தொடர்கள்
வலையங்கம்
வாய் சொல்லில் வீரரடி

2024031917563001.jpg

பெண் உரிமை பற்றி எல்லா அரசியல் கட்சிகளும் வாய் கிழிய பேசுவது வழக்கம்தான். ஆனால், பெண்களுக்கான செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. அதற்கு உதாரணம் இந்த தேர்தல்.

தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் மொத்தம் 39 தொகுதிகளில் இறுதியாக 950 பேர்கள் போட்டி போடுகிறார்கள். இது 874 பேர்கள் ஆண்கள், 76 பேர்கள் மட்டுமே பெண்கள்.

பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற மசோதா பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி அரசியல் கட்சிகள் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், எந்த அரசியல் கட்சியிலும் இதனை செயல்படுத்தவில்லை. உதாரணமாக திமுக சார்பில் 21 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். 33 சதவீதம் கணக்குப்படி குறைந்தபட்சம் ஏழு பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன் ராணி ஸ்ரீகுமார் என்று மூன்று பேர்கள் மட்டுமே திமுகவில் பெண் வேட்பாளர்கள். அதிமுக கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஜெயலலிதா என்ற ஆளுமை மிக்க தலைவியின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு இயக்கம் ஐந்து முறை முதல்வராக ஜெயலலிதா இருந்திருக்கிறார். இந்த மாதிரி பாராளுமன்ற தேர்தலில் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டாலும் திருநெல்வேலி தொகுதியில் ஜான்சி ராணி என்ற ஒரே ஒரு பெண் வேட்பாளர் தான். 33 தொகுதிக்கு 33 சதவீத கணக்குப்படி 10 பெண் வேட்பாளர்களை அதிமுக நிறுத்தி இருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அது 10 தொகுதியில் போட்டி போடுகிறது. குறைந்தபட்சம் மூன்று பெண் வேட்பாளர்களை அது நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால், கரூரில் ஜோதிமணி மயிலாடுதுறையில் சுதா என்று இரண்டு பெண் வேட்பாளர்கள் தான்.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆளும் பாரதிய ஜனதா பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை நாங்கள் தான் நிறைவேற்றி இருக்கிறோம் பாஜக. பெண்களுக்கான ஆட்சி இதுவரை யாரும் செய்யாததை நாங்கள் செய்திருக்கிறோம் என்று பெருமை பேசுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்து 24 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டி போடுகிறது. குறைந்தபட்சம் 8 பெண் வேட்பாளர்களை அவர்கள் நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால், தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன், விருதுநகரில் ராதிகா சரத்குமார், சிதம்பரத்தில் கார்த்திகாயினி என்று மூன்று பெண் வேட்பாளர்கள் தான்.

அதே சமயம் நாம் தமிழர் கட்சி இதுவரை போட்டி போட்ட எல்லா தேர்தல்களிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கியது. அதன்படி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 20 இடங்களில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தி இருக்கிறது. பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் பெண்கள் பற்றி பேசுவதெல்லாம் வெறும் வெற்று கோஷம் வாய்ச்சொல் வீரர்கள் என்பதற்கு இந்த வேட்பாளர் பட்டியல் ஒரு உதாரணம்.