தொடர்கள்
பொது
பறவைகள் பலவிதம் - ஒப்பிலி

விகடகவியின் அனைத்து வாசகர்களுக்கும் அன்பான வணக்கங்கள். பறவைகள் பலவிதம் தொடர் நம்மை சுற்றியுள்ள, நாம் பார்த்திருக்கக் கூடிய பறவை இனங்களைப் பற்றிய ஒரு அறிமுகம். இந்த தொடர் இப்போது எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணம், நவம்பர், டிசம்பர் மாதங்கள் பறவைகள் வலசை (migration) வரும் காலம். குளிர் அதிகமுள்ள பகுதியிலிருந்து மிதமான குளிருள்ள தமிழகம் போன்ற இடங்களுக்கு தங்களின் இனவிருத்திக்கு வருவதே இந்த வலசையின் முக்கிய காரணம்.

ஒரு பாடலில் உள்ள கர்நாடக சங்கீதத்தை கண்டறியும் சந்தோஷத்திற்கு சமம், பறவை இனத்தை புரிந்து கொள்வது.

அடுத்த முறை ஒரு பறவையை பார்க்கும் போது அது எந்த பறவை ? எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதே இந்த தொடரின் நோக்கம்.

2024111323315150.jpeg

உண்ணிக்கொக்கு

நம்மில் பலரும் வயல்வெளிகளில் திரியும் மாடுகள் மீது வெள்ளை கொக்குகளை கண்டிருப்போம். கரேலென்று ஆடி அசைந்து செல்லும் எருமை மாடுகளின் முதுகில் ஹாயாக, அதுவும் மிக வெண்மையான நிறத்தில் இருக்கும். பார்ப்பவர்களுக்கு ஒரு கருப்பு வெள்ளை உருவம் செல்வது போல் தோன்றும். அதன் பெயர் உண்ணிக்கொக்கு. மாட்டின் முதுகில் உள்ள சிறு பூச்சிகளையும் உண்ணிகளையும் உண்பதால் இந்தப் பெயர். ஆங்கிலத்தில் இதற்கு cattle egret என்று பெயர். பொதுவாக நீர் நிலைகள் அருகில் உள்ள வயல்களில் காணப்படும். பயிர் செய்வதற்கு முன், உழுது விடப்பட்ட நீர் பாய்ச்சிய நிலங்களில் புழுக்கள், பூச்சிகளை உண்டு வாழக் கூடியவை.
சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கிண்டி தேசிய பூங்கா போன்ற இடங்களில் காணலாம்.
பள்ளிக்கரணையில் இந்தப் பறவை கூடு கட்டி குஞ்சு பொறித்து இன விருத்தி செய்வதை கடந்த பத்து வருடங்களாக வனத்துறை பதிவு செய்துள்ளது. இவை, இனப்பெருக்கம் செய்து பின் எங்கு செல்கின்றன என்பது குறித்த ஆராய்ச்சி இதுவரை இல்லை என்கின்றனர் வனத்துறையினர்.
அடுத்த முறை இந்தப் பறவைகளை பார்க்கும் போது சூழலியலில் இப்பறவைகளின் பங்களிப்பை உணர்வோம்.