தொடர்கள்
தொடர்கள்
மனசே! டேக் டைவர்ஷன் 3 "கவனி! கவனி !!" - மோகன் ஜி, [சித்திரங்கள் : தேவா]

2025010222205758.jpg

“ஏங்க! இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா?”

“சொல்லும்மா”

“முதல்ல நியூஸ் பேப்பர்ல இருந்து கண்ணை எடுத்துட்டு நான் சொல்றதைக் கேளுங்க”

“காது தானே கேட்க போகிறது? நீ சொல்லுடா செல்லம்!”

“இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து சரியா அஞ்சு மணிக்கு கிளம்பினேனா?...’’

‘‘உம்ம்’’

‘’பஸ் ஸ்டாப் கிட்ட வந்துட்டேன்…’’

“…உம்ம்”

“என் மொபைலை ஆபீஸ்லே வச்சிட்டு வந்துட்டேன்னு அப்பத்தான் தெரிஞ்சது..’’

“உம்ம்”

“உடனே விடுவிடுன்னு ஆபீஸ்க்கு வேகமாக திரும்பிப் போனேனா?..”

“….உம்ம்”

“........”

“….உம்ம்”

“……”

“….உம்ம்”

“….”

“.....உம்ம்”

“ஹலோ மிஸ்டர் ரகு!, கொஞ்சம் உம்ம் கொட்டுறதை நிறுத்திக்கிறீங்களா? நான் பேசறது நிறுத்தியே ரெண்டு நிமிஷம் ஆச்சு, வேஸ்ட்டு கணவா!”

இந்த கணவர் ரகுவின் லட்சணத்தில் தான் நமக்கு சொல்லப்படுவதை நாம் கேட்கிறோம்.

நமக்கு சொல்வதில் இருக்கும் ஆர்வம் கேட்பதில் இருப்பதில்லை .

அப்படியே கேட்டுவிட்டாலும், உன்னிப்பாக கவனத்துடன் கேட்பதில்லை என்பதே நிஜம்.

நமக்கு சொல்லப்படுவதை உற்று கவனத்துடன் கேட்பதென்பது நமது வெற்றிக்கு வழிவகுப்பதாகும்.

பிறருடைய மதிப்பில் உயர்ந்திருப்பதும் நம் செயல்களை சரிவர செய்வதும் கவனத்துடன் கேட்பதாலேயே சாத்தியம்.

கேட்பதற்கும் கவனிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

பேசப்படுவதை நம் காதுகள் கேட்கின்றன. காதுகளோடு நம் புத்தியும் சேரும்போது கவனித்தல் உண்டாகிறது. கேட்பது புறத்தேயும் கவனித்தல் அகத்தேயும் நிகழ்பவை.

சொல்லப்படுவதை கேட்பது மட்டுமின்றி, அந்தப் பேச்சு எதைச் சொல்லவருகிறது என்பதையும் ஆழப் புரிந்து கொள்ளும் எத்தனமே கவனித்தல் திறம் ஆகும்.

மனோவியல் அறிஞர்கள் இந்த கவனித்தல் திறத்தை Listening Skills என்ற உயரிய பயில்திறமாகவே பகுத்து வைத்திருக்கிறார்கள்.

நாம் பேசுவதற்கு வாயை ஒன்றாக வைத்த இயற்கை, நாம் கேட்பதற்கும் கவனிப்பதற்கும் இரண்டிரண்டு காதுகளையும் கண்களையும் அல்லவா தந்திருக்கிறது?!

கவனித்தல் என்ற வார்த்தைக்கு தமிழில் பல பொருள்கள் உருவாகிவிட்டன.

உதாரணமாக, “வெளியே வாய்யா! உன்னை ‘கவனி’ச்சுக்கிறேன்!” என்று சொன்னால் அடிதடி உத்திரவாதம்.

சார்! நம்மளையும் கொஞ்சம் ‘கவனி’ச்சுட்டு போ சார்! “ என்றபடி யாரேனும் தலையைச் சொறிந்தால் மாமூல் கேட்கப்படுகிறது என்று அறியவும்!

இங்கு நாம் பேசப்போவது, சொல்லப்படுவதை உற்று கேட்டல் அல்லது காது கொடுத்து கேட்டல் என்ற பொருளில் மட்டும்தான்!

மிகவும் முக்கியம் வாய்ந்த நமது தொடர்பு கொள்ளல் திறம் (Communication Skills) என்னும் முறைமையில், முக்கியமான அங்கமாக இருப்பது இந்த கவனித்தல் (Listening) ஆகும்.

தொடர்பு கொள்ளல் என வரும்போது, ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.

நாம் அழகாக எழுதுகிறோம். திறம்பட பேசுகிறோம். ஆழ்ந்து படிக்கிறோம். பிறர் சொல்வதைக் கேட்கிறோம்.

ஆனால், நன்கு கவனிக்கிறோமோ என்று கேட்டால், பெரும்பாலும் இல்லை என்பதே உண்மை.

