மணி ஐந்தாகிவிட்டது. ஜெகன் அவசர, அவசரமாக தன் மகன் சுப்பு என்கிற சுப்பிரமணி படிக்கும் பள்ளிக்குச் சென்றான். பள்ளியில் வந்து பார்த்தால் சுப்புவைக் காணவில்லை. அதிர்ந்து போனான்.
வாட்ச்மேனைக் கேட்டால் பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறான். பிரின்ஸ்பால் மேடத்திடம் சென்றான். ’நீங்க ரெகுலரா வந்து கூட்டிட்டு போறவங்க தானே, வர லேட் ஆகும்’ன்னு ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்ல? நீங்க பொறுப்பு இல்லாம இருந்துட்டு, எங்க கிட்ட வந்து கத்தாதிங்க.’ன்னு சொல்லி விவாத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைச்சாங்க.
சுப்பு அந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.அவனுக்கு நாலு மணிக்கே பள்ளி முடிஞ்சுடும். தினமும் மாலை நாலு மணிக்கு பள்ளியின் வாசலில் போய் நின்று, அவனை அழைத்து வந்து அவனது பக்கத்து வீட்டில உட்கார வைச்சுட்டு, திரும்பவும் தன்னுடைய பெட்டி கடைக்கு வந்து விடுவான் ஜகன். அவன் மனைவி ஒரு தனியார் பள்ளியில் உதவிப்பணியாளராக வேலை செய்கிறாள்.பணி முடிந்து திரும்ப மணி 6.30 ஆகிவிடும்.அதனால்தான் இந்த ஏற்பாடு.
இன்று பிற்பகல் பெட்டிக் கடைக்கு அருகில் நடந்த அரசியல் கூட்டம் கலைந்து செல்ல வெகு நேரம் ஆச்சு. அதைக் கடந்து இந்த பள்ளிக்கு வருவதற்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. போதாக்குறைக்கு தன்னுடைய டூவீலர் சாவியை எங்கோ வைத்து விட்டு,அதைத் தேடி கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆயிடுத்து.
சுப்புவோட நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் போய்ப் பார்த்தான். விவரம் ஒன்றும் கிடைக்கவில்லை.அப்பாவிற்கு ஃபோன் பண்ணி கேட்கலாம் என்றால் அவரிடம் போனும் இல்லை. அப்படி போன் இருந்தாலும் அவருக்கு காது கேட்காது. மேலும் இன்று காலைதான் அவர் மாத்திரைக்கு காசு கேட்டார். இவன் ’இல்லை’ என்று கத்தி விட்டு வந்து விட்டான். இப்பொழுது அவர் முகத்தில் போய் எப்படி நிற்பது? அவனுக்கு அவமானமாக இருந்தது. அப்பாவிடம் ‘அப்படி நடந்து கொண்டு இருக்கக் கூடாது ‘என்று மனமாற உணர்ந்தான்.
வீட்டில்
அதற்குள் அவன் மனைவி கவிதா வீட்டுக்கு வந்து விட்டாள். வழக்கம் போல் பக்கத்து வீட்டுக்கு ’சுப்பு, சுப்பு’ன்னு கூப்பிட்டுக் கொண்டே போன அவளுக்கு ஏமாற்றம்தான் மிச்சமாச்சு.
’குழந்தை இங்கு இன்னும் வரலாம்மா’ என்ற ஒற்றை வரியுடன் கதவை மூடிகொண்டாள் பக்கத்து வீட்டுக்காரி. அவளுக்கு என்ன கவலையோ?
தன்னுடைய கணவனுக்கு போன் செய்தாள். அவன் விவரத்தை சொன்னான். ‘நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத. எங்க இருக்கான் பார்த்து கூட்டிட்டு வரேன். நீ வீட்டுக்கு போ’ என்று ஒரு வழியா சமாதானப்படுத்தினான்.பழக்கமான எல்லா இடங்களிலும் தேடினான். எங்குமே அவனை பார்க்க முடியவில்லை.
திரும்பவும், ஒரு வேளை தாத்தா வீட்டிற்கு போய் இருப்பானோ?ன்னு நெனச்சான். ஆனால் இதுவரை தாத்தா வீட்டிற்கு அவன அழைத்துப் போனதில்லையே. இரண்டு தெரு தாண்டிதான் இருக்கு என்றாலும் பேரப் பிள்ளையோட அவர் ஒரு நாளும் விளையாடினதே இல்ல.இவன் கூட்டிட்டு போனாதானே?
எனவே அங்கு கண்டிப்பாக போயிருக்க மாட்டான் என்று நினைத்தான். இறுதியாக பார்த்து விட்டுதான் வருவோமே’ன்னு முடிவு பண்ணி அப்பா வீட்டு வாசலில் போய் நின்றான்.
’சுப்பு சுப்பு’ என்று கூப்பிட்டான். யாரும் வரவில்லை. கதவைத் தட்டினான். அப்பா வந்து ஒரு முறை அவனை முறைத்தார்.இவனுக்கு காரணம் புரியவில்லை.ஒரு வேளை காலை சண்டையின் நீட்சியாக இருக்குமோ? அவன் மனதில் வேதனை அதிகமானது.உள்ளே ‘வா’என்றார்.
’சுப்புவைக் காணவில்லை’ என்று படபடப்புடன் சொன்னான். அதற்குள் அவர் பிளாஸ்கில் போட்டு வைத்திருந்த காபியை ஒரு டம்ளரில் ஊற்றி அவனுக்கு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு அவனுடைய அப்பா அவனுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றார். அங்கே சுப்பு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான்.
’அப்பா ரொம்ப தேங்க்ஸ் என்ன மன்னிச்சிடுங்க.’ என்று சொன்னவன், ’உங்களுக்கு எப்படி தெரியும்? நான் பள்ளிக்கு போக லேட்டாகும்’ன்னு அப்பாவிடம் கேட்டான்.
அதற்கு அவனது அப்பா ‘தினமும் நான் அந்தப் பள்ளியின் பக்கத்தில் உள்ள பார்க்குக்கு மூன்று மணிக்கெல்லாம் போயிடுவேன்.நான்கு மணிக்கு பள்ளியிலிருந்து நீ வீட்டுக்கு அழைத்துச் செல்வதை தினமும் பார்ப்பேன். அப்புறம்தான் வீடு திரும்புவேன். அப்படித்தான் இன்னிக்கும் போனேன்.இன்னிக்கு நீ வரவில்லை. எனவே வெளியே நின்று கொண்டிருந்த நான் அவனை அழைத்து வந்து நம்முடைய வீட்டில் பிஸ்கட்டும் பாலும் கொடுத்து படுக்க வைத்தேன்’என்று சொல்லி முடித்தார்.ஜகனுக்கு மனதில் குற்ற உணர்வு ஏற்பட்டது.
’சரி.அவன் எழுந்துட்டான்.வீட்டுக்கு கூட்டிட்டு போ. கவிதாவுக்கு போன் பண்னி சொல்லு. வ்வைட் பண்ணிட்டு இருப்பா’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.’இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்’ன்னு சொன்ன சுப்புவிடம் ‘அம்மா கவலைப்பட்டுட்டு இருப்பா? என்று சொல்லியபடி புறப்பட்டான் ஜகன்.
வழியெல்லாம் ஜகன் கேட்டது தாத்தா புராணம்தான்.ஜகனின் விழிகளின் ஓரம் அப்பாவை நினைத்து கண்ணீர் கசிந்தது.
Leave a comment
Upload