தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம் -- ஆர் . ரங்கராஜ்

20221116192813995.jpg

திருக்காரிக்கரை ஊருக்கு வடகிழக்கே இராமகிரி மலையின் அடிவாரத்தில், ஒரே திருச்சுற்றுக்குள் திருவாரிக்கரை பிள்ளையார், திருக்காரிக்கரை உடைய நாயனார் திருப்பள்ளி நாச்சியார் ஆகியோருக்குத் தனித்த தனியாக மூன்று கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

திருப்பள்ளி நாச்சியார்

இக்கோயில் கி.பி. 1436 ஆம் ஆண்டில் அய்யலுப்பி கடையார் மகனார் சக்கரசர் என்பவரால் கட்டப்பட்டு அதில் திருப்பள்ளி நாச்சியார் சிலையும் செய்து வைக்கப்பட்டது. மேலும் திருவாலீஸ்வரமுடையார் கோயிலுக்கும். திருப்பள்ளி நாச்சியார் கோயிலுக்கும் இரண்டு திருக்கதவுகள் இக்காலத்தில்தான் செய்தளிக்கப்பட்டது, என்று கூறுகின்றனர் சி. வீரராகவன் - மங்கையர்கரசி, தொல்லியல் ஆய்வாளர்கள், விழுப்புரம்.

கூவத்துப் பெருந்தச்சன் இட்ட ஏறு

"கூவம் என்ற ஊரைச் சேர்ந்த சாமுண்டி என்பவரின் மகன் கூவத்துப் பெருந்தச்சன். இவன் கனவில் இறைவன் தோன்றி, தனக்கு ஏறு (காளை) ஒன்று செய்தளிக்குமாறு கூறி இத்தச்சன் நந்தி ஒன்று. செய்து இக்கோயிலுக்கு அளித்துள்ளான். கோயிலுக்கு மேற்குப் புறத்தில் உள்ள குளத்தின் படியில் அமர்ந்த நிலையில் உள்ள நந்திதான் அது. இந்த நந்தியின் முதுகில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுதான் இச்செய்தியைக் கூறுகிறது. ஸ்ரீபரமேஸ்வரன் கனவிலே தோன்றி ஏறு இடு - என்று கூறியதாகக் கூறும் இக்கல்வெட்டு கி.பி. 9, 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. காலத்தைக் கணிக்குமளவிற்குக் கல்வெட்டுடன் கூடிய ஒரே நந்தி இது என்று கொள்ளலாம்."

சோழரும், யாதவராயரும்

ஒரு கல்வெட்டு வீரராட்சன், காஞ்சிபுர பரமேஸ்வரன், வீரநுளம்பதுரை யரைசன் என்னும் பட்டப் பெயர்களை மூன்றாம் குலோத்துங்கன் கொண்டிருந்தான் என்னும் புதிய செய்தியை அளிக்கிறது. இக்கல்வெட்டு குறிக்கும் காஞ்சிபுர பரமேஸ்வரன் என்னும் பட்ட பெயர், சில காலம் தெலுங்கு சோழர்களிடமிருந்த காஞ்சியை இவன் வெற்றி கொண்ட நிகழ்ச்சியைத் தெரிவிக்கிறது.

மூன்றாம் குலோத்துங்கனின் காஞ்சிபுர வெற்றி எந்த ஆண்டில் நிகழ்ந்தது என்பது குறித்துக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. காஞ்சியில் காணப்படும் இம்மன்னனின் 13ஆம் ஆட்சி யாண்டு (கி.பி.1192) கல்வெட்டு ஒன்று இவன் இங்கு வீராபிஷேகம், விஜயாபிஷேகம் செய்துகொண்டதைக் கூறுகிறது. குறிக்கிறது. ஆனால் திரு. நீல கண்ட சாஸ்திரி அவர்கள், இம்மன்னனின் காஞ்சிபுர வெற்றி இவனது 29வது ஆட்சியாண்டுக் கல்வெட்டில்தான் குறிக்கப்படுகிறது என்பதைக் கொண்டு, மேற்கூறிய காஞ்சி கல்வெட்டு இவனது 30-வது ஆட்சியாண்டைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், கல்வெட்டு விட்டியவன் 30 என்பதற்குப் பதிலாக 13 என்று எண்களை மாற்றிப் பொறித்துவிட்டான் என்றும் கூறி, இந்நிகழ்ச்சி இவனது 24வது ஆட்சி யாண்டில்தான் (கி.பி. 1202) நடைபெற்றிருக்க வேண்டும் என கூறுகிறார்.

திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இம்மன்னனின் 19ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இவன் வடமன்னரை வென்று கச்சி புகுந்து கப்பமும் பெற்றான் என்று கூறுவதைக் கொண்டு, இப்போர் கி.பி. 1194க்கும், 1197க்கும் இடையில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஆனால் இவ்வூரில் காணப்படும் இம்மன்னனின் 15ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1194) கல்வெட்டு இவனின் காஞ்சிபுர வெற்றியைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. எனவே. இந்நிகழ்ச்சி கி.பி. 1194 ஆம் ஆண்டிற்கு முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும். மேலும் கி.பி. 1192ல் கடப்பை மாவட்டத்தில் உள்ள மகாராஜபாடி நாட்டை வல்லுரபுரத்தி லிருந்து ஆண்டுக்கொண்டிருந்த புஜபல வீர நல்ல சித்தன தேவ சோழ மாகராசன் என்னும் தெலுங்குச் சோழன் காஞ்சியிலிருந்துதான் கப்பம் வாங்கியதாகப் பெருமையுடன் கூறிக்கொள்கிறான். ஆகவே மூன்றாம் குலோத்துங்கன்காஞ்சியை, கி.பி. 1192ஆம் ஆண்டில்தான் (13ஆம் ஆட்சியாண்டில்) வென்றிருக்க வேண்டும்.

யாதவராயர்

"திருக்காளத்தியைத் தலைநகராகக் கொண்டு சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக ஆட்சி புரிந்து யாதவராயர்கள் இக் கோயிலுக்குத் தானங்கள் கொடுத்துள்ளனர். மூன்றாம் குலோத்துங்கனின் 32 (கி.பி. 1209) ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்கள் இரண்டில் யாதவராயனான வீர நரசிங்கதேவன் என்பவன் குறிக்கப்படுகிறான். இவை இவனுக்குச் சசிகுலசாளுக்கி, தனி நின்று வென்ற வீர நரசிங்கன், கரவாள பைரவன், ஸ்ரீ காளத்திய பாதாராதகன், கணுப்பாரபுரவர தீஸ்வரன் என்னும் பட்டப்பெயர்கள் இருந்ததைத் தெரிவிக்கின்றன."

"மூன்றாம் இராஜராஜனின் 5 மற்றும் 8ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களிலும் இம்மன்னன் குறிக்கப்படுகிறான். மூன்றாம் இராஜராஜன் ஆட்சியின் இறுதிப் பகுதியில் தெலுங்குச்சோழர்கள் சுயேச்சை பெற்றுத் தொண்டை மண்டலம், நெல்லூர், கடப்பை ஆகிய பகுதிகளில் சுதந்திரமாய் ஆட்சி புரியத் தொடங்கினார்கள். இதனைக் குறிக்கும் வகையில் அல்லுந்திக் கரைசனான கண்டகோபாலனின் கல்வெட்டு ஒன்றும் இக்கோயிலில் உள்ளது," என்று கூறுகின்றனர் சி. வீரராகவன் - மங்கையர்கரசி.

(தொடரும்)

-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)