தொடர்கள்
ஆன்மீகம்
வல்வினை நீக்கி, வரும் வினை போக்கும் ஸ்கந்த சஷ்டி!! - சுந்தரமைந்தன்.

2022922071138378.jpeg

வல்வினை நீக்கி, வரும் வினை போக்கும் ஸ்கந்த சஷ்டி!!சுந்தரமைந்தன்.
“பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா!”

கந்தப் பெருமான் சூரனை சம்ஹாரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரதமாகும்.
முருகப் பெருமானை வழிபடக் கூடிய மிக அற்புதமான விரதங்களில் ஒன்றான ஸ்கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுசரிக்கப்படுகின்றது. முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்ட ஐந்து நாட்களையும் நாம் ஸ்கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். ஆறாவது நாள் சூரசம்ஹாரமும், ஏழாவது நாள் முருகன் - தெய்வானை திருக்கல்யாண வைபமும் நடக்கிறது.
ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலையிலும், மற்றும் முருகன் குடி கொண்டுள்ள எல்லா கோயில்களிலும் ஸ்கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

புராணத்தில் ஸ்கந்த சஷ்டி விரதம்:
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால்"ஒப்பரும் விரதம்" என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.
சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் கொடுமைகளைத் தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையைக் களைய, தேவர்களைக் காத்தருள தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்து ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அந்த ஆறு குழந்தைகளை வளர்க்க மகாவிஷ்ணு ஆறு கார்த்திகை பெண்களை நியமித்தார். கார்த்திகைப் பெண்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் குழந்தைகளைக் காணச் சிவனும், பார்வதியும் சரவணப் பொய்கைக்குச் சென்றிருந்த போது பார்வதிதேவி அங்குள்ள அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும் ஆறு முகங்கள், மற்றும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே உடலைக் கொண்ட குழந்தையாக மாறியது. இதனால் முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற பெயரும் ஏற்பட்டது.
முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிடும் ஆறாம் நாளில் வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, ‘நான்’ என்னும் அகங்காரம் சேவலாகவும், ‘எனது’ என்னும் அகங்காரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கியும், மயிலை வாகனமாக்கியும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டார்.
இந்நாளே ஸ்கந்த சஷ்டியாகக் கொண்டாடப்படுகிறது. என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, ஸ்கந்த சஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்கந்த சஷ்டி விரத முறை :
ஸ்கந்த சஷ்டி விரதம் இருக்கும் ஆறு நாட்களிலும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றைக் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது. இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம் ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் முருகப் பெருமானை எந்த நேரமும் நினைத்து இருக்க வேண்டுமே தவிர, பட்டினி இருந்து தான் வழிபட வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் உடல் வலிமைக்கு ஏற்றவாறு உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம்.
பால தேவராயன சுவாமிகள் பாடிய ‘ஸ்கந்த சஷ்டி கவசம்’ பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியைத் தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது
விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நீராடி, திருநீறணிந்து முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து முறைப்படி பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று வரலாம். ஸ்கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு முருகப்பெருமானது அருள் கிட்டும்.

ஸ்கந்த சஷ்டி விரதத்தின் பலன்:
'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழியின் உண்மையான விளக்கமே சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்னும் பை சிறப்பாக மாறும் என்பதுதான். பெண்கள் சஷ்டியில் விரதமிருந்தால் அவர்களின் அகமென்னும் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதும் ஐதீகம்.
குடும்பத்தில் ஆண்கள் தங்கள் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கடன் தொல்லை நீங்கவும். திருமணமான பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் குழந்தை வரம் வேண்டியும், கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மாணவர்கள் கல்விக்காகவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதனால் விரும்பிய பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

திருச்செந்தூரில் ஸ்கந்த சஷ்டி:
சென்ற இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஸ்கந்த சஷ்டி விழாவும், அதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியும் மிக எளிமையான முறையில் பக்தர்கள் இன்றி திருச்செந்தூர் கடற்கரையில் நடத்தப்பட்டது. இதனால் சூரசம்ஹார நிகழ்வினை பக்தர்கள் டிவி நேரலைகளில் மட்டுமே கண்டு மகிழ்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் வழக்கமான உற்சாகத்துடன் மிக சிறப்பான முறையில் ஸ்கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. பக்தர்கள் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்: அக்டோபர் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)
ஸ்கந்த சஷ்டி விரதம் முடிவு (சூரசம்ஹாரம்): அக்டோபர் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)
முருகன் திருக்கல்யாணம் : அக்டோபர் 31 ஆம் தேதி (திங்கட்கிழமை)
சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூரில் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாகச் செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதைக் காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணலாம்.
“கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்வேல்
முருகா வெற்றி வேல் முருகா அரோகரா!!”