி இருந்தது. பார்த்து ரகுவுக்கு வயிற்றில் குமட்டியது. பார்சலை குப்பை தொட்டியில் போட்டான். அங்குள்ள கடையில் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்தான். பசி அடங்கியது.
அதே நேரம் கடைக்குள் புடவைகளை அகிலா பரப்பி செலக்ட் செய்வதை பார்த்து, கடைக்காரர்கள் ‘பெரிய பார்ட்டி… ஹைவி பர்ச்சேஸ்’ என கணக்கிட்டனர். அதைத் தொடர்ந்து, அகிலாவுக்கு மணிக்கொரு தடவை காபி, கூல்ட்ரிங்ஸ், ஸ்நாக்ஸ் கொடுத்து ஊழியர்கள் உபசரித்தனர்.
மதியம் 2 மணிக்கு ரகுவுக்கு ஆன்லைனில் மினி மீல்ஸ் பார்சலுடன் ₹250 பில் வந்தது. அதை கொடுத்துவிட்டு, பார்சலை பிரித்தால்… மாட்டுக்கு வைக்கும் பல்வகை தீவனம் மற்றும் உரித்த பாம்பு தோல் போல் ஏதோ நீண்டிருந்தது. எதையும் வாயில் வைக்க முடியவில்லை, தூக்கிப் போட்டான். மறுபடியும் ஒரு கூல்ட்ரிங்ஸ் குடித்தான்.
மாலை 6 மணியாகியும் அகிலா வெளியே வரவில்லை. தான் தைக்கக் கொடுத்த தன் துணிகளை வாங்கினான். பசி வயிற்றை கிள்ளியது. கேன்டீனுக்கு சென்று காய்ந்துபோன சமோசா சாப்பிட்டு, ஒரு டீ குடித்தான் ரகு.
இரவு 9 மணிக்கு ₹200க்கு ஒரு பார்சல். அதில் மினி பீட்ஸா, பர்கர் நமத்துப் போயிருந்தது. தூக்கி வீசினான். நேரம் ஓடியது. ஒரு காபி குடித்து, கடை பக்கவாட்டில் காவலாளியிடம் கூறிவிட்டு, ரகு படுத்துத் தூங்கிவிட்டான்.
இரவு 11 மணி… ஒவ்வொரு பிரிவாக ஊழியர்கள் மூடிக்கொண்டிருந்தனர். அகிலாவிடம் வந்த கடை ஊழியர், “நேரமாச்சு… கடையை மூடணும்! நீங்க செலக்ட் பண்ண புடவைகளுக்கு பில் போடலாமா?” எனக் கேட்டார்.
கையில் 2 புடவையுடன் அகிலா வந்ததை பார்த்து மேலாளர் திடுக்கிட்டார். பிறகு சமாளித்தபடி, “கொடுங்கம்மா… 2 புடவைக்கும் டிஸ்கவுண்ட்ல பில் போட்டுடலாம்!” என பில் கவுன்டர் ஊழியரிடம் கண்ணடித்தார்.
இதற்கிடையே ஒரு புடவையை திருப்பி கொடுத்துவிட்டு, “அந்த புடவைக்கு மட்டும் பில் போடுங்க!” என அகிலா கூறினாள். “இந்த புடவை காஸ்ட்லியா இருந்தாலும், உங்களுக்கு ரிச் லுக் கொடுக்கும். நீங்க கட்டினா அட்டகாசமா இருக்கும்! உங்களுக்கு இதை 50% டிஸ்கவுண்ட்ல கொடுக்கிறோம்!” என்றபடி ₹15 ஆயிரத்துக்கு பில்லை கொடுத்தார் கேஷியர்.
அகிலா பெருமையுடன் திரும்பிப் பார்த்தால், கணவர் ரகுவை காணவில்லை. காவலாளியிடம் ஓடோடி சென்று கேட்டாள்.
