வலையங்கம்
வலையங்கம்... -சலுகைகள் தரும் சவுக்கு!

20200415224159958.jpg

சலுகைகள் தரும் சவுக்கு!

நோய், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு இரண்டையுமே உலக நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

‘இனி கொரானாவுடன் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்’ என்று உலக சுகாதார மையமே அறிவித்துவிட்டது. மனித குலம் இது போன்ற பல தாக்குதல்களை சந்தித்து மீண்டிருக்கிறது.

இந்தியாவின் மனித சக்தி என்னவென்பதை இந்த நோய் தாக்குதலிலும் பாரதம் உலகிற்கு காட்டிவிட்டது. இந்தியர்கள் உடலில் இருந்த நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டு உலக மக்களே வியக்கிறார்கள். நம் உணவு பழக்கங்கள், கலாச்சாரம் சார்ந்த வாழ்வுமுறை, நம் சீதோஷ்ண நிலை... எல்லாமே, இந்தியாவை பல உயிரிழப்புக்களிலிருந்து இன்று பெரிதும் காத்திருக்கிறது.

இந்த நோய் தாக்குதல் துவங்கியபோது, இந்தியாவில் தான் மிகஅதிக பாதிப்புக்கள் இருக்கும் என்று உலக நாடுகள் கணித்தது!.ஆவலுடன் எதிர்பார்த்தது! ஆனால் நடந்ததே வேறு! இனி உலகத்தின் பார்வை இந்தியா மீது பெருமிதமான தொனியில் திரும்பும் என்பது சர்வ நிச்சயம்.

இந்தியாவைப் போன்ற பெரிய நாடு தொடர்ந்து ஊரடங்கை அமலில் வைத்திருக்க முடியாது. அது மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும். அதனால் படிப்படியாக பல தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

அடுத்து நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். ஒவ்வொரு இந்தியரையும் இந்த நோய், வெவ்வேறு வகையில் தாக்கியிருக்கிறது. இந்தியாவில் பல லட்சம் ஏழை எளியவர்கள், விவசாயிகள், புலம் பெயர்ந்தவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பது பெரும் கேள்விக் குறியாகிவிட்டது.

நடுத்தர வர்க்க, பல தனியார் நிறுவன ஊழியர்களும் வேலை இழந்து தவிக்கிறார்கள். பொதுவாக எல்லாத் துறைகளிலும் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதே சமயம், ஒவ்வொரு சிக்கலும், அதை நாம் திறம்பட விடுவிப்பதில் தான் இருக்கிறது. அதை கடந்த காலத்தில் செய்து காட்டியிருக்கிறோம். வாழ்க்கை என்பது, ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறந்தே வைத்திருப்பதாகும்.

துவண்டு போயிருக்கும் மனங்களை துடிப்புறச் செய்தாலே போதும். நாம் பல சவால்களை எதிர்கொள்ளலாம். இந்த நம்பிக்கையைத்தான் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்தார். அவர் அறிவித்த 20 லட்சம் கோடி பொருளாதார நிவாரணம் என்பது இந்திய மக்களுக்கு முதல் கட்ட நம்பிக்கை சுவாசக்காற்றை அளித்துள்ளது.

அடுத்த நாள் முதலே நிதியமைச்சரும் ஒதுக்கப்பட்ட நிதியின் புதிய திட்டங்களை அறிவிக்கத் தொடங்கினார். ஆனாலும் கேள்விக்குறியாக இருப்பது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலம்தான். இவர்களுக்காக 5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு புதிய கிஸான் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் 25,000 கோடி கடன் அளிக்கப்படவுள்ளது. இது தவிர ஏற்கெனவே கிஸான் கடன் அட்டைகள் வைத்துள்ள 2.5 கோடி விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி கடன் குறைந்த வட்டியில் அளிக்கப்படவுள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்புக்களும் இந்த நிவாரணங்களை வரவேற்றிருக்கிறது. எல்லோரையும் எல்லா சமயங்களிலும் திருப்திப் படுத்துவது என்பது எந்த அரசாலும் செய்ய முடியாது. எதிர்ப்புக்களும், சந்தேகங்களும் எழுவது இயற்கை. இந்த நிவாரணங்கள் செயல்படத் துவங்கும்போதுதான், அதன் சாதக, பாதகங்களை அறிந்து தவறுகளை களைய முடியும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்துவமாக விளையும் விவசாயப் பொருட்களை - உதாரணமாக தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கு, ஆந்திராவில் மிளகாய், மத்திய பிரதேசத்தில் மாம்பழம்...காஷ்மீரில் குங்குமப்பூ போன்ற பொருட்கள் அந்த மாநிலத்தில் மட்டுமே விளையக் கூடியது. இந்தப் பொருட்களை சர்வதேசப் படுத்த நிதியமைச்சர் செய்திருக்கும் அறிவிப்பு என்பது பல மாநிலங்களின் தொழில் வாய்ப்புக்களை பெருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த அறிவிப்புக்களில் மக்களுக்கு சாதகமான பல திட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அப்படி ஒரு திட்டம் இருப்பதாகவே தெரிவதில்லை. மேலும், திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் அதிகாரிகளின் மெத்தனத்தால் பல திட்டங்கள் பயனற்றுப் போகிறது.

