தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - சேவை மனப்பான்மையுடன் .....!

2023011017370794.jpg

முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த மருத்துவர்கள் 19 பேர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களுக்குப் போதிய வசதிகள் இல்லை என்று கூறி அங்கு தாங்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மருத்துவ மேற்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசு அதிகம் செலவு செய்கிறது அதற்குப் பிரதிபலனாக மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் சேவை மனப்பான்மையுடன் இந்த சமுதாயத்துக்கு சேவை புரிய வேண்டும் என்பதற்காகத்தான் இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையே விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை முதுநிலை மருத்துவர்கள் இலவசமாக செய்யவில்லை ஊதியம் பெற்றுக் கொண்டுதான் செய்கின்றனர். ஏழை மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில் தங்களது படிப்புக்கேற்ற வசதி வாய்ப்புகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை என்று கூறி அங்கு பணியாற்ற முடியாது என மருத்துவர்கள் மனுதாரர்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வரும் பத்தாம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இப்படி ஒரு காரணத்தை சொல்லி மருத்துவர்கள் வழக்கு போட்டதற்கு உண்மையில் வெட்கி தலை குனிய வேண்டும்.மருத்துவர்களை பொதுமக்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கக் கூடிய நிலையில் நான் பணி செய்ய மாட்டேன் என்று மருத்துவர்கள் சொல்வது சேவை மனப்பான்மையும் தாண்டி அவர்களின் வர்த்தக நோக்கத்தை தான் வெளிப்படுத்துகிறது. நீதிபதிக்கு இருக்கும் சமூக அக்கறை வழக்கு போட்டவர்களுக்கு இல்லாமல் போனது வேதனைக்குரிய விஷயம்.