சில தினங்களில் எம்.டி.யின் துணைவியார் திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் அவர்களும் அவரோடு காரில் வருவார். எம்.டி.யின் பணி முடிகிறவரை பொறுமையாகக் காத்திருப்பார். அவர் எப்போதும் அமைதி… அதிர்ந்து பேசத் தெரியாதவர். என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘‘வீட்டில் உங்க ஒய்ஃப், குழந்தைகள் நல்லா இருக்காங்களா?’’ என்று அன்புடன் விசாரிப்பார். விகடன் வெளியீட்டில் கர்நாடக இசை, இசைக் கலைஞர்கள் தொடர்பான புத்தகங்கள் வெளியாகும்போது, அவை தனக்கு வேண்டும் என்று சொல்லுவார். பப்ளிகேஷன் பிரிவுக்கு குறிப்பு அனுப்பி, அவர் கேட்ட புத்தகங்களை வாங்கி அவருக்கு அனுப்பி வைப்பேன்.
விகடன் வாசகர்களில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போது முடிந்த அளவு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் துவக்கப்பட்டதுதான் ‘விகடன் ரீடர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஃபார் மெடிகல் எய்ட்’. இந்த டிரஸ்ட் மூலம் ஏராளாமான ஏழைகள் மருத்துவ உதவி பெற்றிருக்கிறார்கள்; பெற்றும் வருகிறார்கள்.
மருத்துவ உதவி தவிர, கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளிடமிருந்து நிதியுதவி கோரி நிறையக் கடிதங்கள் வரும். அவற்றை எம்.டி. எனக்கு அனுப்புவார். சம்பந்தப்பட்ட மாணவ மாணவியர் வசிக்கும் ஊருக்கு நான் நேரில் சென்று அந்தக் குடும்பம் உண்மையிலேயே ஏழ்மையில் உள்ளதா என்று விசாரணை செய்து எம்.டி.க்கு குறிப்பு எழுதுவேன். நான் போக முடியாதபோது அருகாமை ஊர்களின் நிருபரை அனுப்பி விசாரணை அறிக்கை பெறப்படும். எம்.டி. அக்கடிதத்தில் ஒரு கணிசமான தொகையைக் குறிப்பிட்டுக் கையெழுத்திடுவார். அவர் உத்தரவின்படி அத்தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்ப நான் ஏற்பாடு செய்வேன்.
இது தவிர, விகடனில் முன்னர் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டோ, வறிய நிலையிலோ இருந்தால் அவர்களுக்குத் தொடர்ந்து மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்புவதும் நடந்தது.
ஒரு முறை ஓர் பெண்மணி எம்.டி.யைச் சந்திக்க வந்தார். அப்போது அவர் ஊரில் இல்லை. ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டேன்.
விகடன் அச்சகத்தில் முன்பு வேலை பார்த்த ஒருவரின் மனைவியாம் அவர். அந்த நபர் விகடனிலிருந்து ஓய்வு பெறும்போது அவருக்கு விகடன் தாத்தா படம் பொறித்த ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பெண்மணியின் கணவர் இறந்து விட்டாராம். மாமியாருடன் வாழ்ந்து வரும் அந்தப் பெண், கணவர் பாதுகாத்து வைத்திருந்த விகடன் தங்க மோதிரத்தைத் தொலைத்து விட்டதாகச் சொன்னார். மோதிரம் தொலைந்தது மாமியாருக்குத் தெரிந்தால், தன்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார் என்று கண்ணீர் விட்டு அழுதபடியே சொன்னார். மோதிரத்துக்குரிய தொகையைச் சிறுகச் சிறுகத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும், அதே மாதிரி விகடன் தாத்தா படம் பொறித்த ஒரு பவுன் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து தனக்கு வழங்குமாறும் கோரினார் அவர்.
அவர் சொன்னதை மனுவாக எழுதி வாங்கி, ‘‘எம்.டி. ஊரில் இல்லை. வந்ததும் தெரிவிக்கிறேன்!’’ என்று சொல்லி, அனுப்பினேன்.
எம்.டி. ஊரிலிருந்து வந்ததும் அப்பெண்மணியின் விண்ணப்பத்தைப் படித்தார். மனுதாரர் சொன்னது உண்மையா அல்லது பொய்யாக இருக்குமா என்றெல்லாம் யோசிப்பார் என நினைத்தேன். ஆனால், அவர் ‘‘உடனே ஒரு பவுன் மோதிரம் விகடன் தாத்தா உருவப் படத்தோடு செய்ய ஏற்பாடு செய்யுங்க!’’ என உத்தரவிட்டார். மோதிரம் தயாராகி வந்ததும் என்னிடம் கொடுத்து, ‘‘அந்தப் பெண்ணை வரவழைத்து மோதிரத்தைக் கொடுத்துடுங்கோ. இதுக்கான தொகையை அவர் கொடுக்க வேண்டியதில்லைன்னு சொல்லிடுங்கோ!’’ என்று தெரிவித்தார்.
தன் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவரின் குடும்பத்தவர் பொய் சொல்ல மாட்டார் என்கிற நம்பிக்கை. மேலும், அந்தக் குடும்பத்தவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை மறு வார்த்தை பேசாமல் நிவர்த்தி செய்ய முனைந்த அவரின் பரோபகார உள்ளம் என்னை நெகிழச் செய்தது.
தன் படப்பை விவசாயப் பண்ணையில் விளையும் விளைபொருட்களில் கொஞ்சத்தை வியாபாரிகளுக்கு எம்.டி. விற்பார். மீதத்தில், அரிசியை 20 கிலோ மூட்டைகளாகவும், உளுந்து, புளி, மிளகாய் போன்றவை தலா ஒரு கிலோ பாக்கெட்டுகளாகவும் பேக் செய்து, லாரியில் ஏற்றி, விகடன் ஆபீஸ் கோடவுனுக்கு அனுப்பி வைப்பார். அது எதற்கு?
(தொடரும்)
Leave a comment
Upload