ஏன் அப்படி என்ற கேள்வி எழும். நம் இளவயதிலேயே எழுத, படிக்க, பேச மற்றும் கேட்க என்று கற்பிக்கப்பட்டோம் அல்லவா? ஆனால் எப்போதாவது ஊன்றி கவனிப்பதைக் கற்றுக் கொண்டோமா? இல்லை அல்லவா! அதுதான் நாம் சரிவர காது கொடுத்து கவனத்துடன் கேட்பதில்லை போலும்!

கவனிக்கும் திறன் நம் விடாமுயற்சியால் நாமே கற்றுக் கொள்ளவேண்டிய அரிய கலையாகும்.

கவனித்தலை எப்படி மேற்கொள்வது?

  • நம்முடன் உரையாடுபவர்களை நன்கு கவனியுங்கள்.
  • பிறர் பேசுகையில் உன்னிப்பாகக் கேட்பதும், அவரது அங்க அசைவுகள் வெளிப்படுத்தும் உடல் மொழியின் அர்த்தங்களையும் ஒருசேரக் கூர்ந்து பார்ப்பதுமாக நம் கவனித்தல் இருக்க வேண்டும்.
  • பேசப்படுவதை எந்த முன் முடிவுகளும் இன்றி கேட்க வேண்டும்.
  • பேசுபவரின் கண்களை நேராக பார்த்து கவனித்தல் வேண்டும்.( Eye Contact)
  • ஆர்வத்துடன் கவனிக்க வேண்டும்.
  • அக்கறையுடன் கவனிக்க வேண்டும்
  • தேவைப்பட்டால் குறிப்புகளும் கூட எடுத்துக் கொள்ளலாம்.
  • பிறர் பேசுகையில் நடுநடுவே குறுக்கிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • எதைபற்றி சொல்லப்படுகிறது என்பதைப் பற்றி எந்த ஊகமும் செய்யாமல் கவனிக்க வேண்டும்.
  • நம் கவனம் முழுவதும் பேச்சைக் கேட்பதில் தான் இருக்க வேண்டும்.
  • அங்குமிங்கும் பராக்கு பார்த்துக்கொண்டு நம் கவனத்தை மாற்றக் கூடாது.
  • நம் முறை வரும்போது பதிலாக நாம் என்ன கூறலாம்?’ என்று ஆலோசித்தபடி பேச்சைக் கேட்கக் கூடாது.

‘பேச்சு என்பது வெள்ளி!

மௌனம் என்பதோ தங்கம்!’ என்பார்கள்.

இவற்றுடன் நாம்

‘கவனித்தல் என்பது வைரம்!!’ என்று சேர்க்கும் வகைக்கு கவனித்தல் திறம் மிக முக்கியமானது.

பேசுவதை நாம் காது கொடுத்து கேட்பது, பேசுபவருக்கு தரும் கௌரவமும் மகிழ்ச்சியும் ஆகும். நாம் பேசுவது கவனிக்கப்படுகிறது என்பது ஒரு உன்னத உணர்வைத் தரும்.

ஒரு ஊழியர் தன் பிரச்சினைக்கு தீர்வு காண மேலதிகாரியிடம் பேசுவதற்கு முன்பு, தன் தொழிற்சங்க பிரதிநிதியுடன் பேசுவதை பார்க்கிறோம்.

ஊழியர் சொல்வதை மேலதிகாரி காது கொடுத்து கேட்காமல் போகலாம்.

ஆனால், தொழிற்சங்க பிரதிநிதியோ ஊன்றி காதுகொடுத்து கேட்பது ஒன்றாலேயே அந்த ஊழியருக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கிறார். மேற்கொண்டு அணுக வேண்டியது பற்றிய ஆலோசனையையும் சொல்கிறார் அல்லவா?

பிறர் நம்மிடம் பேசுகையில் செய்யக்கூடாதவை:-

  • ஒருவர் பேசும்போது நம் கவனத்தை வேறு எங்கோ வைத்திருத்தல்;
  • சொல்லப்படுவதை உதாசீனம் செய்தல்;20250102222548665.jpg
  • ஊன்றிக் கேட்பது போன்று பாசாங்கு செய்தல்;
  • பிறர் உரையாடலை சரிவர கவனித்துக் கேட்காமல் இருத்தல் ஆகியவை கூடாது. இவை உறவுகளிலும், தொழில் மற்றும் அலுவலக செயல்பாடுகளிலும் பிரச்சனைகளை ஏற்படுத்த வல்லது.

முன்பே சொன்னது போல கவனித்தல் ஒரு அத்தியாவசியமான கலை மட்டுமன்று.

அது நம் பண்பாட்டையும் இனிய சுபாவத்தையும் அக்கறையையும் காட்டும் செயல்பாடும் ஆகும். நம் நட்பு வட்டத்தையும் தொடர்புகளையும் பெருக்கிக் கொள்வதற்கான உபாயமும் கவனித்தலே ஆகும்.

நமக்கு பிடித்த நல்ல மேடைப்பேச்சு, சிறந்த சங்கீதம் போன்றவற்றை கேட்கையில் கொள்ளும் ஈடுபாட்டைப் போன்றே, பிறர் பேசுவதைக் கேட்பதையும் உற்சாகத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

பேசுகின்ற பொருளை மட்டுமல்ல, அதில் பேசாமல் விட்ட உள்ளீடான அர்த்தங்களையும் ஊன்றி கவனித்தலால் அறிந்து கொள்ளலாம்.