“கடை பக்கவாட்டு சுவரோரம் சுருண்டு படுத்திருக்கிறாரே… அவரா?” என்றார் காவலாளி. அங்கு ரகு படுத்திருந்ததை பார்த்து அகிலாவுக்கு திக்கென்றது. ரகுவை எழுப்பி, புடவைக்கு பில்லை கட்டிவிட்டு, இருவரும் கால்டாக்சியில் டபுள் சார்ஜ் கொடுத்து, மீண்டும் வீடு திரும்பினர்.
மறுநாள் ஆபீஸ் கிளம்பும்போது, “தீபாவளி பலகாரத்துக்கு தேவையான மாவு பொருட்களை ரெடி பண்ணிவை. நான் சாயந்திரம் வந்ததும் செஞ்சுடலாம்!” என கூறிவிட்டு ரகு பைக்கில் ஆபீஸுக்கு கிளம்பி சென்றான். இதற்கிடையே தான் வாங்கிய புடவையை, பக்கத்து வீட்டுக்காரி கோமளாவிடம் காட்டி, விலையை கூறி அகிலா பெருமைப்பட்டாள்.
“கொஞ்சம் இரு… இதே டிசைன்ல ஒரு புடவையை நாத்தனாருக்கு எடுத்தேன். விலை ₹5 ஆயிரம்தான்!” என்றாள் கோமளா. இரண்டு புடவையையும் எடுத்து பார்த்தபோது ஒன்றாக இருந்தது. ‘ஆஹா… டிஸ்கவுண்ட்ன்ற பேர்ல அதிகப்படியா ₹10 ஆயிரம் ஏமாந்துட்டோமே?!’ என முகத்தை நொடித்தபடி அகிலா வீடு திரும்பினாள்.
அவளுக்குத்தான் வாய் சும்மா இருக்காதே… எல்லா நட்புகளுக்கும் போன் செய்து, அவர்கள் கொடுத்த பல்வேறு ஐடியாக்களின்படி, தீபாவளி லேகியம் உள்பட அனைத்து பலகாரங்களையும் மாலைக்குள் பம்பரமாக செய்து முடித்தாள் அகிலா. மாலை வீடு திரும்பிய 2 குழந்தைகளும் டப்பாக்களை திறந்து பார்த்துவிட்டு, ‘ஐயோ’ என அலறியடித்து வெளியே ஓடிவிட்டன.
இரவு வீடு திரும்பிய ரகுவிடம், “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்… நானே தீபாவளி பலகாரங்களை செஞ்சுட்டேன். டேஸ்ட் பாருங்க!” என்றாள் அகிலா. டப்பாவை திறக்க ரகு முயன்றபோது, 2 குழந்தைகளும் விசிலடித்தபடி, ‘வேண்டாம்’ என தலையசைத்தது.
அதை பார்த்தபடி ஒரு டப்பாவை திறந்தபோது, அதில் தீபாவளி லேகியம் கறுப்பு தார்கலவையாக இருப்பதை கண்டு ரகு அதிர்ந்தான். மற்றதையும் திறந்தபோது, அனைத்து தின்பண்டங்களும் பெயர் குறிப்பிட முடியாத வகையில் உருக்குலைந்திருப்பதை கண்டு அலறி சத்தமிட்டான் ரகு.
இதைக் கேட்டு ஓடிவந்த அகிலாவிடம், “உனக்குத்தான் ஒழுங்காவே சமைக்க தெரியாதே… நான்தான் வந்து செஞ்சுக்கலாம்னுதானே சொன்னேனே… இப்போ, யார் யாரோ சொன்னதை கேட்டு, தீபாவளி பலகாரங்களை நாசப்படுத்திட்டியே? எல்லாம் வேஸ்ட்!” என ரகு கண்டபடி திட்டினான்.
அதை கேட்டு, “டோண்ட் ஒர்ரி! இதுக்கு ஏன் கோபப்படறே… ஆன்லைன்ல ஆர்டர் செஞ்சா, எல்லா தீபாவளி பலகாரங்களும் டிஸ்கவுண்ட்ல வீட்டுக்கு வந்துடும்!” என்றாள் அகிலா கூலாக.
