தொடர்கள்
கதை
அரச கட்டளை. அத்தியாயம் 1 மூன்று வார தொடர்கதை - ஆர்.ராஜகோபாலன்.

202292207204463.jpg

‘மன்னர் மகேந்திரர் உயிருக்கு மறுபடியும் ஆபத்தா?’ மதிவாணன் அதிர்ச்சியடைந்தான்.
நேற்று இரவு சத்திரத்தில் இருவர் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தது அரை குறையாக காதில் விழுந்தது. ஒட்டுக் கேட்டதிலிருந்து மதிவாணன் மனது பதை பதைத்துக் கொண்டே இருந்தது. மறைவிடத்திலிருந்து வெளிவந்து அவர்கள் முகத்தைப் பார்க்கத் துடித்தான். ஆயின் அவர்கள் ஆயுதபாணியாய் இருந்து தன்னை கொன்று விட்டாலோ, சிறைப் படுத்தி விட்டாலோ மன்னரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமே என்ற அச்சத்தினால் மறைவிலேயே நின்று கொண்டிருந்தான். அவர்கள் சத்திரத்தை விட்டு வெளியேறுகையில் ஓரளவு முகம் தெரிந்தது. இதற்கு முன்னர் அவர்களைப் பார்த்ததில்லை. இருப்பினும் மறுபடி பார்த்தால் அடையாளம் காண இயலும் என தோன்றியது. அவர்கள் வெளியேறியதன் பின்னரே மதிவாணனால் வெளி வர முடிந்தது.

அவன் மனது ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தது. அப்போது அவன் தந்தை ஆதித்தியன், மன்னர் மகேந்திரருக்கு மெய்க் காப்பாளராய் பணி புரிந்து வந்தார். அரசர் அவரை வெகுவாக நேசித்தார். அரசிக்கும் அவர்பால் மிக்க மதிப்பும் இருந்தது. அவரை அரச குடும்பத்தில் ஒருவராக பாவித்தனர். அரசி தாய் வீடு சென்றாலும் ஆதித்தியரையும் அரசர் காவலுக்கு அனுப்பி வைப்பார். அரண்மனையில் எங்கும் தங்கு தடையின்றி செல்லும் உரிமை அவருக்கு வழங்கப் பட்டிருந்தது. இதனால் மதிவாணன் குடும்பமே பலராலும் மரியாதையுடனும், பொறாமையுடனும் பார்க்கப் பட்டது.
ஐந்தாண்டுகளுக்கு முன் அன்று ஒரு ஒற்றர் தலைவர் தந்தையை வீட்டில் சந்தித்தது நினைவுக்கு வந்தது. உடனே, ஆதித்தியர் தன் மனைவியிடம் ஏதோ ரகசியமாகப் பேசி விட்டு அவசரமாக அரண்மனை சென்று விட்டார். அதன் பின்னர் மதிவாணன் தந்தையைக் கண்டது ஒரு பிணமாகத்தான். மன்னரைக் கொல்ல நடந்த சதியில் இருவர் அரண்மனையுள் புகுந்து விட்டதாயும் அவர்களுடன் போராடி மன்னரைக் காப்பாற்றும் கடமையில் தன் தந்தை வீர மரணம் அடைந்ததாகவும் மதிவாணன் உணர்ந்தான். அவருடன் அரசரின் ஒரே மகனும் இறந்து விட்டதாகவும் தெரிய வந்தது. அரண்மனையே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது.
மன்னர் தன்னை அரவணைத்து, “மதிவாணா, நீ தந்தையை இழந்தாய். நான் ஓர் மகனை இழந்து துயரத்தில் மூழ்கியுள்ளேன். இனி நீயும் என் மகன் போல், நான் உனக்கு தந்தை போலும் ஆவோம். இன்று முதல் உன்னையும் என் ஒற்றர் கூட்டத்தில் ஒருவனாக நியமிக்கிறேன். உனக்கு அதற்கு வேண்டிய பயிற்சி அளிக்கப்படும். இருப்பினும் நேரடியாக என்னையோ அரசியையோ அரண்மனையில் சந்திக்க முயலாதே. உன் தந்தை கொன்ற சதிகாரர்கள் கூட்டம் உன்னையும் கொல்லக் கூடும். கவனமாயிரு” என்று கூறிய வார்த்தைகள் இன்றும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஒற்றுத்தொழிலில் அரண்மனைக்கு செல்லும் ஓர் ரகசிய சுரங்கப் பாதை பற்றிக் கேள்விப் பட்டிருந்தான். இதுநாள் வரை மதிவாணன் அச்சுரங்கப் பாதையை உபயோகித்ததில்லை. இன்று அரசரின் உயிருக்கே ஆபத்து என்பதால் அந்த ரகசிய பாதை மூலம் அரண்மனை அடைய தீர்மானித்தான்.
அவன் அரண்மனைக்குள் நுழைந்தபோது நேரம் ஏறக்குறைய நடு நிசியை நெருங்கிக் கொண்டிருந்தது. அரண்மனை நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது. காவலர், சேவகர் எவருமில்லை. மதிவாணனுக்கு ஒரே ஆச்சரியம். மன்னர் ஊரிலில்லை போலும் என எண்ணி சுற்று முற்றும் பார்வையை ஓட்டினான். யாரோ வரும் சப்தம் கேட்டு சீலை பின் மறைந்து நின்றான். திடீரென ஒரு அறைக்கதவு திறக்க மன்னர் வெளிவரக் கண்டான். அவரைக் கண்ட ஆச்சரியத்திலிருந்து அவன் மீள்வதற்குள் மன்னர் வேறு ஒரு அறைக்குள் நுழைந்துவிட்டார். மதிவாணன் தொடரத்தான் நினைத்தான். அதற்குள் யாரோ இருவர் வரும் காலடி சப்தம் கேட்டு மறுபடி மறைந்து கவனித்தான். அவர்கள் அருகில் நெருங்கியதும் இவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவில்லை. சத்திரத்தில் கண்ட இருவரும் நீண்ட கத்திகளுடன் விரைந்து வந்து அரசர் வெளியேறிய அறைக்குள் சப்தமின்றி நுழைந்தனர். மதிவாணன் தாவி வெளி வந்து அந்த அறைக்கதவைத் வெளியே தாளிட்டு விட்டு அரசர் சென்ற அறைக்கு விரைந்தான். அவனைக் கண்டு அரசர் திகைத்து விட்டார்.