பேசுபவரின் மனவோட்டம், உணர்வுகள், சார்பு நிலை போன்றவற்றையும் கவனிப்பதால் அறிந்து கொள்ளலாம்.

நாம் சுகவீனமாக இருக்கும்போது, நம் உடல்நிலை உபாதைகள் பற்றி மருத்துவரிடம் கூறுகின்றோம். அவரோ, நாம் சொல்வதை ஊன்றி கவனிக்காமல், ஏதோ மருந்தை எழுதிக் கொடுத்தால் என்ன ஆகும்?!

கவனத்துடன் கூடிய கருத்து பரிமாற்றங்களே நாடாளுபவர்க்கும், ஒரே கூரையின்கீழ் சேர்ந்து வசிப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். பிறரை கவனிக்காமல் தவறாக புரிந்து கொண்டு, விரோதம் பாராட்டப்படுவதை அனுதினமும் பார்த்து வருகிறோம் அல்லவா?

கவனித்தலுக்கு சில இடையூறுகளும் ஏற்படுவதுண்டு. அவை இவை தான்:-

  • பேசுபவருக்கும் நமக்கும் இடைப்பட்ட தூரம்,
  • அதிக சத்தம் உள்ள சூழ்நிலை,
  • தானே எதையோ ஊகித்துக் கொள்ளல்; சொல்பவரோ கேட்பவரோ மிக உயர்ந்த நிலையில் இருப்பது;
  • ஒருவரின் அலட்சிய மனப்போக்கு;
  • வயது மற்றும் உறவு நிலை;
  • இயற்கையாக அமைந்த கவனமற்ற தன்மை ஆகியவை கவனித்தலுக்கு இடையூறுகள் ஆகும்.
  • சரிவர காதுகேளாத குறைபாடு,
  • ஒருவரின் மொழியறிவு,
  • திறந்த மனத்துடன் உரையாடலில் ஈடுபடாமல் இருத்தல்
  • ஒருவரின் அகந்தை மற்றும் தன்முனைப்பு போன்றவைகளும் கவனிக்கும் திறத்தை பாதிப்பவை.20250102222721558.jpg

ஒரு உரையாடலில், சொல்பவருக்கு இருக்கும் பொறுப்பு கேட்பவருக்கு உண்டு என்பதால் கவனித்துக் கேட்டல் அவசியம்.

உரையாடத் தக்க சூழலும்,நேருக்கு நேர் உரையாடுவதும், ஆரோக்கியமான மனநிலையுடன் சம்பாஷிப்பதும், தேவைப்படும்போது விளக்கம் கேட்டு தெளிவுபடுதலும் கவனித்தலுக்கு சிறந்த வழிமுறைகள் ஆகும்.

ஒருவர் பேசுகின்றபோது, அவருடைய பேச்சு வன்மை மற்றும் மொழியறிவு ஆகியவற்றைக் காட்டிலும், பேசப்படும் பொருளின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

எதிலும் தொடர்ந்து கவனம் வைக்க முடியாத கவனச்சிதறல் நம் மனத்தின் இயல்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சிதறும் கவனத்தை இழுத்துப் பிடித்து, சொல்வதை கேட்பதில் கவனத்தை ஊன்றி கேட்கவேண்டும்.

இது பழக்கத்தினால் கை வரப்பெறும் திறமாக அமையும்.

கவனிப்பதாக பாசாங்கு செய்து பேசுபவரின் கருத்தை கவர் கவரும் முயற்சியில் ஏதும் லாபம் இல்லை. பேச்சின் சாரமே நாம் கொள்ளத்தக்கது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் பேச்சு மற்றும் கவனிக்கும் முறைகளில் வித்தியாசங்கள் இருப்பதாக அறிஞர்கள் பட்டியலிடுகிறார்கள்.

  • ஆண்கள் பொது விஷயங்களிலும், பெண்கள் அன்றாட நிகழ்வுகளிலும் அதிகம் கவனம் கொள்கிறார்களாம்.
  • ஆண்களைவிட பெண்களே விபரங்களின்மேல் அதிகம் கவனம் செலுத்துகிறார்களாம். உரையாடலின் இடையே, ஆண்களைப் போல பெண்களுக்கு மௌனம் அதிக ஏற்புடையது இல்லையாம்.
  • பேசப்படும் வார்த்தைகளில் ஆண்கள் அதிக கவனம் வைப்பதாயும், பெண்களோ உடல் மொழி மற்றும் பேச்சில் கூறப்படாத உள்ளீட்டிலும் தன் கவனத்தை அதிகம் வைக்கிறார்களாம்.

ஆகவே சொந்தங்களே! கவனம் வைப்பதில் செலுத்துவதில் மிகுந்த கவனமாக இருப்போம். வாழ்க்கையையும் உறவுகளையும் அழகாக அமைத்துக் கொள்வோம்.