மத்திய அரசு, இப்போது அறிவித்திருக்கும் நிவாரணங்களினால் ஏழை எளிய மக்கள் எப்படி பலனடைவார்கள் என்பதை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் மூலமாக சிறு, குறும்படங்கள் மூலமாக பாமர மக்களுக்கு இன்னும் தெளிவாக விளக்க வேண்டும். தகவல் அறிந்தால் மட்டுமே கல்வியறிவு இல்லாத மக்களால் தங்கள் உரிமைகளை நிதி நிறுவனங்களிடமிருந்து துணிச்சலோடு கேட்டுப் பெற முடியும். இந்த நிவாரணங்களின் பலன்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு சென்றடைய முடியும். பொருளாதார பலமே வளமான எதிர்காலத்தை காணும் நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கும்.

வரவேற்க வேண்டிய இத்தனை சலுகைகளை மத்திய அரசு அறிவித்த அதே நேரத்தில் தொழிலாளர்களை மிரட்டும் சவுக்கையும் தொழிலதிபர்கள் கையில் கொடுத்திருக்கிறது இந்தியாவில் சில மாநிலங்கள். உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்கள் தொழிலாளர் நலச்சட்டங்களில் பல சலுகைகளை நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.


இதில் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கிறது...

‘இன்றைய நிறுவனங்கள் தாற்காலிக தொழிலாளர்களைத்தான் வேலைக்கு எடுக்கிறது. இந்த தொழிலாளர் நலச்சட்டங்கள் என்பது நிரந்திர ஊழியர்களுக்குதான். அதனால் தளர்த்தப்பட்ட சலுகைகளினால் எந்த பாதிப்பும் இருக்காது. இப்போதிருக்கும் தொழிலாளர் நலச் சட்டம் என்பது தொழில் இலாகாவின் அதிகாரிகளுக்கு மட்டுமே லாபகரமாக இருக்கிறது’ என்பது ஒரு வாதம்.

இந்த சட்டங்கள் மட்டும்தான் தொழிலாளர்கள் கையிலிருந்த வலுவான ஒரே ஆயுதம். இதை வைத்துத்தான், உழைப்புக்கேற்ற ஊதியம், ஆரோக்யமான வேலைச் சூழல் போன்றவற்றை கோரி பெற முடியும்.

தொழிலாளர் நலச்சட்டங்கள் தான் தொழில் நிறுவனங்களை அச்சுறுத்துகிறது. அதனால் அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்லாமல் இருக்க அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம் என்பது இந்த தளர்வுகளை அமல்படுத்திய மாநிலங்களின் வாதம்.

நிரந்தர வேலை, உழைப்புக்கேற்ற ஊதிய உத்திரவாதம், உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு இவைகள் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கைகளை பெருமளவும் குறைக்கும். தன் மாநில மக்கள் பிழைப்பு தேடி பிற மாநிலங்களுக்கு செல்வதையே ஒவ்வொரு மாநிலமும் தங்களது அவமானமாக கருதவேண்டும். உள்ளூரில் வேலை இருந்தால் மக்கள் தங்கள் பூர்வகுடிகளை விட்டு ஏன் வேறு மாநிலங்களுக்கு ஓடப்போகிறார்கள்?

சென்னையில் கொரானா தொற்று அதிகமானதற்கு கோயம்பேடு சந்தையில் கூடிய கூட்டம் தான் என்பது கண்கூடு. அதில் பெரும்பாலும், கடலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து கூலி வேலை செய்ய கோயம்பேடு சந்தைக்கு வந்தவர்கள் அதிகம். மீண்டும் அவர்கள் எப்போது கோயம்பேட்டிற்கு வருவோம் என்றுதான் காத்திருக்கிறார்கள். காரணம் உள்ளூரில் அவர்களுக்கு வேலை இல்லை. விவசாயம் வெகுநாட்களாக படுத்துவிட்டது. அந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்பளிக்கும் தொழில் நிறுவனங்கள் இல்லை. அதனால் அவர்கள் சென்னை நோக்கி ஓடிவருகிறார்கள். இந்தியாவிலிருக்கும் பல மாநிலத் தொழிலாளர்களின் நிலையும் இதுதான்.

இப்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் சலுகைகள், மக்களின் வாழ்வாதாரங்களை தங்கள் இருப்பிடத்திலேயே பெறுவதற்கான நிரந்தர தீர்வுகளைக் காண வேண்டும். இதுதான் இந்திய கிராமங்களை பொருளாதாரத்தில் மேம்பட வைக்கும்.

தாற்காலிக தொழிலாளிகளை கொண்ட எந்த நிறுவனமுமே நிலைத்திருப்பதில்லை. இங்கே டாடா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை மட்டும் நியமிப்பதில்லை. அவர்களை தங்கள் நிறுவன விசுவாசிகளாகவும் மாற்றுகிறார்கள். ‘நீங்கள் நிறுவனத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களை நலனை கவனித்துக் கொள்கிறோம்’ - இதுதான் நிரந்தரமான, நீண்ட நாள் நிலைத்திருக்கும் தொழில் நிறுவனங்களின் தாரக மந்திரம்... அதனால் தான் இந்த நிறுவன ஊழியர்கள் வேறு வேலைகளைப் பற்றி சிந்திப்பதில்லை.

தங்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளை தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களை மிரட்டி, வேலை வாங்கும் ஒரு சவுக்காக பயன்படுத்திவிடக்கூடாது.

இந்த சோதனைக்காலத்தினை நாம் சாதனைகள் புரிய கிடைத்த ஒரு பெரிய வரமாகவே மத்திய மாநில அரசுகள் நினைக்க வேண்டும். இது போன்ற சுயநலமில்லாத தேசாபிமான தொழிலதிபர்களை அடையாளம் கண்டு அவர்களை வெகுவாக ஊக்குவிக்க வேண்டும். அப்போதே மலரும் நிஜமான நிவாரணம்!