இதை கேட்டு கடுப்பான ரகு, “போதுமே… ஆன்லைன்ல நீ டிஸ்கவுண்ட்ல ஆர்டர் பண்ண லட்சணம்! கோபத்துல ஏதாவது சொல்லிட போறேன். நீ ஆன்லைன்ல ஆர்டர் பண்ணின அயிட்டங்களை சாப்பிட முடியாமல், நான் ஒரு நாள் பட்டினி கிடந்து, தண்டம் அழுதது பத்தாதா? இனி நீ அதை பத்தி பேசினே, உன்னை பார்சல் பண்ணி, ஆன்லைன்ல உங்கம்மா வீட்டுக்கு அனுப்பிடுவேன். ஜாக்கிரதை!” என திட்டியபடி பைக்கில் கிளம்பி சென்றான்.
தீபாவளியன்று புது துணி உடுத்திய 2 குழந்தைகளும் ரகுவிடம் “ஹேப்பி தீபாவளி டாடி!” என்றன. அவர்களுக்கு வாழ்த்து சொல்லி, தான் கடையில் வாங்கிய தீபாவளி லேகியம், சுவையான இனிப்பு பலகாரங்களை ரகு வழங்கினான். அக்குழந்தைகள் கொரோனா மற்றும் அரசு கெடுபிடிகளால் கம்பி மத்தாப்பு மாத்திரம் கொளுத்தச் சென்றன.
பரிதாபமாக நின்ற அகிலாவிடம் “நீ வாங்கின ₹15 ஆயிரம் புடவையை கட்டிக்கலையா... ஏன் சோகமா இருக்கே?” என ரகு கேட்டான்.
“அதையேன் கேக்கறேள்… இன்னிக்கு காலையில கட்டிக்க எடுத்துப் பார்த்தா, பெரிசா கிழிஞ்சிருக்கு! எப்படி கட்டிக்கிறது?” - மூக்கை உறிஞ்சியபடி கூறினாள் அகிலா.
“அடி அசடே… இந்தமாதிரி நடக்கும்னு எனக்கு தெரியும். ஏன்னா, உங்களை மாதிரி ஆளுங்க ‘ரிச் லுக்’ மட்டும்தான் பார்ப்பீங்க. அதோட விலை, நல்ல துணியா, நீடிச்சு உழைக்குமானு பார்க்க மாட்டீங்க... வீட்டுல கட்டுவதற்கு பிரிக்கும்போது, கிழிஞ்சிருப்பதை பார்த்து கண்கலங்குவீங்க. இப்போ பைசாவும் போய் துணியும் கிழிஞ்சிருச்சே… என்ன பண்ணப்போற?” என ரகு இடித்துரைத்தான்.
“என்னண்ணா… சமயம் பார்த்து குத்திக் காட்றேளா?” என அகிலா கண்ணீர் வடித்தாள்.
“சரி, சரி… இதை எதிர்பார்த்துதான், எனக்கு டிரஸ் எடுக்கும்போது, உனக்கும் நல்ல புடவை எடுத்து, ஜாக்கெட்டும் புடவை ஓரமும் தைச்சு வெச்சுட்டேன். நீ போய் எடுத்து கட்டிக்கோ, ரெண்டு பேரும் தீபாவளி கொண்டலாம்!” என ரகு சிரித்தபடி கூறினான்.
திருமணத்துக்கு பிறகு, முதன்முறையாக கணவனிடம் வெட்கப்பட்டு, அறைக்குள் துள்ளி ஓடினாள் அகிலா. ‘என்ன… எனக்குதான் ஓவரா செலவாயிடுச்சு?!’ என முணுமுணுத்தபடி, தீபாவளி டிரஸ் போட்டு, மனைவியை வரவேற்க தயாரானான் ரகு. அங்கு பண்டிகை கொண்டாட்ட மகிழ்ச்சி பொங்கியது.
Leave a comment
Upload