பெண்களின் உடல் நலம் குறித்த சிந்தனைகளும் , விழிப்புணர்வும் இக்காலத்தில் பெருகி வருகிறது.
நம் வீடுகளில் நம் அம்மா ,மனைவி ,மகள் என்ற மூன்று தலைமுறையின் வாழ்க்கை முறையை நாம் பார்க்கிறோம் .உடலுழைப்பைத் தந்த முதல் தலைமுறை இன்றும் ஆரோக்கியமாக இருப்பதும் ,அடுத்த தலைமுறைகள் பலவித வியாதிகளுடன் வாழ்வதும் பார்க்கிறோம் .
இந்த பிட்னஸ் சிறப்பிதழுக்காக முதலில் நாம் சந்தித்தது 85 வயது நிறைந்த மூதாட்டிகள் !
ராதா வெங்கடேசன்(போரூர் ) ஜெயலட்சுமி (வந்தவாசி) மற்றும் வித்யாவதி(கேளம்பாக்கம்
“அந்நாட்களில் சிறுவயது முதலே காலையில் கஞ்சியோ கேப்பங்கூழோ குடித்துவிட்டு நாற்று நடுதல், களை எடுத்தல் உள்பட பல்வேறு வயல் வேலைகள், காய்கறிகள், பாத்திரம் கழுவுதல், கைகளால் துணி துவைத்தல், கிணற்றில் ராட்டினக் கயிறு மூலம் தண்ணீர் இறைத்தல், விறகு, சுள்ளிகளுடன் மண் அடுப்பில் சமைத்தல் மாடுகளை கழுவி பால் கறத்தல், சாணி அள்ளுதல், அம்மியில் மசாலா அரைத்தல், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தல் என பல்வேறு வீட்டுவேலைகளை நேரம், கால நேரம் பார்க்காமல் உழைப்போம்.
. தலைவலி, காய்ச்சல் வந்தால் கை வைத்தியம்தான். விசேஷ நாட்களில் மட்டுமே பலகாரங்கள்! குழந்தைகளை வளர்ப்பதில்,நாங்கள் முழு கவனம் செலுத்தினோம்.. எங்களின் வேலை இருமடங்காக கூடியும் சலிப்பின்றி வேலை பார்த்தோம். எல்லாம் 50 வயதுவரை. குழந்தைகள் வளர்ந்து சம்பாதிக்க துவங்கியது. வசதிவாய்ப்புகள் பெருகி, வீட்டுக்குள் மிக்சி, கிரைண்டர், காஸ் அடுப்பு மின்விசிறி, டியூப்லைட் போன்ற பொருட்கள் குடியேறின.
பின்னர் குழந்தைகளுக்கு திருமணமாகி மருமகள், மாப்பிள்ளைகள் வந்ததும் இருவரும் வேலைக்கு சென்று பேரன், பேத்திகள் பிறந்து வளர்ந்ததும் கார், பைக், எலக்ட்ரிக் ஸ்டவ், கம்ப்யூட்டர், லேப்டாப் என பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வீட்டுக்குள் வந்தன.
ஒவ்வொரு வீட்டு வேலைக்கும் தனித்தனியே ஆட்கள். ஆனால், இன்றுவரை எங்களுக்கு ரத்தக் கொதிப்பு வந்ததில்லை. ஆனால், சர்க்கரையின் கூடி, குறைவதுண்டு. எனினும் காய்கறி, கீரை, பழங்களுடன் டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகள் சாப்பிட்டு, தடுமாற்ற நடையுடன் தனித்து செயல்படுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.இப்போதும் யாருக்கும் தொந்திரவு தராத அளவுக்கு எங்கள் உடல்நலம் இருக்கிறது !”என்கிறார்கள்.