“மதிவாணா, நீ எப்படி? இங்கே இந்தநேரத்தில்??”


“அரசே! உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. சதிகாரர்களை நான் அடுத்த அறையில் வைத்து தாளிட்டு விட்டேன். உடனே வாருங்கள். காவலர்களைக் கூப்பிட்டு அவர்களை சிறை செய்யுங்கள். நான் உங்களுக்கு முழு விவரமும் பின்னர் உரைக்கிறேன்” என்றான் மதிவாணன்.


இருவரும் அடுத்த அறைக்கு விரைந்தனர். அரசர் தாள்நீக்கி கதவைத் திறந்தார்.
அங்கே அரசுக் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் அரசி வெட்டுண்டு இறந்து கிடந்தார். அருகே வாளுடன் நின்ற இரு சதிகாரர்களும் அரசரையும், மதிவாணனையும் எதிர்பார்க்க வில்லை என்பது தெரிந்தது. இருப்பினும், சுதாரித்துக் கொண்டு, வாள்களை தரையில் போட்டு விட்டு, அரசரை வணங்கி நின்றனர்.
அரசர் மதிவாணனை நோக்க அவன் சத்திரத்தில் தான் ஒட்டுக் கேட்டதையும், அதன் பின்னர் அரண்மனை வந்ததையும் விரிவாக உரைத்தான்.

“நல்லது மதிவாணா. உன் ஒற்று வேலையை செவ்வனே செய்து முடித்தாய். பாராட்டுக்கள்! என்னைக் கொல்ல நடந்த சதியில் அரசி துரதிருஷ்ட வசமாக உயிரிழந்தாள் என நாடு நாளைக் காலை அறிய வரும். உன் தந்தையைப் போலவே தக்க சமயத்தே வந்து என்னைக் காப்பாற்றினாய் என்றும் பறை அறையப்படும். வாழ்த்துக்கள்.”


“நன்றி மன்னா! என் உயிரையும் கொடுத்தும் உங்களைக் காக்க நான் கடமைப் பட்டிருக்கிறேன்”
“நன்கு அறிவேன் மதிவாணா! இருப்பினும் அதற்கு இவ்வளவு விரைவில் ஒரு சந்தர்ப்பம் நேரும் என நான் எதிர்பார்க்க வில்லை. நீ செய்த ஒரு சிறு தவறு எனக்கு வேறு வழியின்றிச் செய்து விட்டது.”


“நீங்கள் உரைப்பது புரியவில்லை மன்னா!”


“புரியும்படி சொல்கிறேன், கேள். நீ இங்கு வந்திருக்கக் கூடாது. உன் தந்தை ஓர் நாள் அரசியுடன் மிக நெருக்கமாக இருந்ததைப் பார்த்து மனம் ஒடிந்து விட்டேன். விசாரித்ததில் அரசியின் மகன் உன் தந்தைக்கு பிறந்தவன் என அறிந்தேன். அவர்கள் இருவரையும் என் கையாலேயே இல்லாது செய்து விட்டேன். அன்றே அரசியையும் கொன்றிருக்கக் கூடும். ஆயின் உன் தந்தையையும் அரசியையும் சம்பந்தப் படுத்தி ஏதேனும் வீண் பேச்சு எழுந்தால் எனக்கு அது கேவலமாகுமென எண்ணி விட்டு வைத்தேன். காதலனையும், மகனையும் இழந்ததிலிருந்து அரசியின் புத்தி சுவாதீனத்தில் இல்லாமல் இருக்கிறது. அவள் நான் தான் இருவரையும் கொன்றேன் என ஊகித்து விட்டாள். நாளாக ஆக அவள் இருப்பதே எனக்கு இடர்ப்பாடு என உணர்ந்தேன். அவளைக் கொல்ல இவ்விருவரையும் ஏற்பாடு செய்தேன். வெளியுலகைப் பொறுத்த வரை என்னைக் கொல்ல நடந்த சதியில் அரசி காலமானாள் என்றே அறியப்படும். ஆயின் இவர்களின் கவனக் குறைவால் நீ இங்கு வந்துசேர்ந்தாய். அதுவும் நன்மைக்கே. உன் தந்தையைப்போல் நீயும் உன் உயிர் தந்து என்னைக் காப்பாற்றியதாக நம் நாடு முழுதும் நாளை பறையொலிக்கும். வீர வணக்கம் உன் உடலுக்கு செலுத்தப்படும். உன் ஒற்று வேலையை மெச்சினேன். ஒரு நல்ல ஒற்றனை கனத்த இதயத்துடன் அனுப்பி வைக்கிறேன் மகனே! சென்று வா!!” என்றார் மன்னர்.

(இன்னும் இரண்டு வாரங்கள்)