பின்னர் நாம் சந்தித்து அடுத்த தலைமுறையினர் , ஐம்பது வயதை நெருங்குபவர்கள்
புவனா கிரி(கொடுங்கையூர் )விஜயா(பெங்களூர்) , ஹேமா மணி (வியாசர்பாடி)
, “நாங்களும் முதலில் ஆட்டுக்கல்லில் மாவரைப்பது, அம்மியில் மிளகாய் அரைத்து, என்று வீட்டு வேலைகளை செய்தோம் . பின்னர் துணி துவைக்க , பாத்திரம் கழுவ , வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய ஆட்களை வைத்துக் கொண்டோம். சமைப்பது, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பலகாரங்கள் செய்வது, துணிகளை மடித்து வைப்பது மட்டுமே எங்களின் வேலையாக மாறியது. நாங்களும் வேலைக்குச் செல்வதால் , வேலைக்கு ஆள் வைப்பது அவசியமானது
பிள்ளைகளுக்குத் திருமணமாகி அவர்கள் வேலைக்கு சென்றதும், எங்களின் பேரன், பேத்திகளின் வளர்ப்பு எங்கள் பொறுப்பானது காலையில் சமைத்த உணவை இரவு வரை சாப்பிட வேண்டியிருந்ததால், எங்களின் உடல்நலம் 50 வயதிலேயே பல்வேறு வகைகளில் பாதிக்கத் துவங்கியது. மகன்கள், மகள்கள் தனிக்குடித்தனம் துவங்கினால் ., கணவருடன் தனித்து வாழும் போது சமையல், துணி துவைத்தல் உள்பட பல்வேறு பணிகளை உடல்நல பாதிப்பு டன் செய்து வருகிறோம். இப்போதுதான் எங்களின் தாய் 85 வயதிலும் தனியே சமைத்து சாப்பிட்டு, ஓரளவு ஆரோக்கியத்துடன் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சர்யம் அடைகிறோம் !” என்று தெரிவித்தனர்.
இறுதியாக 25 முதல் 30 வயது வரையிலான மூன்றாம் தலைமுறையை சந்தித்தோம்
அருணா, காயத்ரி, சஞ்சனா, நிகிலா (சென்னை )
“நாங்கள் சிறுவயது முதலே பெற்றோர் செல்லம் கொடுத்து, சமைப்பது உள்பட எந்தவொரு வீட்டு வேலைகளையும் செய்ய விடுவதில்லை. அல்லது, அவர்கள் வேலை சொன்னாலும், நாங்கள் மறுத்துவிடுவோம். எனினும், ஒருசில சமையல் வேலைகளை தாய் நைசாக பேசி கற்று தந்துவிடுவாள். நாங்கள் உப்பு, புளி, காரமின்றி சமைத்து கொடுத்தாலும், பெற்றோர் ‘ஆஹா, ஓஹோ’ என்பர்.
பிற வேலைகள் நோ… நோ! என்ன, எல்லாவற்றுக்கும் தான் மெஷின் இருக்கே. …
படித்து வேலைக்கு சென்றதும் , திருமணமான பின் மாப்பிள்ளைக்கு கண்டிஷனுடன் திருமணம்…
இருவரும் வேலைக்கு செல்வதால், காலையில் பிரேக்பாஸ்ட் பிரெட், ஜாம்… 2 வேளை ஏதேனும் ஜூஸ்… லஞ்ச் வேகவைத்த காய்கறி சாலட்… நைட் டின்னர் எண்ணெய் காணாத 2 சப்பாத்தி, அல்லது ஒரு கரண்டி தயிர்சாதம்… ஏன்னா, எங்க ரெண்டு பேருக்குமே அதிக எடை கூடிடுச்சே… டாக்டர் அட்வைஸ்!
‘நான் சமைத்தால் , நீ பாத்திரத்தை கழுவு… நான் வாஷிங் மெஷினில் துணி துவைத்தால், நீ துணிகளை காயவைத்து, அவரவர் துணிகளை தனித்தனியே மடித்து வை’ என்று கணவருடன் வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டியிருக்கு.
உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏறிய உடல் எடையை ஜிம்முக்கு சென்று குறைக்கணும். எங்களுக்கு பிபீ, ஷுகர் எல்லாம் இப்பவே அதிகமாகி, சத்தான சாப்பாட்டுக்கு பதிலாக மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டியிருக்கு.
இப்போது நினைக்கும் பொது ‘நமக்கு ஏண்டா பெற்றோர் செல்லம் கொடுத்து, எந்தவொரு வேலையும் செய்ய விடாமல் பண்ணிட்டாங்க. அவங்க மட்டும் இந்த வயசிலும் நேரம், காலம் பார்க்காமல் கடுமையா உழைக்க முடியுது’ என்ற ஏக்கம்தான் ஏற்படுது!” என்கிறார்கள்
இதுதான் இன்றைய யதார்த்தம் . இளந் தலைமுறையினர் உடல் உழைப்பின் முக்கியத்துவத்தை மறந்து இருப்பதால் பல வியாதிகளுக்கு ஆளாகிறார்கள்.
உடல்நலத்தை, ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு , எதை சாதிக்க இப்படி ஓடுகிறார்கள் நம் இளைய தலைமுறை ??
Leave a comment
Upload